சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?
அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)
சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)
"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!
முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!
சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்!
சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!
உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)

இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!
பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர்
பெரியாழ்வார்! அவர் தான்
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி!
புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,
அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!
சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி! - என்று பாடுகிறார்!
பின்னாளில் இதை
பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!
சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்! பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!
அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?