Monday, September 8, 2008

அலங்காரம்-05/06: முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??

திகில் படங்களைப் பார்த்து இருக்கீங்க தானே? கொடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்டுலேயே, பாதி திகில் வந்து விடும்! நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது? அதே போல அருணகிரியும் சவுண்ட் எஃபெக்ட்டு கொடுக்கறாரு!

பாட்டு முழுதும் வல்லினம் தான்! உடல் சோரி, ரத்தம் கக்க, கூர கட்டாரி, இட்டு வெட்டு-ன்னு ஒரே திகில் தான்!
எதைக் கண்டு திகிலாம்? நம் ஐம்பொறி/ஐம்புலன்களைக் கண்டு தான்! வாங்க பார்க்கலாம்!

ஒட்டார்-னா என்னங்க? ஓட்டு போடறவங்க எல்லாம் ஓட்டார்! பதவிக்கு வந்த பின் ஓட்டார் எல்லாம் ஒட்டார் ஆகி விடுவர்! :)
ஒட்டார் = பகைவர்! ஒட்டாதவங்க! அன்புக்கும் பண்புக்கும் ஒட்டாதவங்க!
எவ்வளவு முயன்று ஒட்ட வைத்தாலும், பகை மனப்பான்மையை மனதில் உடையவர்கள், ஒட்டாமல் வெட்டிக்கிட்டு வருவாங்க!
* வள்ளுவரும் ஒட்டார்-ன்னு எங்கே சொல்றாரு? சொல்லுங்க பார்ப்போம்!

அவிங்களுக்கு, அன்புச் சொல் சொன்னா அது மனத்திலும் ஒட்டாது! அறிவுச் சொல் சொன்னா அது மதியிலும் ஒட்டாது! ஒட்டவே கூடாது என்று முடிவெடுத்து விட்டவனுக்கு எது தான் ஒட்டும்?
அதே போல, நம் ஐம்புலன்களும், நமக்கு ஒட்டார் ஆயிடுதுங்களாம்! இறைவனோடு ஒட்ட விடாமல், நம்மை வேறு எது எதோடவோ எல்லாம் ஒட்ட வைக்குதுங்களாம்!

என்ன செய்யலாம் இந்த ஒட்டாரை? வெட்டி வீழ்த்திடலாமா?
பகைவர்-ன்னா அவர்களைத் தயவு தாட்சண்ணியம் இல்லாம அழிக்கணும் தானே? அதே போல ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடலாமா என்ன?
ஹிஹி!
* கண்ணை அழிச்சா, அதுக்கப்புறம் முருகனை எப்படிக் கண்ணாரக் கண்டு சேவிப்பதாம்?
* காதை அழிச்சா, அதுக்கப்புறம் திருப்புகழை எப்படிக் காதாரக் கேட்பதாம்?
* வாயை அழிச்சா, அதுக்கப்புறம் வயலூரானை எப்படி வண்டமிழால் பாடுவதாம்?
* மூக்கை அழிச்சா, அதுக்கப்புறம் அவன் திருநீற்றினை எப்படி முகர்வதாம்?
* உடலை அழிச்சா, அதுக்கப்புறம் திருத்தொண்டு என்னும் கைங்கர்யம் எப்படிச் செய்வதாம்?

ஆக, ஒட்டாரை, நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது அல்ல! ஆட்கொள்ளுதல்!

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்று ஆண்டவன் சீற்றமும் அருளின் பாற்பட்டதாகவே இருக்கும் என்பது ஆண்டாள் வாக்கு!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்று முருகனும் தன் மாமியின் வாக்கையே வழி மொழிகிறான்!அலங்காரம்-05!

ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்! மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்! செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,
கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.


ஐவர் = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்
இவர்கள் செய்வது என்ன?

ஓர ஒட்டார் ஒன்றை! = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை! (ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)
உன்ன ஒட்டார் = சிந்திக்க விட மாட்டார்கள்!
மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார் = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!
செய்வது என் யான்? = நான் என்ன செய்வேன்? ஐயகோ!

சென்று தேவர் உய்ய = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு
சோர நிட்டூரனை, சூரனை = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை
கார் உடல் = கரிய உடலில் இருந்து
சோரி கக்க = இரத்தம் கக்க
கூர கட்டாரி இட்டு = கூர்மையான வேலைச் செலுத்தி.
ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே = ஒரு நொடியில் கொன்றவனே!

தாராகாசுர வதம்

சிங்கமுகன் வதம்

சூர சங்காரம்வாங்க, பாட்டைப் பிரிச்சி மேயலாமா?

சென்று தேவர் உய்ய = தேவர்களுக்கு மட்டுமே ஏன் முருகன் உதவி செய்ய வேண்டும்? அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

கார் உடல் சோரி கக்க, கூர கட்டாரி இட்டு = சூரன் செய்த தவறு என்ன? அவனை ஏன் இரத்தம் கக்க, கட்டாரி இட்டு வெட்ட வேண்டும்?
இத்தனைக்கும் அவன் மாற்றான் மனைவியைக் கூட களவாடவில்லை!
பெண்டிரை வன்கொடுமை செய்யவில்லை!
முனிவர்களுக்கும் மானிடர்க்கும் தீங்கு இழைக்கவில்லை!
தன்னையே கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை!

தேவர்களை மட்டும் போரிலே வென்று, சிறைப்பிடித்து வைத்தான் - இது வீரம்! பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

ஓர் இமைப் போதினில் கொன்றவனே = சூரனையும் அவன் சுற்றத்தையும் முருகப் பெருமான் அழித்தார்! இமைப் பொழுதில் கொன்றார்! ஆனால் இதைக் கொலையாகக் கருத மாட்டார்கள் முருக அன்பர்கள்! ஏன்? ஏன்? ஏன்?

மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!
சூரன் = ஆணவம்;
சிங்கமுகன் = கன்மம்;
தாரகாசுரன் = மாயை!


இந்த மூன்றும் அழிந்தால், பசு பதியிடம் சேரும்! உயிர் இறைவனிடம் சேரும்! அப்படிச் சேர்பித்தான் முருகப் பெருமான்!
சூரனை வதைத்த பின்னரும், மயிலும் சேவலுமாய்ச் சேர்த்துக் கொண்டான்!
ஆக, ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!

அதே போல நம் ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடாமல், ஆட்கொள்ள வேண்டும்! ஐம்புலனை அழித்தி விட்டால் இறை நுகர்ச்சி ஏது? எனவே ஐம்புலன்களை நல்லது நோக்கித் திருப்பி விட வேண்டும்!
இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்! நிக்ரஹம் என்றால் அழித்தல் என்று பொருளில்லை! நி+கிரஹம் = இல்லை+இடம்! இடங்கொடுக்காமல் இருப்பது! துஷ்ட நிக்ரஹமும் அதே தான்! துட்டர்களுக்கு இடம் கொடாமல் அவர்களை அடக்கி ஆள்வது!

பெரிய பெரிய சூரனை எல்லாம் அடக்கியவன் நீ! என் ஐம்புலன்களையும் அடக்கக் கூடாதா முருகா? - என்று ஏக்கமாகக் கேட்கிறார் அருணகிரியார்!


அலங்காரம்-06!

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை, திருமுலைப்பால்
அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை
விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,
குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை = திருத்தமாய் உலகு ஏழும் ஈன்ற பொன் மகள், அன்னை பார்வதி, புவனேஸ்வரி!
திருமுலைப் பால் அருந்தி = அவள் திரு மார்பில் சுரக்கும் பாலைப் பருகி
சரவணப் பூந்தொட்டில் ஏறி = சரவணம் என்னும் பொய்கையில் தோன்றி
அறுவர் கொங்கை விரும்பி = கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரின் முலைப்பாலை விரும்பி

கடல் அழ = கடலாய் மாறிய அசுரன் அழ,
(சூரன் கடலாய் மாறி நிற்க, கடலை வற்ற வைத்தார் முருகப் பெருமான்; அலை வேலை அஞ்ச, வடி வேல் எறிந்த அதி தீரா என்பது திருப்புகழ்)
குன்று அழ = குன்றாய் மாறிய அசுரன் அழ,
(கிரெளஞ்ச மலையாய் மாறி நின்றான் தாருகன். மலைக்குள் அமரரையும் சேர்த்தே விழுங்கினான்; மலைமாவு சிந்த என்றும் அதே திருப்புகழில் வரும்)
சூர் அழ = சூரன் அழ,

விம்மி அழும் குருந்தை = விம்மி அழுகின்ற குழந்தை!
நாளை இவர்களை எல்லாம் அழ வைக்கப் போகும் குழந்தை! அதுவே இன்று இப்படி அழுகிறதே! இது என்ன அதிசயம்!

குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே = கிழவன்=உரிமை உடையவன்! குறிஞ்சி நிலத்துக்கு உரிமை உடையவன் என்று தமிழுலகமே தொழும் ஒரு குழந்தை - முருகக் குழந்தை!
ச்சே, குறிஞ்சிக் குழந்தையைப் போயி குறிஞ்சிக் கிழவன்-னு சொல்லுறாங்களே! இந்தப் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும், மக்களுக்கும் பித்து பிடித்து விட்டதா என்ன? - என்று நகைச்சுவையாய் நகைச்சு வைக்கிறார் அருணகிரிப் பெருமான்!

அடுத்த செவ்வாயில் அடுத்த செவ்வாழைகளைச் சுவைப்போம்!
அகங்காரங்கள் தீர, அலங்காரங்கள் தொடரும்!

46 comments:

கவிநயா said...

//ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!//

அருமை அருமை!

ஒட்டாரை ஆட்கொள்ள
ஆறுமுகன் அருளிடுவான்
வேல்கொண்டு வந்திடுவான்
மும்மலமும் களைந்திடுவான்!

//திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை// //சரவண பூந்தொட்டில்//

சொற்பிரயோகங்கள் அருமை.

பாடல்களும் விளக்கங்களும் படிக்க படிக்கச் சுவை. நன்றி கண்ணா. உங்கள் பணி தொடரட்டும்.

Kailashi said...

முருகன் சூரனை செய்தது வதம் அல்ல, அது சம்ஹாரம்- அதாவது மும்மலங்களை நீக்குதல் என்று அருமையாக எழுதியுள்ளீர்கள் ஐயா.

கந்தர் அலங்காரம் - அருமையோ அருமை.

Raghav said...

அழித்தல் அல்ல, ஆட்கொள்ளுதல் என்று விளக்கி எங்களை ஆட்கொண்டு விட்டீர்..

Raghav said...

என் கேள்விகள் அப்புறம்.. முதல்ல உங்க கேள்விகளுக்கு பதில்கள்..

//நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது? //

"காதலிக்க நேரமில்லை"

//வள்ளுவரும் ஒட்டார்-ன்னு எங்கே சொல்றாரு? சொல்லுங்க பார்ப்போம்!
//

"நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்."

Raghav said...

//முருகனும் தன் மாமியின் வாக்கையே வழி மொழிகிறான்//

இத படிச்சவுடனே சிரிக்கத் தோணுது... முருகன் எப்புடி "மாமி"ன்னு அழைப்பார்னு சொல்லி பாத்துக்கிட்டேன்.. தெய்வங்கள் உறவு முறை சொல்லி அழைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்றும் தோன்றுகிறது. :)

Raghav said...

//அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!//

அதாவது என்னன்னா... இது சாதாரண கேள்வியே அல்ல. ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு பதில கண்டு பிடிச்சேன்.. அது சரியான்னு நீங்க தான் சொல்லனும்.

"குமரன், ஜி.ரா தான் அந்த பதிலை "தெரிந்தவர்கள்".

"தெரிந்தவர்கள்" னு நீங்க இவங்களை பத்தி தானே கேட்டீங்க.. :)

Raghav said...

//மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!//

தேவர்களுக்கு இம்மூன்றும் இல்லையா?..

இன்னொன்று, ஏன் அசுரர்களை மட்டும் அழிக்க வேண்டும்? தேவர்கள் கடவுளால் குறிப்பிட்ட வேலைகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய கடமைகளுக்கு தொந்தரவு தரும் அசுரர்களை கடவுள் அழிக்கிறார் என்று நினைக்கிறேன்.

Raghav said...
This comment has been removed by the author.
Raghav said...

//அடுத்த செவ்வாயில் அடுத்த செவ்வாழைகளைச் //

செவ்"வாயில்" செவ்வாழைகளா.. ரொம்ப நல்லது.. சில செவ்வாய்கள் வெறும் வாய்களாகி விடுகிறது, வேலைப்பிணி அதிகமோ.. ஸாரி.. வேலைப்பணி அதிகமோ ? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரி, எல்லாரும் கேள்வி கேக்குறாங்க! நான் மட்டும் கேட்கக் கூடாதா? இந்தாங்க என் பங்குக்கு! :))

1. முருகப் பெருமான் எதுக்குச் சூரனை வாகனம் ஆக்கணும்? தன் சொந்த உபயோகத்துக்கா?

அதான் அவன் ஆணவத்தை அழிச்சாச்சுல்ல? இனி அவனைச் சரி சமமா நடத்தலாம் தானே? அதை விடுத்து, தனக்கு ஏவல் செய்யும் வாகனமாய் எதுக்கு மாற்றணும்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

2. ஆணவம் தொலைந்த சூரனின் பெண்ணையே முருகன் கல்யாணம் பண்ணியிருக்கலாமே?

அசுரர் குலமும் பெருமை அடைந்திருக்கும்! பின்னாளில் யாரும் அசுரரை இழிவாகப் பாடவும் மாட்டார்கள்! முருகன் மாப்பிள்ளையான இடம் என்று "பொறுப்பாகப்" பாடுவார்கள் அல்லவா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

3. சூரன் ஒருவன் செய்த தவறுக்கு, எதற்கு ஒரு குலத்தையே வேரோடு சாய்க்கணும்?
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்று பாடுகிறார்களே!

சூரனுக்குப் பின் வீரமகேந்திரபுரத்துக்கு யார் அரசர் ஆனார்?
இல்லை அத்தனை குடிகளும் அழிந்து விட்டார்கள்! அதனால் அரசரே இல்லை! பட்டினமும் அழிந்து போனதா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மேலே அடியேன் கேட்ட கேள்விகள் முருகப் பெருமானின் அருட் பெருமைக்குக் குந்தகம் சொல்ல அல்ல!

அதற்கான உண்மையான விடைகளைத் தேடினால், ஞானக் குழந்தை முருகவேளின், அருட் பெருமை புலப்படும்!

நீயாய் நீ நின்றவாறு இவையென்ன நியாயங்களே? என்று மாறன் கேட்பதும் இதே தான்!

யோசிச்சிச் சொல்லுங்க! :)
சரணம் சரணம் சரவண பவ ஓம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
ஒட்டாரை ஆட்கொள்ள
ஆறுமுகன் அருளிடுவான்
வேல்கொண்டு வந்திடுவான்
மும்மலமும் களைந்திடுவான்!//

சூப்பர்-கா!
உங்க கூட இனித் தொலைபேசும் போது கூட கவுஜை-ல தான் பேசணுமா? :)

//
//திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை// //சரவண பூந்தொட்டில்//

சொற்பிரயோகங்கள் அருமை//

யாரு சொல்லைப் போட்டது? கந்தமே சந்தமாய் வந்த கவிஞராச்சே!

//பாடல்களும் விளக்கங்களும் படிக்க படிக்கச் சுவை. நன்றி கண்ணா. உங்கள் பணி தொடரட்டும்.//

ஆசிக்கு நன்றி-க்கா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Kailashi said...//
ஐயா வேணாமே!
பேர் சொல்லும் பிள்ளை அடியேனைப் பேர் சொல்லியே கூப்புடுங்க! :)

//முருகன் சூரனை செய்தது வதம் அல்ல, அது சம்ஹாரம்- அதாவது மும்மலங்களை நீக்குதல் என்று அருமையாக எழுதியுள்ளீர்கள் ஐயா.//

தத்துவ விளக்கம் பரிபூர்ண பக்தர்கள் மட்டுமே ஒப்புக் கொள்வர், கைலாஷி ஐயா!

ஆனால் ஏனையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!
அல்லது ஒப்புக் கொண்டது போல் கண்டும் காணாமல் இருப்பார்கள்!
அல்லது இங்கு ஒப்புக் கொண்டு, வேறொரு இடத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!
நாத்திக முகாமில் நானே அப்படித் தான் இருந்திருக்கேன்! :)

உலகியல் வாழ்க்கையில் சூர சம்ஹாரம் அழிவு தான் என்று நினைப்பது மனித இயற்கை தானே!

தத்துவ நோக்கில் அழிவில்லை, அருள் தான் என்று பதிவில் சொன்னேன்!

உலகியல் நோக்கிலும் அது அழிவில்லை, அருள் தான் என்று அறியத் தர வேணும்!
அதற்கு நீங்கள், SK, கீதாம்மா, ஜிரா, குமரன், ஜீவா போன்ற பெரியோர்களும் அன்பர்களும் மனசு வைக்க வேணும்!

//கந்தர் அலங்காரம் - அருமையோ அருமை//

நன்றி! நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
அழித்தல் அல்ல, ஆட்கொள்ளுதல் என்று விளக்கி எங்களை ஆட்கொண்டு விட்டீர்..//

கைலாஷி ஐயாவுக்குச் சொல்லி இருக்கேன், பாருங்க ராகவ்!
சான்றோர் நீங்களும் விளக்க முயலலாம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
"காதலிக்க நேரமில்லை"//

சூப்பரு! முதல் வடை சரி! :)

//"நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்."//

அருமை! ஆனால் இரண்டாம் வடை நாட் அக்செப்டட்!
குமரன் பின்னூட்ட விதி தெரியும்-ல?

பாட்டு சொன்னாப் பொருள் சொல்லணும்! இல்லீன்னா...குமரன் வேல் எடுத்துக்கிட்டு வருவாரு....ஆட்கொள்ள! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
இத படிச்சவுடனே சிரிக்கத் தோணுது... முருகன் எப்புடி "மாமி"ன்னு அழைப்பார்னு சொல்லி பாத்துக்கிட்டேன்..//

ஹா ஹா ஹா!

Hai Maami! Your daughter is so jammy! :)
How did u grow up valli? she is real kaLLI! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
"குமரன், ஜி.ரா தான் அந்த பதிலை "தெரிந்தவர்கள்".//

அடியேன் சிறிய ஞானத்தனின் தாசன்!
அடியேன் ஜி ராகவ பரந்தாம தாசன்!
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
//மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!//

தேவர்களுக்கு இம்மூன்றும் இல்லையா?..//

நல்ல கேள்வி! :)

//தேவர்கள் கடவுளால் குறிப்பிட்ட வேலைகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய கடமைகளுக்கு தொந்தரவு தரும் அசுரர்களை கடவுள் அழிக்கிறார் என்று நினைக்கிறேன்.//

போச்சு!
இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா, பகுத்தறிவுப் பெருந்தகைகள் உங்களை அடிச்சே நொறுக்கிப்புடுவாய்ங்க! :)

அது ஏன் தேவர்களுக்கு மட்டும் கடவுள் வேலைவாய்ப்பு கொடுக்கணும்? அசுரர்களுக்குக் கொடுக்க மாட்டாரா? -ன்னு கேள்வி வரும்! பதில் இருக்கா தல? :)

குமரன் (Kumaran) said...

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - சரி. சிறுபேர்ன்னா என்ன இரவி? குமரனை கும்ஸ்ன்னு கொத்தனாரை கொத்ஸ்ன்னும் அழைப்போமே? அதுவா? புதசெவி. :-)

எனக்கு முத்தமிழும் தெரியாதே. ஒரு தமிழால் வைதால் என்னை வாழவைப்பானா மாட்டானா? புதசெவி. :-)

உன்னன்னா கவனிக்கிறதா சிந்திக்கிறதா? முந்தி ஒரு தடவை 'உன்னி'ன்னா கூர்மையா கவனித்துப் பார்க்கிறதுன்னு நம்ம நண்பர் பொருள் சொன்னார். உன்னித்தெழுந்தங்கறதுக்கும் கூர்மைன்னு பொருள் சொன்னார். நீங்க சிந்திக்கிறதுன்னு சொல்றீங்க? புதசெவி. :-)

அசுரர்களுக்கு முருகன் உதவி செய்திருக்கிறானா? தெரிந்தவர் நீங்கள் தான். சொல்லுங்கள்.

வீரன் சூரனை ஏன் கொன்றான் முருகன்? தெரிந்தவர் நீங்கள் தான். சொல்லுங்கள்.

குருந்துன்னா என்ன? கிழவன்னா என்ன?

குமரன் (Kumaran) said...

ஒட்டார் என்று வரும் குறளைச் சொன்னதற்கு நன்றி இராகவ். அருமையான பொருள் கொண்ட குறட்பாவாக இருக்கிறது இது.

குமரன் பின்னூட்ட விதியெல்லாம் இல்லாமலேயே இந்த குறட்பா புரியுது. ஆனா விதியை மீறக்கூடாது. பாருங்க நல்ல வேளையா என்னை ஆட்கொள்ளின்னு சொன்னார் இரவி. கொஞ்சம் எழுத்துப்பிழை விட்டுருந்தா என்னை சம்ஹாரம் செய்ய வந்திருப்பாங்க. :-)

VSK said...

//அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!//

இடும்பாசுரன்= இடும்பன்

VSK said...

//பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!//

சூரன் ஆணவமலம்
சிங்கமுகன் கன்ம மலம்
தாரகன் மாயாமலம்.

மாயை பொடியாகவேண்டும்... ஆனது.
கன்மம் அழிய வேண்டும்... அழிந்தது.
ஆணவம் எப்போதும் அழியாது... அடக்கப்பட வேண்டும்... அடக்கப் பட்டது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
குமரன் பின்னூட்ட விதியெல்லாம் இல்லாமலேயே இந்த குறட்பா புரியுது//

குமரனுக்குப் புரியுது-ன்னு கரெக்டாச் சொல்லுங்க!

சங்க இலக்கியம் எல்லாம் தெரியாத எங்களைப் போன்ற ஆட்களையும் கொஞ்சம் நினைச்சிப் பாருங்க குமரன்!

//பாருங்க நல்ல வேளையா என்னை ஆட்கொள்ளின்னு சொன்னார் இரவி. கொஞ்சம் எழுத்துப்பிழை விட்டுருந்தா என்னை சம்ஹாரம் செய்ய வந்திருப்பாங்க. :-)//

எழுத்துப் பிழை ஆயிருந்தா நீங்க தான் ஆட்களைச் சங்காரம் செய்திருப்பீங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்

இது என்னா இத்தனை புதசெவி?
நேத்தே கேட்டிருப்பேன்!
புதசெவி-ன்னு தப்பிச்சிருவீங்களோன்னு தான் வியாழக்கிழமை கேக்குறேன்! :)

மதுரை நக்கீரர் தான் குற்றமும் கண்டு பிடிக்கணும், பதிலும் சொல்லணும், வெளக்கம் எல்லாம் கொடுக்கணும்! நாட் மீ! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
//அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? * தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!//

இடும்பாசுரன்= இடும்பன்//

நன்றி SK ஐயா!
இடும்பன் அகத்தியர் மாணாக்கனாச்சே!
அசுரனாய் இருந்து சூரன் மறைவுக்குப் பிறகு அகத்தியரிடம் சேர்ந்தான் என்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

VSK said...
//பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!//

சூரன் ஆணவமலம்
சிங்கமுகன் கன்ம மலம்
தாரகன் மாயாமலம்.//

அடியேன் இதைப் பதிவிலும் சொல்லியுள்ளேனே SK!
இது தத்துவ விளக்கம்! சரி தான்!

ஆனால் சூரன் ஆணவமாய் அப்படி என்ன தான் செய்தான்?
நடைமுறை வாழ்வில் அவன் வதம் சரியா என்பதே சிலர் தேடலின் கேள்வி!
கந்த புராண நிகழ்வுகளைக் கொண்டு இதைக் கொஞ்சம் விளக்க வேண்டும்! அதைத் தாங்களே செய்ய வல்லவர்! செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!

//மாயை பொடியாகவேண்டும்... ஆனது.
கன்மம் அழிய வேண்டும்... அழிந்தது.
ஆணவம் எப்போதும் அழியாது... அடக்கப்பட வேண்டும்... அடக்கப் பட்டது//

அருமை!
மாயை பொடியானது!
கன்மம் தீர்ந்தது!
ஆணவம் அகன்றது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - சரி. சிறுபேர்ன்னா என்ன இரவி? குமரனை கும்ஸ்ன்னு கொத்தனாரை கொத்ஸ்ன்னும் அழைப்போமே? அதுவா? புதசெவி. :-)//

KRS தான் சிறுபேர்!
ஆணவ மலம் தலைக்கேறிய அவனை...
அந்தச் சிறுபேரை அழைத்தனவும், சீறி அருளாதே!
அவனையும் நண்பனாகக் கொண்டு அழைத்தமைக்காக, எங்களை எல்லாம் சீறி அருளாதே-வா? :)

//எனக்கு முத்தமிழும் தெரியாதே. ஒரு தமிழால் வைதால் என்னை வாழவைப்பானா மாட்டானா? புதசெவி. :-)//

ராகாவா, குமரன் செவி குளிர உபதேசி! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உன்னன்னா கவனிக்கிறதா சிந்திக்கிறதா?//

உன்னுதல் என்றால் ஒருநிலை! சிந்தித்தல்! தியானம்!
உன்னிப்பா கேக்குறான்-ன்னு சொல்றோமே! வேறெந்த distraction-உம் இல்லாமல், அது ஒன்னையே கேக்குறான்-ன்னு தானே பொருள்?

//உன்னித்தெழுந்தங்கறதுக்கும் கூர்மைன்னு பொருள் சொன்னார். நீங்க சிந்திக்கிறதுன்னு சொல்றீங்க? புதசெவி. :-)//

தவறு! ராகவனுடன் மாறுபடுகிறேன்! :)

ஊன் இடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
என்று ஆண்டாள் சொல்வாளே, உன்னி-ன்னு!

பாட்டுல முலை எழுந்தது-ன்னு எல்லாம் வருது!
அடியேன் அப்பாவிச் சிறுவனாச்சே! நான் எப்படி வெளக்குவது? :)

காதலன் கண்ணனைக் கண்டதும் உன்னித்து எழுந்தனவாம்! அது எப்படிக் கூர்மையாக எழும்?
கூர்மை=Sharp!
விம்மிப் புடைக்கும்! கெட்டிப்படும்! ஆனால் Sharp ஆகுமா? :)
தட முலை என்று வர்ணித்த சங்கக் கவிகள் கூட கூர் முலை என்று வருணிக்கவில்லை!

உன்னித்து எழுந்தன என்றால் கூர்மையாய் எழுந்தன என்று பொருள் இல்லை!
ஒருநிலையுடன் எழுந்தன என்றே பொருள்! வேறெவர்க்கும்/வேறெதற்கும் எழாது, அவன் ஒருவனுக்கே எழுந்தன! ஒருநிலையுடன் எழுந்தன!

தியானம்/ஒருநிலையின் போது வேறெங்கும் கவனம் செல்லாது!
அதே போல் காமத்தின் போதும், வேறெங்கும் கவனம் செல்லாது!
காமத்தின் போது அனைத்தும் மறந்து காமம் ஒன்றில் மட்டும் ஒருநிலைப்படுகிறாயே! எனவே காமமே தியானம் தான் என்பார் ஓஷோ! :)

அது போல்
உன்னித்து எழுந்தன தடமுலைகள்!
அவனையே நினைத்ததால் புடைத்து எழுந்தன தடமுலைகள்! வேறெந்த distraction-உம் இல்லாமல், அவன் ஒருவனுக்கே எழுந்தன தடமுலைகள்!

போதுமா? :)
அடியேன் அப்பாவிச் சிறுவன் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அசுரர்களுக்கு முருகன் உதவி செய்திருக்கிறானா? தெரிந்தவர் நீங்கள் தான். சொல்லுங்கள்//

SK சொல்லி இருக்காரு! பாருங்க!

//வீரன் சூரனை ஏன் கொன்றான் முருகன்? தெரிந்தவர் நீங்கள் தான். சொல்லுங்கள்//

அடியேன் அறியாச் சிறுவன்!
கந்த புராணச் சொந்தக் காரரை அல்லவா நீங்க கேக்கனும்?

//குருந்துன்னா என்ன? கிழவன்னா என்ன?//

குருந்து=குருத்து=இளங் குருத்து!
கொழுந்துச் செடியைக் குருத்து என்பது போல
குழந்தையையும் குருத்து, குருந்து என்றார் அருணகிரி!

கிழவன்=தலைவன்; உரிமை உடையவன்!
செல்லான் கிழவன் இருப்பின், நிலம் புலந்து,
இல்லாளின் ஊடி விடும்.

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்.

G.Ragavan said...

// தட முலை என்று வர்ணித்த சங்கக் கவிகள் கூட கூர் முலை என்று வருணிக்கவில்லை! //

எத்தனை சங்கக் கவிகள் படிச்சிருக்கீங்க ரவி? எல்லாச் சங்கக் கவிதையும் தெரிஞ்சாப்புல சொல்றீங்க. ஆணவம் பிடிச்சு வைணவ இலக்கியமெல்லாம் படிச்சுக் குடிச்சிட்டு ஜிரா பேசுன மாதிரியில்ல பேசுறீங்க. உங்களுக்கு அது தகுமா!

ஒரு பாட்டு...வரிகள் மறந்து போச்சு. காதலனும் காதலியும் தழுவிக்கிறாங்க. அப்ப காதலி காதலனோட முதுகையே தடவுறாங்க. ஏன்னு கேக்குறான் அவன். அவ சொல்றா.."இல்ல இப்பிடிக் கூருமையாயிருக்கே..உன்னத் தொளைச்சு அங்குட்டு வந்துருச்சோன்னு அச்சத்தோட தடவிப் பாக்குறேன்"

நீங்க கேக்குற தரவு எங்கிட்ட இல்லை. பாட்டு வரிகள் நினைவுக்கு இல்லை. ஆனா இது சங்கத்தமிழ்ல இருக்கு.

ஆனா ஒன்னு..என்னையப் போல மக்குகளுக்கு இவ்ளவுதான் தெரியுது. உங்களைப் போலப் படிச்சவங்களுக்குத்தான் அது சரியாத் தெரியும். நான் சொன்ன பொருள் கூடத் தப்பாயிருக்கலாம். நீங்க இல்லைன்னா சொன்னா நா மறுபேச்சுப் பேசாம ஏத்துக்கிறேன்.

G.Ragavan said...

கூர்முலைன்னு சட்டுன்னு சங்கத்தமிழ்ல வரிகள் சொல்ல முடியலை. ஆனா அருணகிரி சொல்லீருக்காரு. முருகனடியவர்களுக்கு முருகனருளாளர்களே உதவி போல.

// பாடல் 728 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான


அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்

தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் //

இதுல வர்ர கூர் கூர்தானா? முலை முலைதானா?

அருணகிரி ஏதாச்சும் தப்பாச் சொல்லீருந்தாருன்னா சொல்லுங்க. அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். :P

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

G.Ragavan said...
//எத்தனை சங்கக் கவிகள் படிச்சிருக்கீங்க ரவி? எல்லாச் சங்கக் கவிதையும் தெரிஞ்சாப்புல சொல்றீங்க//

வருக ராகவா வருக!

எந்தை வருக ரகுநாயக வருக
என்கண் வருக எனதாருயிர் வருக-அபிராம,
ராகவா வருக வருகவே! :)

முருகன் அழைத்து வராத ராகவனை முலை அழைத்து வந்ததே, அலங்காரத்துக்கு! கூர் முலையே வாழ்க நீ! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எத்தனை சங்கக் கவிகள் படிச்சிருக்கீங்க ரவி?//

சங்கமா? வ.வா சங்கம் தானே சொல்றீங்க ராகவா? :)

//எல்லாச் சங்கக் கவிதையும் தெரிஞ்சாப்புல சொல்றீங்க//

அட, எனக்கு என்னாங்க தெரியும்?
அடியேனுக்குத் தெரிஞ்சது முருகனைத் தான்!
முருகன் சங்கத்தில் அமர்ந்து தந்தானாம் சங்கக் கவிதை! அம்புட்டு தான் தெரியும்!

//ஆணவம் பிடிச்சு வைணவ இலக்கியமெல்லாம் படிச்சுக் குடிச்சிட்டு ஜிரா பேசுன மாதிரியில்ல பேசுறீங்க. உங்களுக்கு அது தகுமா!//

தகாது, தகாது!
அட, யாருங்க என் நண்பனை வைணவ இலக்கியமெல்லாம் படிச்சுக் குடிச்ச ஜிரா-ன்னு சொன்னது?
உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! ஒக்க மாட, ஒக்க பாண! மிச்சத்தை நான் பாத்துக்குறேன் :)

//இல்ல இப்பிடிக் கூருமையாயிருக்கே..உன்னத் தொளைச்சு அங்குட்டு வந்துருச்சோன்னு அச்சத்தோட தடவிப் பாக்குறேன்"//

பாட்டின் வரிகள் கொடுத்தா நாங்களும் கூர்மையைக் கொண்டாடி மகிழ்வோம்-ல! :)
தேடிக் கொடுங்க ராகவா! ப்ளீஸ்!

//ஆனா ஒன்னு..என்னையப் போல மக்குகளுக்கு இவ்ளவுதான் தெரியுது//

நீங்க மிக்கு! நாட் மக்கு!
மிக்க பல அறிந்த மிக்கு! :)

//உங்களைப் போலப் படிச்சவங்களுக்குத்தான் அது சரியாத் தெரியும்//

படிச்சவனா? நானா?
நீங்க வேற! நானே படிச்சவங்களைப் பாத்து பயந்து பயந்து ஓடறேன்!
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா,
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்! :)

//நீங்க இல்லைன்னா சொன்னா நா மறுபேச்சுப் பேசாம ஏத்துக்கிறேன்//

சேச்சே...
என்ன ராகவா இது?
யார் பிழையாகச் சொன்னாலும் பிழை பிழை தானே!

அடியேன் பிழைகளை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வேனே!

இன்னிக்கி கூட ஸ்ரீதர் அண்ணாச்சி கிட்ட பிழை ஏத்துக்கிட்டேன்!
இப்போ அஞ்சு நிமிடத்துக்கு முன்னாடி கூட, குமரன் எழுத்துப் பிழை சுட்டிக் காட்டினார் ஆச்சார்ய ஹிருதயம் சுலோகத்தில்!
ஏத்துக்கிடுவேன் ஜிரா ஏத்துக்கிடுவேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
//அருணகிரி ஏதாச்சும் தப்பாச் சொல்லீருந்தாருன்னா சொல்லுங்க. அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். :P//

ஹா ஹா ஹா
நான் ஏதாச்சும் தப்பா சொல்லி இருந்தேன்னா சொல்லுங்க! உங்களுக்காகவே நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். :P

//கூர்முலைன்னு சட்டுன்னு சங்கத்தமிழ்ல வரிகள் சொல்ல முடியலை//

தேடிப் பார்த்துச் சொல்லுங்க ராகவா!

//ஆனா அருணகிரி சொல்லீருக்காரு. முருகனடியவர்களுக்கு முருகனருளாளர்களே உதவி போல///

ஆமா,
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் அடியேனுக்கு அவர் தானே உதவி! :)

//தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை//

அருமை! அருமை!
அருணகிரி கூர் முலை-ன்னு சொல்லி இருக்காரா?
சங்கக் கவிகள் தான் சொல்லனுமா என்ன? அதான் சந்தக் கவி சொல்லிட்டாரே!
அடியேன் பிழையைப் பொறுத்தருளுங்கள் ராகவா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ஜிரா
அப்படியே உங்ககிட்ட இன்னொரு உதவி கேட்டுக்கறேன்!

ஆண்டாள்,
உன்னித்து எழுந்தன தட முலைகள் ன்னு சொல்கிறாள்!

இதற்குப் பொருள்:
அவனை உன்னித்ததால் (அவனைச் சிந்தித்த மாத்திரத்தில்),
என் தட முலைகள் எழுந்தன என்று தான் நினைத்துக் கொன்டிருந்தேன்!

உன்னித்து = கூர்மை/Sharp என்ற பொருளில்,அருணகிரி பாடி உள்ளாரா?
அருணகிரியை உங்களை அல்லால் வேறு யார் அறிவார்கள்? அடியோங்களுக்கு அறியத் தாருங்களேன்!
வேறு ஒரு சங்கக் கவி உன்னித்து=கூர்மை என்று சொல்லி இருந்தால் கூட ஓக்கே தான்! தருவீர்களா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ஜிரா
கந்தர் அலங்காரப் பதிவுக்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!
முலை பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால்...

ஆணவ மலம்=சூரன்
இதுவே பதிவின் மையமான கருத்து!
தத்துவ விளக்கம் எல்லாம் சரி தான்!

ஆனால் சூரன் ஆணவமாய் அப்படி என்ன தான் செய்தான்?

நடைமுறை வாழ்வில் அவன் வதம் சரியா என்பதே சிலர் தேடலின் கேள்வி!
கந்த புராண நிகழ்வுகளைக் கொண்டு இதைக் கொஞ்சம் விளக்க வேண்டும்!

வந்தது வந்து விட்டீர்கள்!
முருகனடியவர்களுக்கு முருகனருளாளர்களே உதவி! இதற்குக் கொஞ்சம் உதவி செய்யுங்களேன்!

குமரன் (Kumaran) said...

எப்படியோ இராகவன் இங்கே வந்துட்டார். சொல் ஒரு சொல் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது. ஆனால் இன்னும் அவர் திருமுருகாற்றுப்படை படிக்க வரலையே? எட்டிப் பார்த்தது தெரியும். ஆனால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார் போலும். :-(

Raghav said...

//நடைமுறை வாழ்வில் அவன் வதம் சரியா என்பதே சிலர் தேடலின் கேள்வி! //

முருகப்பெருமானின் அவதார நோக்கமே சூர வதம் தான் என்று கேள்விப்பட்டுள்ளேன். பெரியவர்கள் (பொதுவா சொல்றேனுங்க) விளக்கம் அளித்தால் நல்லது.

மதுரையம்பதி said...

நிறையத் தெரிந்து கொண்டேன். நன்றி.

இடுகைகள் இட்ட பின் மெயில் ஏதாச்சும் அனுப்பினா உடனே படிக்க ஏதுவாகும். செய்வீர்களா கே.ஆர்.எஸ்? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆனால் இன்னும் அவர் திருமுருகாற்றுப்படை படிக்க வரலையே? எட்டிப் பார்த்தது தெரியும். ஆனால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார் போலும். :-( //

யாதும் சுவடு படாமல்
நெதர் லாந்து அடைகின்ற போது
காதல் கதைகளில் கலக்கும்
ராகவன் வருவது கண்டேன்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
முருகப்பெருமானின் அவதார நோக்கமே சூர வதம் தான் என்று கேள்விப்பட்டுள்ளேன்.//

அடியேனும் அப்படித் தான் கேள்விப்பட்டுள்ளேன்!
சூர வதம், திருமணத்துக்குப் பிறகு முருகன் திரு வரலாறு அவ்வளவாக காணலாகவில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
நிறையத் தெரிந்து கொண்டேன். நன்றி//

எல்லா நன்றியும் முருகனுக்கே!

//இடுகைகள் இட்ட பின் மெயில் ஏதாச்சும் அனுப்பினா உடனே படிக்க ஏதுவாகும். செய்வீர்களா கே.ஆர்.எஸ்? :-)//

ஆகா...சரி செய்யறேன்-ண்ணா! முன்பெல்லாம் மெயில் அனுப்புவேன்! இப்போ சோம்பேறி ஆயிட்டேன் போல! இனி மயில் அனுப்பறேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
//தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் //

இதுல வர்ர கூர் கூர்தானா? முலை முலைதானா?
அருணகிரி ஏதாச்சும் தப்பாச் சொல்லீருந்தாருன்னா சொல்லுங்க. அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்//

ராகவா...
ஒரு பொருளை, எத்தன்மைத் தாயினும் "மெய்ப்பொருள்" காண்பது அறிவு! அதற்குத் தான் இது போன்ற கருத்தாக்க உரையாடல்கள்!

ஆனால், ரவி ஏதோ "விட்டுக் கொடுக்காமல்", சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகிறான், "தான் என்ற திமிர் பிடித்தவன்" என்று நினைத்தீர்களேயானால், நான் நிறுத்தி விடுகிறேன்!

இன்று "கூர்முலை" பற்றிச் சங்கத் தமிழ் வாசித்ததால், இங்கும் எட்டிப் பார்த்து, சிலது சொல்ல விழைந்தேன்! என்னை உங்கள் கருணையால் தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்!

சாதாரணமாகவே யோசித்துப் பாருங்கள்!
உன்னித்து எழுந்தன தட முலை! = கூர் முலை = கூர்மையான (Sharpஆன) முலை என்றால் குழந்தைக்குப் பால் ஊட்டுவது எப்படி?

ஒவ்வொரு சின்னப் பொருளையும் பார்த்து பார்த்து, குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே, என்று எடுத்து வைக்கிறோம்! அப்படி இருக்க "SHARP" ஆன முலை என்றால் எப்படிப் பால் ஊட்டுவாள்? வாய் கிழித்துக் கொண்டு போய் விடாதா?

சரி, தாய்மையை விட்டு காதலுக்கும் காமத்துக்கும் வருவோம்!
முலையின் கூர்மை குத்தி முதுகில் வெளிப்பட்டது என்பது எங்கோ ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் தான் தற்குறிப்பேற்றம்! அந்தச் சங்கப் பாடலை இங்கே வையுங்கள் பார்ப்போம்!

கவிதைக்கு காமம் அழகு!
காமத்துக்கு கவிதை அழகு!
அந்த அழகிய காமத்தில் கூட "உன்னித்த முலை" என்பது "புடைத்து எழுந்த முலை" என்றே சங்கத் தமிழ் மொழியில் பேசப்படுகிறது!

காதலன் தழுவும்/சுவைக்கும் முலை, கூர்(SHARP) முலை என்றால், கலவி நடக்காது! களரி தான் நடக்கும்! ரத்தக் களரி! :))

நகக் கீறல்கள் கூடப் பரவாயில்லை! :))
ஆனால் நீங்கள் சொல்லும், "கத்தி போல் முதுகில் குத்தி வரும் கூர் முலை"க்கு எந்த ஆணும் இன்பமா இருக்க மாட்டான், உஷாரா இருக்க ஆரம்பிச்சிருவான்! :))

என்ன சொன்னீங்க? - அருணகிரி தப்பாச் சொன்னாரா? அவரு என்றுமே தப்பாச் சொல்லலை! பார்ப்போமா?
*** அளவிய கோடு போல், வினை அளவளவான கூர்முலை, அதில் முகம் மூடு ***

அளவு அளவான கூர் முலையாம்! அதில் முகம் மூடுகிறானாம்! Sharp-ஆன பொருளிலா முகம் மூடுகிறான்? kaumaram.com என்னும் திருப்புகழுக்கு என்றே இருக்கும் முருகன் தளத்தில், என்ன பொருள்-ன்னு பாக்கறீங்களா?
http://www.kaumaram.com/thiru/nt0728.html

அளவு அளவான கூர் முலை = அளவே அளவாகக் கொண்டதுமான, "மிக்கெழுந்த மார்பகத்தாலும்"

மிக்கு எழுந்த மார்பகம் = புடைத்து எழும் முலை = உன்னித்து எழுந்தன என் தட முலைகள் = தோழி கோதை சொல்வதும் அஃதே!

எப்படி???
இந்த முருகன் அடியேனுக்கு, முருகன் அருளாளர்களே உதவி போல!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உன்னித்து:
----------

*உன்னித்து* வைத்த பொருளோடு இவை நான்கும்
மன்னிய ஏதம் தரும் - பதினெண்கீழ்க் கணக்கு - ஆசாரக் கோவை

*உன்னித்து* துயிலும் பொழுதின் கண்
உமையோர் பாகம் உடையார் தாம் - அப்பர் தேவாரம்

*உன்னித்து* மற்றொரு தெய்வம் தொழாள் - திருவாய்மொழி

மண்டி மார்பினில் விண்டதாம் என
வந்த *கூர்முலை* மடவார் தம்
வஞ்சமாம் அதில் நெஞ்சு போய் மடி
கின்ற மாயம் தான் ஒழியாதோ்? - அருணகிரி திருப்புகழ்

ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் **உன்னித்தே** - ஆழ்வார்(?) அருளிச் செயல்

*உன்னித்து* உணர்ந்த முலை ஆளும் வித்தகனை - பெரிய திருமொழி

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கே என்று
**உன்னித்து** எழுந்த என் தடமுலைகள் - கோதைத் தமிழ்

உன்னித்தல் = கூர்தல் = திரண்டு/புடைத்து ஒருநிலையாக (focused-ஆக) எழுதல்!

உம்...உன்னித்து எழும் தட முலைப் பேச்சுக்கே இவ்வளவு சுவையா? ஐ மீன் தமிழ்ச் சுவையா? :)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP