Monday, July 28, 2008

தலையில பிள்ளையார் குட்டு குட்டிக்கறாங்களே! - ஏன்?

அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்! மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்! ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!
நமக்குச் செய்து கொண்டால் "அகங்காரம்"! இறைவனுக்குச் செய்து கொண்டால் "அலங்காரம்"!

மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்! = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!
இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! - தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!

(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

ஒரு குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது! அப்போ என்ன நடக்கிறது?
நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய், நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?
கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்
முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?

* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?
* அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?
* அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்! கந்தர் அலங்காரம்!
பழனிமலையில் எத்தனை அலங்காரம் அந்தக் குழந்தைக்கு?
* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம் (இயற்கையான ஆண்டி உருவம்)
* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம் (காவி உடையில்)
* சிறுகாலைச் சாந்தியில் 8:00= பால முருகன் அலங்காரம் (குழந்தையாகத் தோற்றம்)
* பெருகாலைச் சாந்தியில் 9:00= வேட்டுவர் அலங்காரம் (வேடன கையில் வில்லுடன்)
* உச்சி காலத்தில் 12:00= வைதீக அலங்காரம் (வேதம் ஓதும் அந்தணர்)
* சாய ரட்சையில் 6:00= ராஜ அலங்காரம் (அரச உடையில்)
* அர்த்த சாமத்தில் 8:00= விருத்த அலங்காரம் (முதிய உருவம்)


முதல் பாட்டுக்குப் போகலாமா?

திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும், மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்! அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!

கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!
அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!
அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!
இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!

அடல் அருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்; வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!


இதாங்க எளிமையான பொருள்: வருபவர்கள் எல்லம் தடக்-படக் என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!
அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் கடக்-தடக் என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!
அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!
அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்! அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!


இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!

அருணன்=சூரியனின் தேரோட்டி! அவன் சூரியனுக்கு முன்னரே உதயம் ஆவான்! அதான் அருணோதயம்-ன்னு பேரு! அவன் உதிக்கும் வேளையில் வானம் வெளிச்சமா இல்லாம, செக்கச் செவேர் என்று இருக்கும்! சிற்றஞ் சிறு காலை என்னும் பிரம்ம முகூர்த்தம் அது!
அதே போல் சிவபிரான் ஜோதிப் பிழம்பாய்ச், செக்கச் செவேர் என்று இருக்கும் தலம் = அருணை! அருண கிரி! அருணாச்சலம்!

அடல்-ன்னா வலிமை! அடல் அருணை-ன்னா வலிமை பொருந்திய அருணை மலை! மலைக்கு என்னாங்க பெருசா வலிமை?
நினைத்தாலே முக்தி தர வல்ல வலிமை இருக்கு அருணை மலைக்கு! அதான் அடல் அருணை!

அந்த அடல் அருணைத் திருக் கோபுரத்தே, அதன் வாயிலுக்கு வடக்கே சென்று, கண்டு கொண்டேன்! யாரை? பிள்ளையாரையும், முருகனையும்!
வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன், கோபுரத்து இளையனார்! கோபுரத்து இளையனார் சன்னிதி அருணகிரி மண்டபத்தின் உள்ளே இருக்கிறது!
அதற்குப் பக்கத்திலேயே வன்னி மர விநாயகர் சன்னிதி! அண்ணனும் தம்பியும் அருகருகே!
அந்த விநாயகர் எப்படி இருக்காரு-ங்கிறீங்க? - சர்க்கரை மொக்கிய கை, கட தட-ன்னு இருக்காரு!
நண்பர்கள் கன்னா பின்னா-ன்னு சாப்பாட்டை வச்சிக் கட்டினா, என்ன சொல்லுவோம்? மவனே நல்லா மொக்குறியா-ன்னு கேட்போம் இல்லையா?
அப்படிச் சீனிப்பண்டங்களை மொக்குறாரு கணபதி! கடக், தடக்-ன்னு தும்பிக்கையால மொக்குறாரு! யானைக்குப் பழம் ஊட்டி விட்டுப் பாருங்க! இதே கடக்-தடக் சவுண்டு வரும்! :)

கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே = கும்பம் போல் வயிறு! பானை வயிற்றுப் பிள்ளையார்! அவர் களிறு! ஆண் யானை!
அப்படின்னா அவரு தம்பியும் களிறு தானே! அதான் முருகனையும் இளைய களிறுன்னு சொல்லிட்டாரு அருணகிரி!
இப்படி அண்ணனும், தம்பியும் ஒன்னாச் சேர்ந்து இருக்கும் அழகான முதல் பாட்டு!

சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!
புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு? யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)


வருவார் தலையில், தட-பட எனப் படு குட்டுடன்
அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?
அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்! மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க? தடக், படக் என்று குட்டிக்கறாங்க! சரி, ஏன் குட்டிக்கணும்?

காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!
ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?

என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?
ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!

அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்! காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!
பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க... அச்சோ.....
ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்! அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!
* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!
* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!
அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! - தோன்றியது பிள்ளையார் குட்டு!

இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!
முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
தட-பட எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தனின் அலங்காரச் செய்யுளைத் துவக்குவோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!

கந்தனுக்கு அலங்காரம் கேஆரெஸ் செய்யலாமா?

சில பல தனிப்பட்ட காரணங்களுக்காக, வீட்டில் அம்மா, எனக்காகக் கந்தர் அலங்காரத்தை ஜபிக்கத் தொடங்கியுள்ளார்கள் போலும்! விராலிமலைக்கு என்னை அழைத்துச் சென்றதும் ஞாபகம் இருக்குங்களா?
கந்தரலங்காரம் சொல்லியதன் பயனாக, இப்போது தான் அம்மா சற்றே மன நிம்மதி பெற்றதாகச் சொல்கிறார்கள்! :)

அன்று இந்தியாவிற்குத் தொலைபேசினேன்; அப்போது....

"டேய் சங்கரா, என்னென்னமோ எழுதற! இப்போல்லாம் நான் கூட உன் பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்! நம்ம குல தெய்வம் முருகனைப் பத்தி எழுதேண்டா! "

"அதான் அப்பப்போ எழுதறேனேம்மா...முருகனருள்-ன்னு ஒரு வலைப்பூவில் எழுதறேன்! நான் எழுதிய அறுபடை வீட்டுக் காவடிச் சிந்தை, நண்பர்கள் எல்லாரும் விரும்பிப் பாடினார்கள்! நம்ம விராலிமலை, கந்த கோட்டம், அப்படி இப்படி-ன்னு எழுதிக்கிட்டு தான் இருக்கேம்மா!"

"அப்படியா? சரி சரி! நான் இப்போ தான் தட்டித் தடவி, உன் ப்ளாகை எல்லாம் பாக்குறேன்! அதான் தெரியலை போல!
நீ சொன்னியே-ன்னு மாதவிப்பந்தல்-ன்னு ஒரு சைட்டு! அதுக்கு மட்டும் தான் போனேன்! அது என்ன முருகனருள்? அது வேற தனியா வச்சிருக்கியா?
சரி, போவுது! சிவலிங்கம், சிவாராத்திரி, சிதம்பரம்-ன்னு எல்லாம் எழுதற போல! உண்டியல்-ல காசு போடாதீங்க-ன்னு எல்லாம் எழுதறியே! ஏன்-டா இப்படி எல்லாம் எழுதற?"

"அட விடுங்கம்மா! சில நேரங்களில் சில உண்மைகளைச் சொல்லித் தானே ஆகணும்! நீங்க எங்கள வளர்த்தா மாதிரியே, பூச்-பூச்சின்னு இருந்தா, நல்ல விசயங்கள் எல்லாம் அமுங்கித் தான் போவும்! அப்பப்ப சொல்லணும்!
இனி நான் இமெயில்-ல அனுப்பறது மட்டும் படிங்க, போதும்! எல்லாத்தையும் படிக்காதீங்க!"

"சரி, அது என்ன கோவிந்தா-ன்னு சொல்லும் போது மட்டும் நல்லா உருகி உருகி எழுதற! ஏதோ பெரிய பெரிய விளக்கமா வேற இருக்கு! நல்லாத் தான் இருக்கு! எனக்கே நல்லாப் புரியுதுடா!
ஆனா நம்ம வூடு இருக்குற வூட்டுல, இதெல்லாம் எங்க போயி படிச்சேன்னு தான் புரியலை! எல்லாம் உங்க ஆயா கொடுத்த செல்லம்! சின்ன வயசுல நம்ம கிராமத்துக் கோயில்-ல அந்த நாமக்காரப் பசங்க கூட, உன்னைச் சேரவே வுட்டுருக்கக் கூடாது!"

"அம்மா, கம்பேர் பண்ணிப் பேசனீங்கன்னா, எனக்குக் கோபம் வரும்! ஸ்டாப் இட்!
அதான் நீங்க கேக்கறத எழுதறேன்-ன்னு சொல்லிட்டேன்-ல!
நீங்க என்னை யாரோடும் பழக வுடலைன்னாக் கூட, வரவேண்டியது தானா வந்து சேரும்! வெளிச்சமே வராத காட்டுக்குள்ள, தாமரைப் பூவுக்கு, சூரியனை வரவுடாம குடை பிடிச்சிப் பாருங்களேன்? சூரியனுக்குப் பூக்குதா பூக்கலையா-ன்னு தெரிஞ்சி போயிரும்! இன்னொரு வாட்டி இப்படிக் கம்பேர் பண்ணிப் பேசாதீங்க! சொல்லிட்டேன்! ஆமா!"

"சரிடா, சரிடா! கோச்சிக்காதே! எலக்கியமாப் பேசி எங்கள மடக்க நல்லாவே கத்து வச்சிக்கிட்டு இருக்கப்பா நீ! சரீ....இந்தக் கந்தர் அலங்காரம் தினம் படிக்கச் சொன்னாங்களே! இது ஒன்னுமே எனக்குப் புரியலை! நீ பதம் பிரிச்சி எழுதிக் கொடுத்தீல்ல! அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! இதுக்கு அர்த்தம் சொல்லிப் படிச்சா நல்லா இருக்கும்-ல? பேசாம நீயே இதுக்கு அர்த்தம் சொல்லி எழுதேன்டா!"

"உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா? நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே உக்காந்து சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"

"ஏன்-பா?"

"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க! சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா? அவரு எழுதினா என்ன, நான் எழுதினா என்ன? எங்க ரெண்டும் ஒன்னு தான்!"

"ஊம்ம்ம்ம்ம்ம்"

"என்ன உம்ம்ம்ம்? மொத்தம் 108 பாட்டு இருக்கு! ஒரு தொகையலா வாரா வாரம் ஒன்னு தான் போட முடியும்! அப்படிப் போடும் போது, அர்த்தம் தனியாப் படிச்சிக்கோங்க! கூடவே இப்போ நீங்க தினமும் சொல்லுறதைச் சொல்லிக்குங்க! ஓக்கேவா?"

"சரிடாப்பா!"

"என்ன சரிடாப்பா? இப்படிப் பேசிப் பேசியே, காரியம் சாதிச்சிக்குவீங்களே! இதெல்லாம் என் கிட்ட தானே நடக்கும்? உங்க பொண்ணு கிட்ட பேசுங்களேன் பார்ப்போம்?"

"அட, அது இன்னொருத்தரு வூட்டுக்கு விளக்கேத்த போன பொண்ணுப்பா! அதைப் போயிச் சொல்லிக்கிட்டு..."

"உக்கும்...இன்னொருத்தர் வீட்டுக்குப் போயி எல்லா ரூம்-லயும் நல்லாவே வெளக்கு ஏத்துதாம்! மாசா மாசம் கரன்ட் பில்லு கட்டியே அழுவறாரு மாப்பிள்ளை! போதும் உங்க மொக்கை! நான் ஃபோனை வைக்கிறேன்! சாயந்திரம் அப்பா வந்தாப்பாரு கூப்புடுறேன்! பை!"

"கந்தர் அலங்காரம்....மறந்துடாத டா"

"பை..."மேலே படிச்சீங்க-ல்ல! அதான் அடியேன் கந்தர் அலங்காரம் செய்ய வந்த கதை! :)

சரி, அலங்காரப் ப்ரியன்-ன்னு ஒருத்தருக்குத் தான் பேரு! அவருக்கு அலங்காரம்-ன்னா, இவனுக்கும் அலங்காரமா? இது என்ன மாமன்-மருமகன் கூட்டணியா?

அலங்காரம்-னா என்னங்க?
நாம பண்ணிக்கிட்டா மேக்கப், ஷோ, ஒப்பனை! ஆனா இறைவனுக்குப் பண்ணா மட்டும் அலங்காரம்!

எதுக்கு இறைவனுக்கு அலங்காரம் பண்ணனும்? சும்மா அப்பிடியே கும்பிட்டாப் போதாதா?
மலர் அலங்காரம், நகை அலங்காரம், உடை அலங்காரம், இசை அலங்காரம், பாட்டு அலங்காரம், தமிழ் அலங்காரம்...இம்புட்டும் எதுக்கு?

காதலி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்தா, சூப்பரா இருக்கும்! வச்ச கண்ணு வாங்காம பார்க்கலாம்! "ஏய், இந்த ப்ளூ ஷேட்-ல, க்ரீன் பேட்டர்ன் போட்ட சாரீ-ல, நீ மயில் மாதிரி மின்னுறப்பா"-ன்னு வழியலாம்! அவளும் சந்தோசப்படுவா!

ஆனா இறைவனுக்கு அலங்காரம்?
கந்தனுக்கு அலங்காரம்?
தேவையா இதெல்லாம்?
சொல்லுங்க மக்களே, ஏன் அலங்காரம்? :)

முதல் வணக்கம்!

பிரணவப் பொருளான வேழமுகத்தானையும்
பிரணவப் பொருள் சொன்ன ஆறுமுகத்தானையும்
வணங்கி,
அருணகிரிநாதர் செய்தருளிய கந்தர் அலங்காரம் என்னும் இந்த நூலினைக் கைக்கொள்கிறேன்!
பொருள் சொல்லி, நயம் கண்டு, நலம் காண முயல்வோம், வாருங்கள்!
* வெறும் பாடல்களாய் மட்டுமே சொல்லாமல்,
* கதைகளாகவும், அருணகிரி வாழ்வின் சம்பவங்களாகவும்,
* ஆலயத்தில் முருகனுக்குச் செய்யும் அலங்காரங்களாகவும் சொல்லிச் செல்வேன்!

அங்கு போல், இங்கும் வந்திருந்து,
ஆதரவு தர வேணுமாய்
முருக அன்பர்களையும், நம் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது தான் ஆடிக் கிருத்திகை போச்சு! இன்று செவ்வாய்க்கிழமை...ஒவ்வொரு செவ்வாயும் செவ்வாயோன், சேயோன் அலங்காரம்...
தமிழ்க்கடவுள் முருகவேளுக்கு அலங்காரம்!
அவனருளாலே அவன் அலங்காரம்! இதோ துவங்குகிறது.....

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP