அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்! மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்! ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!
நமக்குச் செய்து கொண்டால் "அகங்காரம்"! இறைவனுக்குச் செய்து கொண்டால் "அலங்காரம்"!
மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்! = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!
இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! - தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!
(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)
ஒரு குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது! அப்போ என்ன நடக்கிறது?
நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய், நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?
கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்
முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?
* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?
*
அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?
* அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்! கந்தர் அலங்காரம்!
பழனிமலையில் எத்தனை அலங்காரம் அந்தக் குழந்தைக்கு?* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம் (இயற்கையான ஆண்டி உருவம்)
* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம் (காவி உடையில்)
* சிறுகாலைச் சாந்தியில் 8:00= பால முருகன் அலங்காரம் (குழந்தையாகத் தோற்றம்)
* பெருகாலைச் சாந்தியில் 9:00= வேட்டுவர் அலங்காரம் (வேடன கையில் வில்லுடன்)
* உச்சி காலத்தில் 12:00= வைதீக அலங்காரம் (வேதம் ஓதும் அந்தணர்)
* சாய ரட்சையில் 6:00= ராஜ அலங்காரம் (அரச உடையில்)
* அர்த்த சாமத்தில் 8:00= விருத்த அலங்காரம் (முதிய உருவம்)
முதல் பாட்டுக்குப் போகலாமா?
திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும், மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்!
அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!
அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!
அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!
இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!