பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்! ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே! அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி? பார்க்கலாம் வாங்க!
பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!
 |  |
பெரும் பைம் புனத்தினுள் = பெரிய பசுமையான தினைப் புனத்தில்
சிற்றேனல் = சிறு + ஏனல்; ஏனல்-னா தினைக் கதிர்!
தினைக் கதிர் யாராச்சும் பார்த்து இருக்கீயளா? தினை மாவு யாராச்சும் சாப்பிட்டு இருக்கீயளா? இல்லீன்னா அதெல்லாம் கிராமத்து சமாச்சாரம்-ன்னு சாய்ஸ்-ல விட்டாச்சா?
தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை!
குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்! இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாய்ங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது! :)
பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு. மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல!
தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி!
மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!
தினை மாவுருண்டை செய்வது எப்படி? தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்!
கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும்.
ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்!
அப்படியே மாவு போல உருட்டி, மாவிளக்காய் முருகனுக்குப் போட்டு, பின்னால சாப்புடலாம்! அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!
காக்கின்ற பேதை = தினைப் புனத்தை காவல் காக்கும் வள்ளி.
கொங்கை விரும்பும் குமரனை = அவள் கொங்கையாகிய திருமார்பை விரும்பும் குமரக் கடவுள்.
மெய் அன்பினால் = உண்மையான (மெய்யான) அன்பினால்
மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்லச் சிந்தனை செய்ய
அரும்பும் தனி பரமானந்தம் = மனசுக்குள் ஒரு கந்தக் களிப்பு, பூ மொட்டு விரிவது போல அரும்பும்! அரும்பு எப்போ மூடி இருந்திச்சின்னும் தெரியாது, எப்போ படீர்-ன்னு விரிஞ்சதுன்னும் தெரியாது! அது போல இந்தக் கந்தக் களிப்பூ!
தித்தித்தது அறிந்தவன்றோ = அந்தக் கந்த ருசியின் இனிமையை அறியும் போது...
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்று புனித விவிலியம் (பைபிள்) கூறும் அல்லவா! அதே தான் இங்கும்! கந்தன் இனிமையானவன் என்பதை ருசித்துப் பாருங்கள்! அப்போது...
கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து = கரும்பும் துவர்க்கும், தேனும் புளிக்கும்!
அற கைத்ததுவே = இவையெல்லாம் கசந்து போனதுவே! உன் எண்ணம் ஒன்றே தித்திப்பதுவே! உலகச் சுவை
எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா, சுர பூபதியே!திருவரங்கத்து அமுதனார் நூற்றந்தாதியில் சொல்வது போலவே இதைத் தித்தித்து உண்ண வேண்டும்! -
என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!தினை மாவு தித்தித்ததுவே!
வள்ளியின் வடிவு தித்தித்ததுவே!
முருகனின் முருகு தித்தித்ததுவே!
அடியேற்கு இன்று தித்தித்ததுவே!

அடுத்த பாட்டு சிறப்பான தமிழோசைப் பாட்டு! அருணகிரி, அப்படியே அள்ளித் தெளிக்கிறார் சந்தத் தமிழை!