Tuesday, February 3, 2009

அலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்!

அந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல! பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா!

அருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல! சைவ நூல்களை மட்டுமல்ல! வைணவ நூல்களையும்!
ஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்! ஆர்வம் தானே காரணம்!

நீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம்! அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்!

மாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன? கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள? :)
இன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை!
என் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்! செய்வது யாரு?


வேற யாரு? கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்!-ன்னு அவசரப் படாதீங்க மக்கா! கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல! திருமுருகச் செம்மல் அருணகிரிநாதர்!
ஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி! நாமும் பார்க்கலாமா? :)




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!


மேலோட்டமான பொருள்: மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை! அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின! பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்! அவனுக்கோ சிறிய திருவடிகள்!
அந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே!

பிரிச்சி மேயலாமா?
அது என்னாங்க தாவடி? தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில்! அப்போ தாவடி=முருகன்? முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா? ஹா ஹா ஹா!

ஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே! அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி! அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்?

ஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,
"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!
தரணி அளந்தானால் இன்று முற்றும்!

அருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க!
ஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு!

பின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது! தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது!
"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்" என்று அவரே சொல்கிறார்! அந்தக் கல்வியின் பயனைத் "தாமே பெற வேலவர் தந்ததினால்"...திருப்புகழ் விளைந்தது! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்!


"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!

இரண்டாம் அடியில் தான் தாவடி இட்டானாம்! இப்போ சொல்லுங்க! தாவடி-ன்னா என்ன?

முதல் அடியில் நம்முடைய பூமியை அளந்தான்! அது எளிது! ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்!
இரண்டாம் அடிக்கு, ஆகாசம் பயணப்படணும்! அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா? சாட்சி கேட்பார்களே! என்ன செய்யலாம்?

ஆங்...கீழே இருந்தே, "தாவி" அளக்கலாம்! காலை உசரமாத் "தாவுவது" போல் தூக்கி, தாவி அளக்கலாம்! "தாவி" அடியால் அளக்கலாம்! "தாவடியால்" அளக்கலாம்!
* தாவடி புரிஞ்சுதுங்களா? தாவி வரும் அடி = தாவடி!
* முருகனுக்கு காவடி! பெருமாளுக்குத் தாவடி!
* அடியார்கள் குறை தீர்க்க, தாவி வரும் அடி = தாவடி!

பெருமாள் திருட்டுப் பய! அயோக்கியப் பய! குழந்தையா வந்து மூனு அடி மண்ணு கேட்டுப்புட்டு, இப்படி மொத்தமா வளைச்சிக்கிட்டானே? - இதுவா சாமியின் லட்சணம்? அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க! சிலர் வெளிப்படையாவே ஏசுவாங்க! :)
ஆனால் உண்மை என்ன? பெருமாள் ஏமாத்தினாரா? = இல்லை! அருணகிரியே சொல்றாரு!

மகாபலிக்கு பூமி முழுசும் சொந்தமா என்ன? இல்லையே! பூமியில் ஒரு பெரும் பகுதிக்கு அவன் அரசன்! அவ்ளோ தான்! அவனைத் தவிர இன்னும் பல அரசர்கள் பூமியில் இருந்தார்கள்!
பூமியே முழுசும் சொந்தம் இல்லாத போது, விண்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள் எல்லாமுமா மாவலிக்குச் சொந்தம்? இல்லை அல்லவா!

அப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்?
மாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்! ஏன்?

நிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார்! அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான்! தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்!



1. மொத்த உலகங்களுக்கும் தன் திருவடி சம்பந்தம் செய்து வைக்கணும்!
2. மக்கள் பாவம் தீர்க்கும் கங்கை என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்!
3. பிரகாலாதனின் பேரனான மாவலியைக் கொல்லாது, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்!

ஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி? :)
இறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்!

1. முதலில், அந்தச் "சிறிய திருவடி", "பெரிய திருவடி" ஆகி, நம் மொத்த பேருக்கும் திருவடி சம்பந்தம் செய்து வைத்தது!

2. பின்பு, "பெரிய திருவடி", "தாவடியாகி", மேலே எழுந்தது! நான்முகன் "தாவடியை" நீராட்டினார்!
விண்வெளியின் ஆவரண நீர், மேலே பிரம்மன் விடும் நீர், கீழே மாவலி தாரை வார்க்கும் நீர் என்று மூன்றும் ஒரே தாரையாகப் பாய, பெருமாள் திருவடிகளில் கங்கை உற்பத்தி ஆனது!

3. மாவலியைக் கொல்லாது, அவன் மும்மலத்தின் முதல் மலமான, ஆணவத்தை அழித்தது!
அவதாரம்-ன்னாலே அழித்தல் என்பது போய், "அழிவு இல்லாத அவதாரம்" என்று செய்து வைத்தது! மாவலிக்கு முன்பு இருந்ததை விட பெரிய அரசை, மொத்த பாதள அரசையும் கொடுத்தது!

இறைவனையே கொலைத் தொழிலில் இருந்து தடுத்து, அருள் தொழிலில் ஈடுபடச் செய்தது திருவடிகள்!
தாவில் கொள்கை-ன்னு நக்கீரர் பாடுவார்! தாவு=குற்றம்!
* தாவு இல்லாத அடி = தாவடி!
* நம்மிடம் தாவி வரும் அடி = தாவடி!
* உன்னடியை எனக்குத் "தா-அடி" என்று நாம் கேட்கும் = தாவடி!

* நம் நெற்றியில், நாம் தான், திருவடிகள் (நாமம்) தாங்கியிருக்கோம்னா,
* தன் நெற்றியில், இறைவனே, திருவடிகள் (நாமம்) தாங்கிக்கிட்டு இருக்கான்!
இது தான் திருவடிப் பெருமை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார் இறைவன் "அடி" சேரா தார்!


படி மாவலி பால் = மாவலியிடம்,
மூவடி கேட்டு = மூன்று அடி கேட்டு,
அன்று மூது = அன்று, முதியதாய், (பல காலம் இருந்த விண்வெளி)
அண்ட கூட முகடு முட்ட = அண்ட சராசரங்களின் முகடு (உச்சி) முட்டும் படியாக,
சேவடி நீட்டும் பெருமான் = சேவடியை நீட்டினான் "பெரு"மான்! "ஓங்கி" உலகளந்த உத்தமன்!
மருகன் = அவனின் ஆசை மருமகன் முருகன்!

தன் சிற்றடியே = முருகக் குழந்தையின் சிற்றடிகள்! வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி! முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி! இருவருமே ஆண்டிக் கோலம் தான்! :)

இரு ஆண்டிகள்! பெரிய திருவடிகள், சிறிய திருவடிகள்


தாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்

ஓட்டும் மயிலிலும் = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட
தேவர் தலையிலும் = தேவர்கள் தலையில் பாதம் பட
என் பா அடி ஏட்டிலும் = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட
பட்டது அன்றோ = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே!

இங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர்! //மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது!

மாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன்! மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

மேலோட்டமான பொருள்:
மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால்...
ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!

கொஞ்சம் விரிவான பொருள்:
தடுங்கோள் மனத்தை = மனசைத் தடுக்கணும்! யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல? (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்)! அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!

விடுங்கோள் வெகுளியை = வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!

தானம் என்றும் இடுங்கோள் = கெடுவாய் மனனே கதி கேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்! -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு!
ஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

இருந்தபடி இருங்கோள் = முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி? இல்லை இல்லை!
* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே!
* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!

இப்படி இருந்தாக்கா...
எழு பாரும் உய்ய = ஏழ் உலகும் உய்ய
கொடும் கோபச் சூருடன் = கோபச் சூரனையும்
குன்றம் திறக்க = அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க = அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் = கூர் வேலை விட்டவன், முருகன்!

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் = அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!
இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP