Tuesday, September 23, 2008

அலங்காரம்-09/10: முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?

முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்! எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்? அது எல்லாருக்கும் தெரியுமா? அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்! அருணகிரியே சொல்றாரு! முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு, ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு! பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்
அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

மேலோட்டமான பொருள்:
சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!
முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை! சும்மா இருத்தல்! அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே! என்ன ஆச்சரியமோ?

பாட்டைக் கொஞ்சமாப் பிரிச்சி மேயலாம்! இது தத்துவங்கள் நெறைஞ்ச பாட்டு! அதுனால கொஞ்சம் லைட்டாப் பிரிச்சி மேயறேன்! :)
மீதியை முருக பக்தர்கள், பின்னூட்டத்தில் விளக்கேற்றி விளக்குவார்கள்!

ஒளியில் விளைந்த = ஒளியில் என்ன விளையும்? ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!
ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்? செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!
செடிகளை விலங்குகள் உண்கின்றன!
விலங்குகளை மனிதன் உண்கிறான்!
மனிதனை?....
மனிதனை எது உண்கிறது?
அகங்காரம் உண்கிறது! ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)

உயர் ஞான பூதரத்து = உயர்ந்த ஞானமாகிய மலை! ஒளியில் விளைந்த ஞான மலை!
மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! ஆத்ம ஒளி - அதில் எழும்பும் ஞான மலை!

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றான் பாரதி!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

இன்னும் ஈசியாப் புரிஞ்சக்கணுமா? எப்பவாச்சும் கொஞ்ச நாள் ஏதோ ஒரு சோகத்தில் இருந்து விட்டு, திடீர்-னு உங்களுக்கே ஒரு தெளிவு பிறந்திருக்கும் அல்லவா?
மனதில் தெளிவு-ன்னு ஒன்னு, விளைய விளைய, சிந்தனை மேலே மேலே எழும்புது!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

உச்சியின் மேல் = அந்த ஞான மலையின் உச்சியில் மேல் என்ன இருக்கு?
அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை = அளி-ன்னா கருணை! தமிழ் மொழியில் சொல்லும் பேரும் எப்படியெல்லாம் இருக்குன்னு பாருங்க!
கருணை இருந்தாத் தானே அளிக்க முடியும்? அதான் அளி-ன்னே கருணைக்குப் பேர் வச்சிருக்காங்க பண்டைத் தமிழ்ச் சான்றோர்!

இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!
நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!

எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்! ஆனா கொஞ்ச நாள் தான்! பாரம் தாங்காம, கொஞ்ச நாள்-லயே மலை மீதிருந்து, அதல பாதாளத்திற்கு விழுந்துடறாங்க! அப்போது சாதாரண மக்களே, இந்த முன்னாள் சாதகர்களைக் கைத்தூக்கி விட வேண்டி இருக்கு! :)

ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
தான் நரகம் புகினும் பரவாயில்லை! அன்பர்களுக்கு மோட்சம் கிட்டினால் போதும் என்ற பரம கருணை! கேழில் பரங்கருணை! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் "கருணை"!
காரேய்க் கருணை இராமானுசா என்று அதான் கருணையை முன் வைத்து அவரைச் சொன்னார்கள்! பரம காருண்ய காரணத்தால் தான் யதி-ராசர், துறவிக்கெல்லாம் அரசர் என்று போற்றினார்கள்! அருட் பெரும் ஆத்ம சோதியில் தனிப் பெருங் கருணை இருக்கணும் என்று வள்ளலார் எம்புட்டு நுட்பமாச் சொல்லி இருக்காரு பாருங்க!

கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!
ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி! என்ன தேன்?

சிவானந்தம் என்னும் தேன்!
அம்பிகானந்தம் என்னும் தேன்!
முருகானந்தம் என்னும் தேன்!
மாலானந்தம் என்னும் தேன்!
அச்சுதானந்தம் என்னும் தேன்!
அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்! கருணையே சிவம்! அன்பே சிவம்! காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!

அநாதி இல் வெளியில் விளைந்த = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு! முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos. அம்பலவாணர் நடமிடும் வெளி! அங்கு என்ன தான் விளையும்?

வெறும் பாழை = வெற்றிடம் தான் விளையும்! அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum! Volume of space that is empty of matter!
Quantum Theory உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!

பாழ் = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்! நாதம் என்பார்கள்! நாத விந்து கலாதீ நமோ நம! ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?

ஹிஹி! இதுக்கு மேலச் சொன்னா, இதைப் படிச்சிக்கிட்டு வர எங்க அம்மா பயந்துருவாங்க! நிப்பாட்டிக்கறேன்! :) நீங்க பின்னூட்டத்தில் தொடருங்க! நம்ம பையன் மட்டும் இதப் பத்திப் பேசலை; ஜீவா பேசறாரு, குமரன் பேசறாரு, ராகவன் பேசறாரு, மெளலி பேசறாரு, பாலாஜி பேசறாரு, அம்பி பேசறாரு-ன்னு பார்த்தாங்கன்னா, அவங்க பயம் போயிடும்! :))

வெறும் தனியை = "ஒன்றும்" இல்லாத என்பதில் "ஒன்று" இருக்குன்னு சொன்னேன்-ல? அந்த ஒன்றைத் தான் வெறும் தனி என்கிறார் அருணகிரி!
அந்த வெறும் தனி தான் பிரணவம்! அது தான் ஓம்!

தெளிய விளம்பியவா = அந்த ஓங்காரத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தவனே!
முகம் ஆறு உடை தேசிகனே = ஆறு முகங்களை உடைய தேசிகனே (குருவே)! அருணகிரிக்குச் சொன்னது போல், அடியோங்களுக்கும், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

(குறிப்பு: இந்தத் தேசிகன் என்னும் சொல்லையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அருணகிரியின் எண்ணப் போக்கையும், ஆழ் மனச் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள இதுவும் உதவும்! மாதவிப் பந்தலில் பின்னர் பார்ப்போம்!)



தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு! கூற அற்றோ?
வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!




மேலோட்டமான பொருள்:
தேன்/பாகு என்றெல்லாம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு தெய்வ-வள்ளி மொழி இனிக்கிறது! தலைவன் முருகன்! அவன் முன்பொரு நாள், எனக்கு உபதேசித்த "ஒன்னு" இருக்கு! அதைக் கூற முடியுமோ? வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்!
அது வானம் இல்லை, வாயு இல்லை! தீ இல்லை! நீர் இல்லை! மண்ணும் இல்லை!
தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

என்ன மக்களே, அருணகிரியார் கொடுத்த க்ளூ ஏதாச்சும் புரிஞ்சிச்சா? இந்தப் பாட்டைப் பிரிச்சி மேய்ஞ்சேன்னா, என்னை மேய்ஞ்சிருவாய்ங்க! :)
அருணகிரி என்னமா சஸ்பென்ஸ் கொடுக்கறாரு! சான்ஸே இல்லை! அருணகிரி முதலில் பக்தர்! முடிவிலும் பக்தர்! ஆனால் அவர் தெளிவுக்கு, அவரைச் சித்தர் என்று தாராளமாகக் கொண்டாடலாம்! அம்புட்டு நுட்பம்!

தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி கோன்! = நல்லாப் பாருங்க தெய்வ வள்ளி என்னும் சொற்செட்டுகளை!
இதுக்குச் சில பேரு தெய்வத்தன்மை பொருந்திய வள்ளி-ன்னு மட்டும் பொருள் எடுத்துப்பாய்ங்க! ஆனா தெய்வ வள்ளி-ன்னா, தெய்வானை-வள்ளி! அப்படியும் பொருள் எடுத்துக்கலாம்! பாருங்க அப்பவே அருணகிரியார் ஆடும் பதிவுலக விளையாட்டை! :)

அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு = அன்று-ன்னா என்று? என்னிக்கி தெய்வ-வள்ளி கோன் அவருக்கு உபதேசித்தான்? அருணகிரி வரலாறு அறிந்தவர்கள் அறியத் தர வேணும்!

கூறவற்றோ = சொல்லத் தான் முடியுமா?

வான் அன்று! கால்(காற்று) அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று! = ஆக பஞ்ச பூதங்களும் இல்லை!
கால் கொண்டு மெள்ளமா நடக்கலாம், வேகமா ஓடலாம், குதிக்கலாம், இன்னும் பல...அதான் காற்றுக்கும் கால் என்று பெயர்! தென்றல் காற்றைச் சிறு கால் அரும்பத் தீ அரும்பும் என்று சொல்லும் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்! தமிழ் மொழியின் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்களின் அருமையே அருமை!

தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே! = தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

இப்படி எதுவுமே இல்லை இல்லை-ன்னா, அப்ப என்ன தான்-யா அந்த உபதேசம்?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு" செவி மீதிலும் பகர்-ன்னு, அப்படி என்னய்யா சொல்லிட்டான் எங்க முருகன்?
முருகன் இப்படியெல்லாம் கன்னா பின்னா-ன்னு க்ளூ கொடுத்தா பொருள் சொன்னான்?
அருணகிரியார் மட்டும் ஏன் இப்படிப் பண்ணுறாரு? ரொம்ப தான் லொள்ளு பண்ணறாரோ? :)

அடுத்த செவ்வாயில் அடுத்த அலங்காரத்தில் இதைச் சந்திப்போம்! சிந்திப்போம்!

Wednesday, September 17, 2008

அலங்காரம்-07/08: முருகன், வள்ளி, தினை மாவு - எதில் சுவை அதிகம்?

பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்! ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே! அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி? பார்க்கலாம் வாங்க!

பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)


மேலோட்டமான பொருள்:
பசுமையான தினைப் புனம். அதில் தினைக் கதிரைக் காவல் காக்கிறாள் வள்ளி! அவள் திருமார்பினை விரும்புகிறான் குமரன்!
மெய்யன்பு ஒன்றினால் மட்டும் அவனிடம் ஒன்றினால்...ஆனந்தம் அரும்பும்!

அந்த ஆனந்தத்தை ஒரு முறை ருசித்து விட்டால், கரும்பு துவர்க்கும், தேன் புளிக்கும்! இவையெல்லாம் கசந்து போய்,
கந்தன் களிப்பிலே, முருகன் முனைப்பிலே-ன்னு அந்த எண்ணம் ஒன்றே போதும்! அதுவே தித்திக்கும்! என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

இப்போ பிரிச்சி மேயலாமா?
ஹிஹி! மொத கேள்வி! சில பேர் வெளிப்படையாக் கேட்டுருவீங்க! சிலர் மனசுக்குள்ளாற மட்டும் யோசிச்சிப்பீங்க!
சிலர் சாமிப் பாட்டாச்சே-ன்னு கண்டும் காணாமப் போயிடுவீங்க! :)
அது ஏன் முருகன் வள்ளி கொங்கையை (திருமார்பை) விரும்பனும்? ஏன் அருணகிரி இப்படி எல்லாம் பாடுறாரு?

இது முருகன் நிஜமாலுமே விரும்புவதா?
இல்லை யாரையோ மனசுல வச்சிக்கிட்டு, நைசா தன் சொந்தக் கருத்தை அருணகிரி எழுதிட்டாரா? (அடியேன் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு நம் அன்பர்களால் சொல்லப்படுவது உண்டு! :))

இல்லை, அருணகிரி ஆண் என்பதால், இப்படி ஆணாதிக்கமா எழுதிட்டாரா? இல்லை, இது அக்கால புலவர்கள் வழக்கமா? இதையே ஒரு பெண் கவிஞர் எழுத முடியுமா?
இது கம்ப ரசமா? கந்த ரசமா? காதல் ரசமா? இல்லை வி-ரசமா? :)
சொல்லுங்க பார்ப்போம்!

கொங்கை என்ற சொல் கம்பராமாயணத்தில் எங்கெல்லாம் வருதுன்னு CTRL+F செஞ்சி, பேரறிஞர் அண்ணா அவர்கள், கம்ப ரசம்-னு ஒரு தொடர் கட்டுரை எழுதினாரு! "கம்பனின் ஆபாச இலக்கியம்! கம்ப ரசம் டோஸ் நம்பர்-1, டோஸ் நம்பர்-10" ன்னு அவர் கொளுத்திப் போட்டதுல, அப்பவே சும்மாப் பிச்சிக்கிட்டுப் போச்சி! :)

மென்மையே உருவான தமிழ்த் தென்றல் திரு.வி.க,  மற்றும் டாக்டர் மு.வ,  டி.கே.சி போன்ற தமிழறிஞர்களும்,  இதர சமய அறிஞர்களும், அதற்கான உண்மையான விளக்கம் எல்லாம் தந்தாங்க!
ஆனா அவங்க சொன்னதெல்லாம் அப்போது எடுபட்டு இருக்குமா-ன்னு உங்களுக்கே தெரியும்! :)  கொளூத்திப் போட்டது போட்டது தான்!  இந்த நிகழ்வை, இப்போ நம்ம பதிவுலகப் பார்வையில் இருந்தும் ஒப்பிட்டுப் பார்த்து கொள்கிறேன்! :)


பெரும் பைம் புனத்தினுள் = பெரிய பசுமையான தினைப் புனத்தில்
சிற்றேனல் = சிறு + ஏனல்; ஏனல்-னா தினைக் கதிர்!
தினைக் கதிர் யாராச்சும் பார்த்து இருக்கீயளா? தினை மாவு யாராச்சும் சாப்பிட்டு இருக்கீயளா? இல்லீன்னா அதெல்லாம் கிராமத்து சமாச்சாரம்-ன்னு சாய்ஸ்-ல விட்டாச்சா?

தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை!
குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்! இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாய்ங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது! :)

பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.  மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல!
தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி! 
மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!

தினை மாவுருண்டை செய்வது எப்படி?
தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்!
கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும்.
ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்!
அப்படியே மாவு போல உருட்டி, மாவிளக்காய் முருகனுக்குப் போட்டு, பின்னால சாப்புடலாம்! அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!


காக்கின்ற பேதை = தினைப் புனத்தை காவல் காக்கும் வள்ளி.
கொங்கை விரும்பும் குமரனை = அவள் கொங்கையாகிய திருமார்பை விரும்பும் குமரக் கடவுள்.
மெய் அன்பினால் = உண்மையான (மெய்யான)  அன்பினால்
மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்லச் சிந்தனை செய்ய

அரும்பும் தனி பரமானந்தம் = மனசுக்குள் ஒரு கந்தக் களிப்பு,  பூ மொட்டு விரிவது போல அரும்பும்!  அரும்பு எப்போ மூடி இருந்திச்சின்னும் தெரியாது, எப்போ படீர்-ன்னு விரிஞ்சதுன்னும் தெரியாது!  அது போல இந்தக் கந்தக் களிப்பூ!

தித்தித்தது அறிந்தவன்றோ = அந்தக் கந்த ருசியின் இனிமையை அறியும் போது...
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்று புனித விவிலியம் (பைபிள்) கூறும் அல்லவா! அதே தான் இங்கும்! கந்தன் இனிமையானவன் என்பதை ருசித்துப் பாருங்கள்! அப்போது...

கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து = கரும்பும் துவர்க்கும், தேனும் புளிக்கும்!
அற கைத்ததுவே = இவையெல்லாம் கசந்து போனதுவே! உன் எண்ணம் ஒன்றே தித்திப்பதுவே! உலகச் சுவை எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா, சுர பூபதியே!
திருவரங்கத்து அமுதனார் நூற்றந்தாதியில் சொல்வது போலவே இதைத் தித்தித்து உண்ண வேண்டும்! - என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

தினை மாவு தித்தித்ததுவே!
வள்ளியின் வடிவு தித்தித்ததுவே!
முருகனின் முருகு தித்தித்ததுவே!
அடியேற்கு இன்று தித்தித்ததுவே!


அடுத்த பாட்டு சிறப்பான தமிழோசைப் பாட்டு! அருணகிரி, அப்படியே அள்ளித் தெளிக்கிறார் சந்தத் தமிழை!

சளத்தில் பிணி பட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிர
குளத்தில் குதித்தும் குளித்தும் களித்தும் குடித்தும் வெற்றிக்
களத்தில் செருக்கி கழுது ஆட வேல்தொட்ட காவலனே.

சளத்தில் = கள்ளத்தனமான ஆசையில்
பிணிபட்டு = கட்டுண்டு (பிணிக்கப்பட்டு)
அசட்டுக் க்ரியைக்குள் = மூடத்தனமான செய்கைகள் செய்கிறேன்
தவிக்கும் என்றன் உளத்தில் = தவிக்கின்ற அடியேன் மனதில்
ப்ரமத்தைத் தவிர்ப்பாய் = மயக்கத்தை ஒழிப்பாயாக!

கள்ளத்தனமான ஆசைகள் உள்ளதில் வளர்த்துக் கொள்வதால், தவிப்பு தான் ஏற்படுகிறது! அந்தத் தவிப்பைத் தவிர்க்க பரிகாரம், அது இது-ன்னு அசட்டுத்தனமான செய்கைகளைத் தான் இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன்!
என் பிரமத்தையும் மயக்கத்தையும் போக்குவாயாக! பிமரங் கெட மெய்ப் பொருள் பேசியவா-ன்னு கந்தர் அனுபூதியும் சொல்லும்!

அவுணர் உரத்து - அசுரர்களுடைய மார்பில
உதிரக் குளத்தில் = இரத்தக் களரியில்
குதித்துக் குளித்து = குதித்தும் குளித்தும்
களித்து குடித்து = மகிழ்ந்தும் குடித்தும்

வெற்றிக் களத்தில், செருக்கில் = போரில் வெற்றி பெற்று
கழுது ஆட = பேய்கள் எல்லாம் கூத்தாட
வேல் தொட்ட காவலனே = வேலைத் தொட்ட காவலா...

முருகன் வேலை விடக் கூட இல்லை! சும்மா தொட்டான்!  அவன் தொட்டதற்கே தொட்டனைத்தூறும் என் மனற் கேணி!
திருக்கையால் வேல் தொட்ட காவலா,
திருக்கையால் என்னையும் தொட்டுக் கொள்!
தினமும் என் சிந்தையில் உன்னை இட்டுக் கொள்!

அடுத்து செவ்வாய் சந்திப்போம்!  இப்போது செங்கோடனை வந்திப்போம்!

Monday, September 8, 2008

அலங்காரம்-05/06: முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??

திகில் படங்களைப் பார்த்து இருக்கீங்க தானே? கொடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்டுலேயே, பாதி திகில் வந்து விடும்! நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது? அதே போல அருணகிரியும் சவுண்ட் எஃபெக்ட்டு கொடுக்கறாரு!

பாட்டு முழுதும் வல்லினம் தான்! உடல் சோரி, ரத்தம் கக்க, கூர கட்டாரி, இட்டு வெட்டு-ன்னு ஒரே திகில் தான்!
எதைக் கண்டு திகிலாம்? நம் ஐம்பொறி/ஐம்புலன்களைக் கண்டு தான்! வாங்க பார்க்கலாம்!

ஒட்டார்-னா என்னங்க? ஓட்டு போடறவங்க எல்லாம் ஓட்டார்! பதவிக்கு வந்த பின் ஓட்டார் எல்லாம் ஒட்டார் ஆகி விடுவர்! :)
ஒட்டார் = பகைவர்! ஒட்டாதவங்க! அன்புக்கும் பண்புக்கும் ஒட்டாதவங்க!
எவ்வளவு முயன்று ஒட்ட வைத்தாலும், பகை மனப்பான்மையை மனதில் உடையவர்கள், ஒட்டாமல் வெட்டிக்கிட்டு வருவாங்க!
* வள்ளுவரும் ஒட்டார்-ன்னு எங்கே சொல்றாரு? சொல்லுங்க பார்ப்போம்!

அவிங்களுக்கு, அன்புச் சொல் சொன்னா அது மனத்திலும் ஒட்டாது! அறிவுச் சொல் சொன்னா அது மதியிலும் ஒட்டாது! ஒட்டவே கூடாது என்று முடிவெடுத்து விட்டவனுக்கு எது தான் ஒட்டும்?
அதே போல, நம் ஐம்புலன்களும், நமக்கு ஒட்டார் ஆயிடுதுங்களாம்! இறைவனோடு ஒட்ட விடாமல், நம்மை வேறு எது எதோடவோ எல்லாம் ஒட்ட வைக்குதுங்களாம்!

என்ன செய்யலாம் இந்த ஒட்டாரை? வெட்டி வீழ்த்திடலாமா?
பகைவர்-ன்னா அவர்களைத் தயவு தாட்சண்ணியம் இல்லாம அழிக்கணும் தானே? அதே போல ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடலாமா என்ன?
ஹிஹி!
* கண்ணை அழிச்சா, அதுக்கப்புறம் முருகனை எப்படிக் கண்ணாரக் கண்டு சேவிப்பதாம்?
* காதை அழிச்சா, அதுக்கப்புறம் திருப்புகழை எப்படிக் காதாரக் கேட்பதாம்?
* வாயை அழிச்சா, அதுக்கப்புறம் வயலூரானை எப்படி வண்டமிழால் பாடுவதாம்?
* மூக்கை அழிச்சா, அதுக்கப்புறம் அவன் திருநீற்றினை எப்படி முகர்வதாம்?
* உடலை அழிச்சா, அதுக்கப்புறம் திருத்தொண்டு என்னும் கைங்கர்யம் எப்படிச் செய்வதாம்?

ஆக, ஒட்டாரை, நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது அல்ல! ஆட்கொள்ளுதல்!

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்று ஆண்டவன் சீற்றமும் அருளின் பாற்பட்டதாகவே இருக்கும் என்பது ஆண்டாள் வாக்கு!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்று முருகனும் தன் மாமியின் வாக்கையே வழி மொழிகிறான்!



அலங்காரம்-05!

ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்! மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்! செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,
கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.


ஐவர் = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்
இவர்கள் செய்வது என்ன?

ஓர ஒட்டார் ஒன்றை! = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை! (ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)
உன்ன ஒட்டார் = சிந்திக்க விட மாட்டார்கள்!
மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார் = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!
செய்வது என் யான்? = நான் என்ன செய்வேன்? ஐயகோ!

சென்று தேவர் உய்ய = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு
சோர நிட்டூரனை, சூரனை = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை
கார் உடல் = கரிய உடலில் இருந்து
சோரி கக்க = இரத்தம் கக்க
கூர கட்டாரி இட்டு = கூர்மையான வேலைச் செலுத்தி.
ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே = ஒரு நொடியில் கொன்றவனே!

தாராகாசுர வதம்

சிங்கமுகன் வதம்

சூர சங்காரம்



வாங்க, பாட்டைப் பிரிச்சி மேயலாமா?

சென்று தேவர் உய்ய = தேவர்களுக்கு மட்டுமே ஏன் முருகன் உதவி செய்ய வேண்டும்? அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

கார் உடல் சோரி கக்க, கூர கட்டாரி இட்டு = சூரன் செய்த தவறு என்ன? அவனை ஏன் இரத்தம் கக்க, கட்டாரி இட்டு வெட்ட வேண்டும்?
இத்தனைக்கும் அவன் மாற்றான் மனைவியைக் கூட களவாடவில்லை!
பெண்டிரை வன்கொடுமை செய்யவில்லை!
முனிவர்களுக்கும் மானிடர்க்கும் தீங்கு இழைக்கவில்லை!
தன்னையே கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை!

தேவர்களை மட்டும் போரிலே வென்று, சிறைப்பிடித்து வைத்தான் - இது வீரம்! பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

ஓர் இமைப் போதினில் கொன்றவனே = சூரனையும் அவன் சுற்றத்தையும் முருகப் பெருமான் அழித்தார்! இமைப் பொழுதில் கொன்றார்! ஆனால் இதைக் கொலையாகக் கருத மாட்டார்கள் முருக அன்பர்கள்! ஏன்? ஏன்? ஏன்?

மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!
சூரன் = ஆணவம்;
சிங்கமுகன் = கன்மம்;
தாரகாசுரன் = மாயை!


இந்த மூன்றும் அழிந்தால், பசு பதியிடம் சேரும்! உயிர் இறைவனிடம் சேரும்! அப்படிச் சேர்பித்தான் முருகப் பெருமான்!
சூரனை வதைத்த பின்னரும், மயிலும் சேவலுமாய்ச் சேர்த்துக் கொண்டான்!
ஆக, ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!

அதே போல நம் ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடாமல், ஆட்கொள்ள வேண்டும்! ஐம்புலனை அழித்தி விட்டால் இறை நுகர்ச்சி ஏது? எனவே ஐம்புலன்களை நல்லது நோக்கித் திருப்பி விட வேண்டும்!
இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்! நிக்ரஹம் என்றால் அழித்தல் என்று பொருளில்லை! நி+கிரஹம் = இல்லை+இடம்! இடங்கொடுக்காமல் இருப்பது! துஷ்ட நிக்ரஹமும் அதே தான்! துட்டர்களுக்கு இடம் கொடாமல் அவர்களை அடக்கி ஆள்வது!

பெரிய பெரிய சூரனை எல்லாம் அடக்கியவன் நீ! என் ஐம்புலன்களையும் அடக்கக் கூடாதா முருகா? - என்று ஏக்கமாகக் கேட்கிறார் அருணகிரியார்!


அலங்காரம்-06!

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை, திருமுலைப்பால்
அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை
விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,
குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை = திருத்தமாய் உலகு ஏழும் ஈன்ற பொன் மகள், அன்னை பார்வதி, புவனேஸ்வரி!
திருமுலைப் பால் அருந்தி = அவள் திரு மார்பில் சுரக்கும் பாலைப் பருகி
சரவணப் பூந்தொட்டில் ஏறி = சரவணம் என்னும் பொய்கையில் தோன்றி
அறுவர் கொங்கை விரும்பி = கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரின் முலைப்பாலை விரும்பி

கடல் அழ = கடலாய் மாறிய அசுரன் அழ,
(சூரன் கடலாய் மாறி நிற்க, கடலை வற்ற வைத்தார் முருகப் பெருமான்; அலை வேலை அஞ்ச, வடி வேல் எறிந்த அதி தீரா என்பது திருப்புகழ்)
குன்று அழ = குன்றாய் மாறிய அசுரன் அழ,
(கிரெளஞ்ச மலையாய் மாறி நின்றான் தாருகன். மலைக்குள் அமரரையும் சேர்த்தே விழுங்கினான்; மலைமாவு சிந்த என்றும் அதே திருப்புகழில் வரும்)
சூர் அழ = சூரன் அழ,

விம்மி அழும் குருந்தை = விம்மி அழுகின்ற குழந்தை!
நாளை இவர்களை எல்லாம் அழ வைக்கப் போகும் குழந்தை! அதுவே இன்று இப்படி அழுகிறதே! இது என்ன அதிசயம்!

குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே = கிழவன்=உரிமை உடையவன்! குறிஞ்சி நிலத்துக்கு உரிமை உடையவன் என்று தமிழுலகமே தொழும் ஒரு குழந்தை - முருகக் குழந்தை!
ச்சே, குறிஞ்சிக் குழந்தையைப் போயி குறிஞ்சிக் கிழவன்-னு சொல்லுறாங்களே! இந்தப் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும், மக்களுக்கும் பித்து பிடித்து விட்டதா என்ன? - என்று நகைச்சுவையாய் நகைச்சு வைக்கிறார் அருணகிரிப் பெருமான்!

அடுத்த செவ்வாயில் அடுத்த செவ்வாழைகளைச் சுவைப்போம்!
அகங்காரங்கள் தீர, அலங்காரங்கள் தொடரும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP