அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)
ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!
சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?
இது கந்தர் அலங்காரம்!
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!
என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!
பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - என்கிறார் ஐயன்!
பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

பணிவு அலங்காரம் எப்படி வரும்?
தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!
இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!
அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!
பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?