Tuesday, March 24, 2009

அலங்காரம்-18/19: அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!

மக்களே, கந்தர் அலங்காரப் பதிவுகள், கொஞ்ச நாள் பணி மிகுதியால் இல்லாமல் இருந்தது! மன்னிக்கவும்! அலங்காரம் பதிவில் தான் இல்லையே தவிர, முருகனிடம் இருந்ததே!
அலங்காரத்துக்கே அலங்காரம் சேர்ப்பவன் அல்லவா அழகன் முருகப் பெருமான்! அதான் இன்று அலங்காரம் செய்ய வந்து விட்டான்!

அம்மாவின் வேண்டுகோளின் படி எழுதத் துவங்கிய வலைப்பூ அல்லவா?
"என்னடா கொஞ்ச நாளா ஆளைக் காணோம்"-ன்னு ஒரு சின்ன அதட்டல் அலங்காரம் நடந்துச்சி! அடியேன் அலங்காரம் துவங்கி விட்டேன் :))




காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே-ன்னு சொன்னது யாரு? = பட்டினத்தாரா? அருணகிரியா??
பட்டினத்தார்-ன்னு நிறையப் பேரு சொல்வீங்க! இல்லை அருணகிரியார்-ன்னு நான் சொல்லறேன்! ஹிஹி! மேற்கொண்டு படிங்க!

* அருணகிரியார் பற்றி அப்பப்போ முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கேன்!
* பட்டினத்தார் பற்றி உங்களுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!
அது என்ன - "அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!"?
இருவருமே சித்தர்கள் தான்! இருவருக்குமே அருள் உண்டு தான்! அப்புறம் என்ன இவருக்கு இல்லாதது, அவருக்கு உண்டு? கண்டு பிடிங்க பார்ப்போம்! :)

அருணகிரி காலத்தால் முந்தியவரா? இல்லை பட்டினத்தார் முந்தியவரா? இல்லை இருவரும் ஒரே காலமா?
ஏன் கேட்கிறேன் என்றால், அருணகிரிநாதர், பட்டினத்தார் பாடிய "அதே வரிகளைத்" தன் பாடலில் வைக்கப் போகிறார்! = காதற்ற ஊசியும் வாராது காண், கடைவழிக்கே!

ஆச்சரியமா இல்லை?
சென்ற பதிவில் பெரியாழ்வாரின் "மூவடி-தாவடி" வரிகளை அப்படியே எடுத்து வைச்சாரு அருணகிரி!
இந்தப் பதிவில் பட்டினத்துப் பிள்ளையின் "காதற்ற ஊசி" வரிகளை அப்படியே எடுத்து வைக்கறாரு!



நிறைய புலவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்!
* சில பேரு தன்மானம், சுய கெளரவம் எல்லாம் பார்ப்பாங்க!
* சில பேரு "காப்பி அடிச்சிட்டாருப்பா"-ன்னு தங்களைப் பேசிடப் போறாங்களோ-ன்னு பயப்படுவாங்க!
* சில பேரு "இறை விஷயமே ஆனாலும், அவன் சொன்னதை நாம எதுக்குச் சொல்லணும்? நாம தனியா சொல்லுவோம்"-ன்னு கொஞ்சம் கெத்து காட்டுவாங்க!

ஆனால் அருணகிரி அப்படி அல்ல!
"இறைவனா? ஈகோவா?" என்றால்...அருணகிரிக்கு "இ" தான்! "ஈ" அல்ல!
ஆண்டாள்-பெரியாழ்வார் கூட அருணகிரி போலவே தான்!
திருக்குறள், சிலப்பதிகாரத்தில் இருந்தெல்லாம் எடுத்து, அப்படி அப்படியே போட்டுருவாங்க!

இறைவனை நினைந்து "உண்மையாலுமே" ஆழ்பவர்கள் அனைவரும், சக அடியார்களின் நூல்களையும், வாக்கையும், கருத்தையும் மிகவும் மதிப்பார்கள்! தங்கள் நூலை மட்டுமே பிடிச்சித் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள்!
எது கேட்டாலும், "நான் அந்த நூலில் அப்பவே சொல்லி இருக்கேனே, இந்த நூலில் இப்பவே சொல்லி இருக்கேனே" என்பது போன்ற வாசகங்கள் எழாது! மாறாக சக அடியவர்களை வெளிப்படையாகவே தம் நூலிலும் குறிப்பிடுவார்கள்! இது தான் அடியார் லட்சணம்!

"இறைவனா? ஈகோவா?" என்றால்...அவர்களுக்கு "இ" தான்! "ஈ" அல்ல!

இதை இங்கு சொல்லக் காரணம் உண்டு! அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் "பெருமாளே" என்று தான் முடிப்பார்! முருகப் பெருமானை அவர் ஏன் பெருமாளே என்று குறிப்பிட வேண்டும்?-ன்னு சில பேரு முன்பே கேட்டிருந்தாங்க!
அதற்கு விடை அறிந்து கொள்ள, அருணகிரியின் இந்த "அப்படியே எடுத்தாளும் அடியார் சுபாவம்" மிக உதவியாய் இருக்கும்! இப்போ ஞாபகம் மட்டும் வச்சிக்குங்க! இன்னொரு நாள் பார்ப்போம்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை
பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே!

மேலோட்டமாக....
வேதம், ஆகமத்தால் போற்றப்படும் முருகனின் திருவடிகளைக் காப்பாகக் கொண்டு
இரவு-பகல், சூது-வாது, பாப-புண்ணியம் என்று வேற்றுமைகள் இல்லாத நிலை = ஞானாந்தம்
அதில் இருந்து கொண்டு, சும்மா இரு, மனமே!
இந்த நிலையை உலகத்தார் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!

இனி பிரிச்சி மேயலாம்...
வேத ஆகம
= வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும்
சித்ர வேலாயுதன் = சித்ர வேலாயுதப் பெருமான்

சித்ர வேலா? வெற்றி வேல், வீர வேல் தெரியும்! அது என்ன சித்ர வேல்? ஹா ஹா ஹா!
ஈழத்துக் கதிர்காமத்தில், முருகப் பெருமான் சிலை உருவில் இல்லாமல், சித்திர உருவத்தில் தான் இருக்கின்றான்! சன்னிதியில் ஓவியம் தொங்கும்! அதன் பின்னே ஷண்முக-ஷட்கோண (அறுகோண) யந்திரமும் உண்டு! ஆனால் நம் முன்னே அவன் ஓவிய ரூபன்! அவனே சித்ர வேலாயுதப் பெருமான்!

சித்ரம்-ன்னா அழகு என்ற பொருளும் உண்டு! அழகிய வேல் ஆயுதன்!
வேலால் அவனுக்கு அழகா? அவனால் வேலுக்கு அழகா? = இதுக்குப் பதில் சொல்வது வள்ளிக்கும் தேவசேனைக்குமே மிக மிக கடினம் :)

கொலைத் தொழில் மட்டுமே செய்யும் இன்றைய ஆயுதங்களான, ராக்கெட்-லாஞ்சர் எல்லாம் கூட, பார்க்க மட்டும் அழகாக வடிவமைக்கறாங்க-ல்ல?
அருள் தொழிலும், மருள் தொழிலும் சேர்த்தே செய்யும் வேல் அப்போ எம்புட்டு அழகா இருக்கணும்?
அதான் வேலனுக்கு வேலழக்கு! வேலுக்கு வேலனழகு! சித்ர வேலாயுதம்!

வெட்சி பூத்த = வெட்சிப்பூ பூத்த பாதங்கள்! வெட்சி புனையும் வேளே போற்றி என்பது கந்த சஷ்டிக் கவசம்!
தண்டை = தண்டை, ஜல்-ஜல் என்று ஒலிக்கும் பாதங்கள்! தண்டை அணி வெண்டையும், கிண்கிணி சதங்கையும் என்று திருப்புகழ்!

பாதார விந்தம் = அந்தப் பாத+அரவிந்தங்களை, திருவடித் தாமரைகளை...
அரணாக = காப்பாகக் கொண்டு! செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்பது பல்லாண்டு பாசுரம்!

அல்லும் பகலும் இல்லா = இரவு பகல் இல்லாத
சூதானது அற்ற = வஞ்சகம் இல்லாத
வெளிக்கே = ஆன்ம வெளியில்
ஒளித்து = ஒடுங்கி இருந்து
சும்மா இருக்க = எம்பெருமானோடு ஏகாந்தமாய் "சும்மா" இருக்க!

சும்மா இரு, சொல் அற என்றலுமே, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
எல்லாம் இழந்து, சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல, எனை விட்டவா! - என்றெல்லாம் முன்னர் அருணகிரி பாடி இருந்தார் அல்லவா? "சும்மா இரு"-ன்னா என்ன?-ன்னு இந்தப் பதிவில் பார்த்தோம் அல்லவா? ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால் = "சும்மா" இருப்போம்!
என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!

போதாய் இனி மனமே = மனமே, இனி, அப்படியே நடவாய்! போதாய்! போந்தாரோ? போந்து எண்ணிக் கொள்!
தெரியாது ஒரு பூதர்க்குமே = இந்த நிலையை உலகத்தோர் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!


அடுத்த பாட்டு தான் பட்டினத்தார் இஷ்டைல் அருணகிரிப் பாட்டு = "உதவாது காண் கடை வழிக்கே"! :)


(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
வையில் கதிர் வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்! நுங்கட்கு, இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா, உடம்பின் வெறு நிழல் போல,
கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!

மேலோட்டமாக...
கூர்வேல் முருகனை தினமும் வாழ்த்துங்கள்!
அடுத்து, உடைச்ச அரிசி அளவாச்சும், இல்லாதவர்க்கு உணவிடுங்கள்!
உங்க சொந்த உடம்பு தான் என்றாலும், அந்த உடம்பின் நிழல் உங்களுக்கே உதவாது!
உங்க சொந்த பொருள் தான் என்றாலும், அந்தப் பொருள் உங்கள் கடைவழிக்கு வாராது!

இப்போ, பிரிச்சி மேயலாம்...
வையில்
= வை+இல் = கூர்மை உடைய! வைவேல் என்றும் வேலைப் போற்றுவார்கள்!
கதிர் வடி வேலோனை வாழ்த்தி
= ஒளி வீசுமாறு வடிக்கப்பட்ட வேல்! ஒளி வீசுமாறு வடித்து வைத்தாற் போலே இருக்கும் வடிவேலன்! அவனைப் போற்றி...

வறிஞர்க்கு என்றும் = ஏழைகளுக்கு எப்போதும்
நொய்யின் பிளவு அளவேனும் = ஒரு நொய்யின் சிறிய பிளவாச்சும்
பகிர்மின்கள் = பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடுங்கள்!

நொய் பார்த்து இருக்கீங்களா? நொய்-ன்னா என்ன? சும்மா நொய் நொய்-ன்னு பேசறதா? ஹிஹி! உடைச்ச அரிசியை நொய்-ன்னு சொல்வது வழக்கம்!
நொய்க் கஞ்சி குடிச்சிருந்தா தெரியும்! நாம தான் இப்பல்லாம் Corn Flakesக்கு மாறிட்டம்-ல? :)

நொய்யும் கிட்டத்தட்ட கார்ன் ஃப்ளேக்ஸ் போலத் தான்!
அரிசி நொய்யோ, கோதுமை நொய்யோ, மோரில் விளாவி, கஞ்சி போல் ஆக்கித் தருவார்கள்! கொஞ்சம் கொத்தமல்லி கிள்ளிப் போட்டுக்கலாம்!
ரொம்ப சத்து மிக்கது! ரொம்ப டேஸ்ட்டாவும் இருக்கும்!

இப்பல்லாம் நொய் பாக்கெட்டிலேயே அடைச்சி விக்குது! இன்ஸ்டன்டா கலந்துக்கலாம்!
ஒரு முறை, காலையில் Corn Flakesக்கு பதிலா நொய்க்கஞ்சி குடிச்சிப் பாருங்க! எப்பவும் Corn Flakes மட்டுமே சாப்பிடுவதற்குப் பதில், ஒரு நாள் அதுவும், மறுநாள் இதுவும்-ன்னு மாறி மாறி சாப்பிட்டுப் பாருங்க! உற்சாகம் பீறிடும்! :)



இந்தக் காலத்தில் "கொடுத்து உண்பது" என்பது கொஞ்சம் அரிதாகி விட்டதல்லவா?
அவரவர் உணவை அவர்களே தேடிக்கணும்? இல்லீன்னா சோம்பல் தான் வளரும்? என்றும் பேசுகிறோம் அல்லவா?
மேலும் பிச்சை எடுப்பவர்கள் கூட இப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று எடுப்பதில்லை! வேறு வசதியான முறைகளுக்கு மாறிக் கொண்டார்கள்!
அப்புறம் எப்படி அருணகிரி சொல்வது போல் கொடுத்து விட்டு உண்பது? :)

சோம்பலை வளர்க்க பிச்சையாகப் "போடச்" சொல்லவில்லை, ஆன்மீகப் பெரியவர்கள்! கால வழக்கில் நாம தான் அப்படி ஆக்கி வைத்து விட்டோம்!
நல்லாப் பாருங்க! யாருக்குத் "பகிரச்" சொல்கிறார்? = வறிஞர்க்கு!
போடுதல், பகிர்தல் = இரண்டுக்கும் வேறுபாடு உண்டு!
நீங்கள் இன்று உணவு தந்து விட்டால், அதை உண்ட பின், அவருக்குப் பசி போய் விடுகிறது! இனி உழைக்க முடியும்! இனி அவர் வறிஞர் ஆக மாட்டார்!

இன்று உணவு கொடுத்தாலும், இன்று பசி போனாலும், நாளையும் பசியோடு, அதற்கு வழி அறியாமல் இருப்பவர்களே வறிஞர்கள்! பிஞ்சுக் குழந்தைகள்! வேறு சில ஊனம் கொண்டவர்கள்!
நான் கடவுள் திரைப்படம் - பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலைப் பார்த்திருப்பீர்கள் தானே?

அன்னதானம் என்பது ஆலயங்களில் வரும் பல தரப்பினருக்கும் தான்!
அன்று உணவகங்கள் இல்லாத நிலையில், பெரிய ஆலயங்களில் சத்திரமாகக் கட்டி வைத்தார்கள்! தொலைதூரத்துக்கு கட்டுச் சாப்பாடு கட்டிப் போக முடியுமா? அதான் இப்படி!
இங்கு உண்பவர் வறிஞராகத் தான் இருக்கணும் என்ற அவசியம் இல்லை! அறிஞராகவும் இருக்கலாம்! சிலர் உண்டு முடித்து, உதவித் தொகையும் கொடுத்துப் போவார்கள்!

கர்நாடக மாநிலம் தர்ம ஸ்தலாவில் இன்றும் நடக்கிறது!
நல்ல மேலாண்மை இல்லாததால் சத்திரங்கள், பின்னாளில் சோம்பேறி மடங்கள் போல் ஆகி விட்டன! உண்பவரே மீண்டும் மீண்டும் உண்பது வாடிக்கையாகிப் போனது!
மக்களும் கருணையால் கொடுக்காமல், தங்கள் பாவம் போக்கிக் கொள்ள, "தர்மம் தலை காக்கும்"-ன்னு எல்லாம் நினைத்து, இதை மறைமுகமாக ஊக்குவிக்கத் துவங்கி விட்டார்கள்! தர்ம வழியில் தாங்கள் செல்லாமல், இப்படி "தர்மம்" பண்ணுவது என்று ஆக்கி விட்டார்கள்! இதுவல்ல தருமம்!

இன்று காணும் அளவுக்கு, ஆலயக் கையேந்துபவர்கள் முற்காலத்தில் இல்லை! இப்போது தான் வாழ்க்கை முறை மிகவும் மாறிப் போய் விட்டது!
ஆலயச் சீர்திருத்தத்தில், இதையும் ஒரு இறைத் தொண்டாகவே கருதி, இந்தக் கொடுமையைக் களைய வேணும்! பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு அந்தந்த ஆலயமே பொறுப்பேற்றுக் கொள்ள வேணும்! ஆலய மேலாண்மைத் திட்டங்களை இதற்கும் வகுக்க வேணும்!

இறைவனுக்கு அலங்காரம் செய்து "அழகு பார்க்கும்" பக்தர்கள்/நிர்வாகம்...
இறைவன் உலா வரும் தெருக்களிலும், இந்தக் கொடுமையை நீக்கி, அழகு பார்க்க வேணும்! இதுவும் கந்தர் "அலங்காரம்" தான்!


நுங்கட்கு = உங்களுக்கு
இங்ஙன் = இங்கே, இப்பிறவியில்
வெய்யிற்கு ஒதுங்க உதவா = வெய்யிலுக்கு ஒதுங்கக் கூட லாயக்கில்லாத
உடம்பின் வெறு நிழல் போல் = உடம்பின் வெத்து நிழலைப் போல்!
உங்க உடம்பு தானே! ஆனா அதன் நிழல் உங்களுக்கு உதவுமா? அடுத்தவங்களுக்கு வேணும்னா அந்த நிழல் உதவலாம்! அதுவும் அந்த நிழல் கூடும், குறையும்! பெருசா உதவாது!

கையில் பொருளும் = அதே போல், உங்கள் கையில் இருக்கும் பொருளும்
உதவாது காண் உம் கடைவழிக்கே = உங்கள் இறுதி வழிக்கு ரொம்பவும் பெருசா உதவாது!

கடைசி வரை வருவது உங்க உடம்பு! அதன் நிழலே உங்களுக்கு உதவாத போது, அப்பப்போ வந்து போகும் பொருளா உங்கள் கடைவழிக்கு உதவப் போகிறது? காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

அதுக்காக, கடைசிக் காலத்தில் பொருள் உங்களுக்கு வேணாம்-ன்னு சொல்லலை அருணகிரி! அவருக்கும் தெரியும் பெற்ற மக்கள், உற்ற மக்களை விடக் காசு தான் கடைசிக் காலத்தில் உதவும்-ன்னு! சொல்லப் போனால் கடைசிக் காலத்துக்கு அப்புறமும்,அனுப்பி வைக்க கொஞ்சம் காசு தேவைப்படும்! ஆனால் அதுக்கு அப்புறமும் கூட, அது உங்க கூடவே வந்துக்கிட்டு இருக்கும்-ன்னு நினைச்சிக்காதீங்க என்று தான் சொல்கிறார்! அதுக்கு அப்புறமும் = கடைவழிக்கு!

சாட்டிலைட்-ல இயங்கும் வங்கியில் போட்டு, ஜென்மா-டு-ஜென்மா ட்ரான்ஸ்பர் பண்ண முடியாது! :)
பிறந்த போது எப்படி வந்தோமோ, அதே போலத் தான் போகும் போதும்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் வந்தோம்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் செல்வோம்! அதனால் அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டு, அதிலேயே கிடந்து உழலாமல்...இயன்றவரை தன்னையும் காத்து, காக்க வேண்டியவரையும் காக்கச் சொல்கிறார்! காசை மட்டுமே கணக்கு போட்டு காக்காமல் விடாதே! அது வாராது காண் கடைவழிக்கே!


கேள்வியை மறந்துடாதீங்க: இலக்கியத்தில், அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு - அது என்ன? :)

8 comments:

குமரன் (Kumaran) said...

அருமையான பொருளுரைகள் இரவிசங்கர். மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருமையான பொருளுரைகள் இரவிசங்கர். மிக்க நன்றி//

:)
மிக்க நன்றி குமரன்!
கேள்விக்குப் பதில் இல்லையா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலக்கியத்தில், அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு - அது என்ன? :)//

தேவாரச் சைவத் திருமுறைகளில் பட்டினத்தாருக்கு இடம் உண்டு! அருணகிரிக்கு இல்லை!

பட்டினத்து அடிகளின் பாடல்கள் பதினோராம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன!

அருணகிரி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் பிறந்திருந்தால் வைக்கப்பட்டிருக்குமோ என்னமோ?

Kavinaya said...

'சித்ர வடிவேலன்' அழகு :) அருமையான விளக்கங்களுக்கு நன்றி கண்ணா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
'சித்ர வடிவேலன்' அழகு :)//

கதிர்காமம் முருகன் கோயில் இன்னும் எளிமையான அழகு-க்கா! ஆனா படத்தில் பார்த்ததோட சரி! எப்போ போக முடியும்-ன்னு தான் தெரியலை! :(

//அருமையான விளக்கங்களுக்கு நன்றி கண்ணா//

:)
டேங்கீஸ்-க்கா!

Varathan said...

ஐயா! நிங்கள் உரை கண்டு மெய்ச்சினோம். தற்செயலாக அமைந்த தங்கள் அறிமுகம் தொடர விரும்புகிறேன். மேலும் எழ்தவும் - வரதன்

Unknown said...

திரை விலகாமல் திரையில் உள்ள சித்திரத்துக்கே பூசை செய்யும் வழிபாட்டு முறை இலங்கையில் கதிர்காமத்தில் மட்டுமல்லாமல் கிழக்கில் உள்ள மண்டூர் மூருகன் ஆலயத்திலும் உள்ளது.

இங்கு பூசை செய்பவர் வாயில் துணி கட்டி மௌனமாகப் பூசை செய்வார், இவரை கப்புகனார் அல்லது கப்புறாளை என்று அழைப்பார்கள், இங்கெல்லாம் சமஸ்கிருதமின்றி தமிழிலே அனைத்தும் நிகழும்.

கதிர்காமத்திலும் அவ்வாறே, ஆனால் அந்த கப்புறாளை தமிழ் வழி வந்த சிங்களவர்.

Unknown said...

அருமை
ஜென்மா TO ஜென்மா க்கு நாம் சேர்க்கும் செல்வங்கள் போய் சேராது
...என்றல் நாம் சேர்க்கும் புண்ணியங்கள் எந்த நிலையை அடையும்
....சொல்லின் நீளம் மிகவும் ஆ

ழம்
சித்ரம்..//

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP