Tuesday, January 20, 2009

அலங்காரம்-12/13: முருகனின் மயில்! சேவல்! குதிரை?

ஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன! கோதை முருகனுக்கு மாமியாச்சே! மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள? மாமியாருக்காக காத்துக் கிடப்பானே! உருகிப் போயிருவானே! மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன? :)

தமிழ்க் கடவுள் முருகவேள், தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு வழி விட்டு காத்துக் கிடந்தான்! அன்பு சேர்த்துக் கிடந்தான்! உடல் வேர்த்துக் கிடந்தான்!
இன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன்! ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது!

சென்ற பகுதியில் சும்மா இருத்தல்-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்!
* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்....."சும்மா" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்!
* இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா?

என்னாது? முருகன் குடி இருக்கானா? இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது! :)
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்! குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்?

வாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை!




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குசை நெகிழா வெற்றி வேலோன்! அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு! அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!


மேலோட்டமான பொருள்:
வெற்றி வேல் முருகன் மயில் மேல் பறந்து வருகிறான்! கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது! அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்!
தோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று! மேரு மலையே அசைகிறது! கடலே வற்றி மேடாகிறது!

பிரிச்சி மேயலாமா?
குசை நெகிழா வெற்றி வேலோன் = குசை-ன்னா கடிவாளம்! கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன்! யாரை?
அட, கடிவாளம்-ன்னா குதிரைக்குத் தானே இருக்கும்! முருகன் குதிரை எல்லாம் கூட ஓட்டுவானா என்ன?

அடங்கொப்புரானே! அவன் மாமன் கள்ளழகரு தான் குதிரை மேல வருவாரு! பரி மேல் அழகரு! மருமகன் எப்போ குதிரை ஏறினான்?
ஹிஹி! முருகன், பரியாரை ஓட்டலை! மயிலாரை ஓட்டிக்கிட்டு வாரான்! :)

மயிலையே குதிரை போல ஓட்டிக்கிட்டு வாரானாம்! சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க! டொடக்-டொடக்-ன்னு மயிலாரு விசிறி விசிறி வாராரு!
கூர் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி, சவுண்டு விட்டுக்கிட்டே வாராரு!
தோகையெல்லாம் சும்மா ஜிவ்வுனு காற்றில் பறக்குது! அப்படி ஒரு ஓட்டம்! கடிவாளம் புடிச்சும் புடிக்காத ஓட்டம்!

அவுணர் குடர் குழம்ப = அசுரர்கள் குடல் நடுங்குது, இந்த வேகத்தைப் பார்த்து! கசை இடு = சவுக்கடி கொடுத்து.....
ஹோய்...முருகா...என்ன கொழுப்பு உனக்கு? எங்க மயிலாரைச் சவுக்கடி கொடுத்து ஓட்டறயா? ஹிஹி! சவுக்கால் அடிக்கலீங்க!
முருகன் சும்மா சொடுக்கறான்! சீன் போடுறான்! சொடுக்கும் போது உய்ய்ய்ய்ய்ஷ்-ன்னு ஒரு சத்தம் வரும்-ல? அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும்! நமக்கும் தான்! :)

வாசி விசை கொண்ட வாகன = அப்படி குதிரையின் வேகம் கொண்ட மயில் வாகனம்!
பீலியின் கொத்து = அந்த மயில் தோகைகளின் கொத்து...
அசை படு, கால் பட்டு = அசைய அசைய, பறக்க பறக்க, அந்தக் காற்று பட்டு! கால்=காற்று! சிறுகால்=தென்றல்! பெருகால்=புயல்! தமிழில் அருமையான காரணப் பெயர்களில் இந்தக் கால்=காற்று என்பதும் ஒன்று!

பறக்கும் மயில்


மயில் நடக்கும் போதும், நடனமாடும் போதும் நல்லா இருக்கும்! ஒயிலா இருக்கும்! ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும்! ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது! அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது! அதனால் தத்தித் தத்தித் தாவும்! அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்! :)

அசைந்தது மேரு! = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை!
அடியிட, எண் திசை வரை தூள் பட்ட = மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)
அத் தூளின் வாரி, திடர் பட்டதே! = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது! நிலமானது!

வாரி-ன்னா கடல்! கிருபானந்த வாரி = கிருபை+ஆனந்த+வாரி = கருணை+களி+கடல்
இது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள்! தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்! :)

ஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது!
மனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது! மேலானது!
மேடான மனம் நிலமானது! அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்!

எப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை?
இந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு! மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி!
சித்ரப் பதம் நடிக்கு மயிலாம்! ரத்ன கலாப மயிலே! ரத்ன கலாப மயிலே!-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை!

நடன மயில் - நடக்கும் மயில்


பரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும்! அவ்ளோ மயில் சந்தம்! அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை! மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா?

சரி, உங்களுக்கு ஒரு வேலை!
மயிலுக்கு வேற என்னென்ன பேரெல்லாம் இருக்கு? தமிழ்-வடமொழி-ன்னு ரெண்டுமே சொல்லுங்க பார்ப்போம்!
மயில்களின் மலை விராலிமலை! அதைப் பற்றிய பதிவு இங்கே!




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

படைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,
தடைபட்ட சேவல், சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,
உடைபட்டது அண்ட கடாகமும்! உதிர்ந்தது உடு படலம்! உதிர்ந்தது
இடைபட்ட குன்றமும்! மேரு வெற்பும் இடிபட்டவே!

மேலோட்டமான பொருள்:
வேல்படை உடைய முருகனிடம் வந்து சேர்ந்தது ஒரு வெற்றிக் கொடி! அது சேவற்கொடி! அது சிறகைச் சடசட என்று அடித்துக் கொள்ள, அந்த சத்தத்தில் கடல் கிழிந்தது!
அண்ட லோகங்களும் உடைபட்டன! நட்சத்திரக் கூட்டங்கள் உதிர்ந்தன! இடையே இருந்த குன்றும் மேருமலையும் பொடியாயின!

பிரிச்சி மேயலாமா?
படைபட்ட வேல்! அவன் பால் வந்த = படைகளில் சிறந்த வேலாயுதம்! அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு! அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு!
ஒன்று மயில் = சென்ற பாட்டில்! இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்!

வாகை பதாகை என்னும் = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது! பதாகை=கொடி!
தடைபட்ட சேவல் = அது என்ன தடைபட்ட சேவல்? சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே! காலங்கார்த்தால கத்துமே! அப்புறம் என்ன தடை?

போர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன்! ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்! அதான் தடைபட்ட சேவல்!
பேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்!

சிறகு அடிக் கொள்ள = அது சிறகைப் பரபர-ன்னு அடித்துச் சிலுப்பிக் கொள்கிறது! சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும்! கண்ணுல ஒரு கோவம் இருக்கும்! அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும்! அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது! விட்டுப் பிடித்து, பட்டியில் அடைக்கணும்!

சலதி கிழிந்து = சலதி-ன்னா கடல்! ஜலதி=சலதி?
கடலை இது போல நிறைய பேரால் சொல்லுவாரு அருணகிரி! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்! திமிர ***, இன்னும் நிறைய இருக்கு!

உடைபட்டது அண்ட கடாகமும் = அண்டங்கள் பொடியாக
உதிர்ந்தது உடு படலம் = நட்சத்திரங்கள் வீழ
உதிர்ந்தது இடைபட்ட குன்றமும் = இடையில் உள்ள மலைகள் வீழ
மேரு வெற்பும் இடிபட்டவே = மேரு மலையும் ஒரு இடி பட்டதுவே!

மேரு மலை-ன்னா என்ன? இமய மலையா? கந்த வெற்பா? Imaginary Mountainஆ? :)
யாராச்சும் குறிப்பு கொடுங்க!

திருமுருகாற்றுப்படையில் முருகன் பறந்து வரும் காட்சியை நக்கீரர் காட்டுவது போலவே அருணகிரியும் காட்டுகிறார்!
அவர் யானை மேல் வருவதைக் காட்டுகிறார்! இவர் மயில் மேல் வருவதைக் காட்டுகிறார்!

இந்தப் பாடல் சேவலின் சிறப்பைச் சொல்கிறது! முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது! சேவல்=நாதம்! மயில்=விந்து! நாத-விந்து கலாதீ நமோ நம!

இப்படிச் சேவலும், மயிலுமாய் இந்தப் பதிவு! முருகா!!

8 comments:

கிரி said...

படங்களும் ..பாடலுக்கு உங்கள் விளக்கமும் அருமை..

KRS பின்னி பெடலெடுக்கறீங்க ..சூப்பர்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கிரி said...
படங்களும் ..பாடலுக்கு உங்கள் விளக்கமும் அருமை
KRS பின்னி பெடலெடுக்கறீங்க ..சூப்பர்//

நன்றி கிரி!
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு சொல்வது வழக்கம்!
ஆனா இப்போ, குமரன் வரும் இடமெல்லாம் "கிரி" வருவது வழக்கம்! :)

Kavinaya said...

அடடா, அருமையா இருக்கு. பாடல்களும் பொருளும், பொருள் சொன்ன விதமும்... படங்களும் அப்படியே. முருகன் மயில் மீது வேகமா வர்ற படத்தை எங்கே பிடிச்சீங்க? :) மேரு மலை பத்தி நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
அடடா, அருமையா இருக்கு. பாடல்களும் பொருளும், பொருள் சொன்ன விதமும்... படங்களும் அப்படியே//

நன்றி-க்கா!

//முருகன் மயில் மீது வேகமா வர்ற படத்தை எங்கே பிடிச்சீங்க? :)//

முருகனைக் கேட்டேன்!
முருகன் கொடுத்தான்!
மயிலார் நம்ம ஆருயிர் தோஸ்த் வேற! :)

//மேரு மலை பத்தி நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து...//

நீங்களே சொல்லலாமே-கா!
சரி, குமரன், குமரன்-ன்னு ஒரு சூப்பர் ஸ்டார் வருவாரு! அது வரை வெயிட் மாடுவோம்!

குமரன் (Kumaran) said...

கந்தர் அலங்காரம் முழுவதுமே இப்படித் தானா? கொஞ்சம் கடினமான சொற்களைப் போட்டுத் தான் அருணகிரிநாதர் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கந்தரனுபூதி இந்த அளவிற்குக் கடினமாக இல்லை என்று தோன்றுகிறது. சரி தானா?

அடிக்கடி முருகன் இந்த மயிலின் மீது ஏறி வலம் வருவாரோ? அதனால் தான் ஆழிப்பேரலைகளும் நில நடுக்கங்களும் ஏற்படுகின்றதோ? மயிலிடமும் முருகனிடமும் சொல்லி வைக்க வேண்டும் - ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் அமரும் படி.

சலதின்னா ஜலதியின் தற்சம தமிழாக்கம் என்று தெரிகிறது. திமிர உததியில் வரும் உததி என்றால் என்ன?

குமரன் (Kumaran) said...

//சரி, குமரன், குமரன்-ன்னு ஒரு சூப்பர் ஸ்டார் வருவாரு! அது வரை வெயிட் மாடுவோம்!//

அவர் மயிலார் மேல ஏறிப் பறந்து போயிட்டாரு. வேணும்னா கிரியைக் கேளுங்க. அவர் தான் குமரன் இருக்கும் இடமெல்லாம் இருக்கிறார். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கந்தர் அலங்காரம் முழுவதுமே இப்படித் தானா? கொஞ்சம் கடினமான சொற்களைப் போட்டுத் தான் அருணகிரிநாதர் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கந்தரனுபூதி இந்த அளவிற்குக் கடினமாக இல்லை என்று தோன்றுகிறது. சரி தானா?//

ஆகா!
அலங்காரத்தில் அனுபூதியை விட ரெண்டு மடங்கு அதிக பாடல்கள் குமரன்! மேலும் எந்தச் சொற்கள் கடினம்-ன்னு நினைக்கறீங்க?

அனுபூதியிலும் கடினச் சொற்கள் உண்டு! உல்லாச நிராகுல, வலாரி, தலாரி, வனசம், ஆதாளி, கூதாள-ன்னு நிறைய வரும்...
சந்தக் கவி என்பதாலும் தமிழும் ஆரியமும் கலப்பதாலும் இப்படியோ?

//அடிக்கடி முருகன் இந்த மயிலின் மீது ஏறி வலம் வருவாரோ? அதனால் தான் ஆழிப்பேரலைகளும் நில நடுக்கங்களும் ஏற்படுகின்றதோ?//

ஹிஹி!
மயிலார் இப்போ என் கூடத் தான் தங்கயிருக்காரு! சொன்னேன்-ன்னு வைங்க, மின்னசோட்டா வந்து கொத்துவாரு! :))

//மயிலிடமும் முருகனிடமும் சொல்லி வைக்க வேண்டும் - ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் அமரும் படி//

சுத்தற குணம் மாமன் கொடுத்தது! அம்புட்டு சீக்கிரம் போவாது! :)

//சலதின்னா ஜலதியின் தற்சம தமிழாக்கம் என்று தெரிகிறது//

நானும் அப்படித் தான் நினைச்சேன்!

//திமிர உததியில் வரும் உததி என்றால் என்ன?//

உததி=கடல்
சலதி=கடல்
இன்னும் வேற என்னென்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அவர் மயிலார் மேல ஏறிப் பறந்து போயிட்டாரு//

மயில் ரொம்ப தூரம் பறக்காது! :)

//வேணும்னா கிரியைக் கேளுங்க. அவர் தான் குமரன் இருக்கும் இடமெல்லாம் இருக்கிறார். :-)//

கிரி தான் பெரும் முருக பக்தர் ஆச்சே!
திருப்பாவைப் பதிவுக்கு வந்து...என் கிட்ட அலங்காரம், முருகனருள்-ன்னு சுட்டியா வாங்கிட்டுப் போனாரே! :))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP