Tuesday, November 11, 2008

அலங்காரம்-11: "சும்மா" இரு! அம்-மா பொருள்!

கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!
* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா
! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!


இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!
தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து
சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?


ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :)

ஆனால் "சும்மா" இருக்கும் எல்லை-ங்கிறாரு! அங்க கொண்டு போய் முருகன் விட்டாரு-ன்னு வேற சொல்றாரு!
எல்லாம் இழந்து = ஒட்டு மொத்தமா இழந்து! - இழப்பதில் என்னாங்க பெருசா சாமார்த்தியம் வேண்டி இருக்கு? இந்த அருணகிரி ரொம்பவே "லொள்ளு" செய்கிறாரோ? ("லொள்ளு" என்ற சொல் ஒவ்வாதவர்கள், இந்த அருணகிரி "போக்கு" காட்டுகிறாரோ என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!)

இன்னிக்கி பார்க்கப் போறது மிகவும் விசேடமான பாட்டு! மிகவும் அனுபவிச்சிப் படிக்கணும்! யோசிச்சிட்டுப் படிக்கணும்! படிச்சிட்டும் யோசிக்கணும்!
அதுனால இன்னிக்கி ரெண்டு பாட்டு கிடையாது! ஒரே பாட்டுக்குத் தான் பொருள் பாக்கப் போறோம்! சரியா?

மீண்டும் அதே கேள்வி! - "சும்மா இரு" என்றால் என்ன?
* எதுவும் பேசாமல் மெளன விரதம் இருப்பதா? சொல்+அற ன்னு வேற சொல்றாரு!
அதுவாத் தான் இருக்குமோ? ஆனா பின்னாடியே பாடும் பணியே பணியாய் அருள்வாய்-ன்னு வேற சொல்லிடறாரு! ஆக, அது கிடையாது!

* எந்த வேலையும் செய்யாம, அலட்டிக்காம, சும்மா இருப்பதா?
* கடமையைச் செய், பலனை எதிர் பார்! (பாராதே)-ன்னு சும்மா இருப்பதா?
* கடமையைச் செய்யும் போது, வருமா வருமா-ன்னு பலனை எதிர்பார்த்துக்கிட்டே செய்யாம, கடமையைச் சிதறாமல் செஞ்சி சும்மா இருப்பதா?

* யார் கூடவும் எதுவும் பேசாமல், யார் கூடவும் எதுவும் வச்சிக்காமல், சும்மா ஒதுங்கி இருப்பதா?
* சரி, யார் கூடவும் எதுவும் வச்சிக்கலை! ஆனால் தனியா இருந்தால் கூட மனம் எங்கெங்கோ போகுதே! என்ன செய்ய?
* பழைய காதலி வீட்டுக்குப் போயி வருது! நிலத் தகராற்றில் வெட்டிக் கொன்றவன் வீட்டுக்குப் போயி வருது! கடனை அடைக்காமல் நின்ற கோர்ட் வாசலுக்குப் போயி வருகிறது!

* பாவனா வீட்டுக்குப் போயி வருது! கள்ளப் படம் பார்க்கப் போயி வருது! :)
* ஈழத்துக்குப் போய் வருது! பின்னூட்டத்தில் சண்டை போட்டவர்கள் பதிவுக்கு எல்லாம் கூடப் போயி வருது! :)

* ஒரு வருசமா பேசாமல் கோபமாய் இருக்கும் என் உயிர் நண்பன் வீட்டுக்குப் போயி வருது!
* திருமலை மேல் ஏறி, தடுப்பார் யாருமில்லாமல் கருவறைக்குள் போயி வருது!
* இது நல்லது தானே! மனசால சாமியைப் பார்ப்பது நல்லது தானே! அதைக் கூடச் செய்யாமல் "சும்மா இரு"-ன்னா எப்படி இருக்குறதாம்? அடப் போங்கப்பா! :)

இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?

மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா?
அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல, எனை விட்டவா!


ஆங்...இப்போ தாங்க கொஞ்சம் லேசுமாசாப் புரியிது!

நம்மாலேயும் சும்மா இருக்க முடியுமாம்! எப்படி? = எல்லாம் இழந்து! எல்லாம் இழந்தாச் சும்மா இருக்கலாமாம்!
ஆசையைப் பாருங்க! எதை எல்லாம் இழக்கச் சொல்றீங்க? = சிந்தனை, சொல், செயல்! (மனம், வாக்கு, காயம்)! அட இதெல்லாம் இழந்தா ஜடமா ஆயிட மாட்டோமா? என்னா பேச்சு பேசறீங்க நீங்க?

உம்ம்ம்ம்ம்.....அன்னிக்கி வீட்டுல செம ரகளை!
வேறு யாருக்கு? எனக்கும் தங்கச்சிக்கும் தான்! வாடீ, போடா-ன்னு எல்லாம் வாய் வார்த்தை முத்திப் போயி, கை கலப்பும் வந்தாச்சு! மனசுக்குள்ள வேற கறுவுகிறோம்...உன்னைய இன்னிக்கி ஒரு கை பாக்காம வுடறதில்லை! ஒரே ரணகளம்! :)

எங்கிருந்தோ அம்மா ஓடியாறாங்க! இந்தக் காட்சியைப் பாத்துட்டு திகைச்சிப் போயி நிக்குறாங்க! ஒன்னுமே சொல்ல முடியலை அவங்களால! இதுங்களுக்கு இப்போ எடுத்துச் சொன்னா ஒன்னும் மண்டையில் ஏறாது-ன்னு நல்லாத் தெரியுது! குரலை உசத்தி ஒரு கத்து கத்துறாங்க பாருங்க! அவிங்களுக்கு மூச்சு வாங்குது!
"யப்பாஆஆஆ...கொஞ்சம் "சும்மாஆஆஆஆ" இருக்க மாட்டீங்களா???"

அவ்வளவு தான்! ஒரே நிசப்தம்!
* பாவி! உனக்கு இருக்குடா பூசை என்று கறுவுதல் நின்னு போச்சு = மனம்!
* நீ தான்டீ காரணம் என்ற பதிலுக்குப் பதில் பேசுவது நின்னு போச்சு = வாக்கு!
* கை நீட்டி அடிச்சிப் பேசறதும் நின்னு போச்சு = காயம்(உடல்)!
இப்படி மனம்-வாக்கு-காயம், அத்தனையும் ஓர் நொடிக்குள் அடங்கிப் போச்சி! ஏன்? எப்படி?

ஏன்னா....அம்மா மேலே எங்க ரெண்டு பேருக்குமே பாசம்!
அவிங்க மூச்சு வாங்கி நிக்குறதைப் பாத்த அடுத்த விநாடி...

"எங்கள்" சொல், "எங்கள்" செயல், "எங்கள்" சிந்தனை, "எங்கள்" நியாயம், "எங்கள்" ஈகோ!
= எல்லாம் அற, எங்களை இழந்த நலம்! எங்களை "இழ"ந்தாச்சு! "சும்மா" இருந்தாச்சு!

பேச்சு வளரவே இல்லை! உம்ம்ம்ம்ம்-ன்னு ஒரே நிசப்தம் தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "அம்மா பசிக்குதும்மா, சாப்பாடு போடுங்க!" :)கந்தர் அநுபூதி:
* எல்லாம் அற, என்னை "இழந்த" நலம்! சொல்லாய் முருகா! - 2nd செய்யுள்!
* "சும்மா இரு", சொல்லற, என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - 12th செய்யுள்!
கந்தர் அலங்காரம்:
* "எல்லாம் இழந்து + சும்மா இருக்கும்", எல்லையுள் செல்ல, எனை விட்டவா!

அநுபூதியில் தனித்தனியாகச் சொன்ன தத்துவத்தை,
இங்கு அலங்காரம் என்பதால் கோர்த்து விடுகிறார் பாருங்கள் அருணகிரி!
இணைத்துப் பார்த்தால் இனிமை புரியும்!
அது துற-அறமோ, இல்-அறமோ, இணைப்பே இனிப்பு! :)

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!
எல்லாம் அற = சர்வ தர்வமான் பரித்யஜ்ய
என்னை இழந்த நலம் = (என்னை இழந்து, அவனையே) மாம் ஏகம் சரணம் வ்ரஜ!
சரணம் என்பதே நலம்! நம்மை அவனுக்கு இழந்த நலம்! நம் இழப்பு என்பது, நமக்கே நலம் ஆகி விடுவது, இங்கு மட்டுமே!

சும்மா இரு! "அம்மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே!
சும்மா இரு! சொல் அற (பேசாதே)!-ன்னு முருகன் சொல்லிட்டுப் போயிட்டான்! அம்மாடி! பொருள் ஒன்றும் அறியலையே! - அப்படியா பாடுகிறார் நம் அருணகிரி? இல்லை! இல்லை! இப்போ பாருங்க...

சும்மா இரு! "அம்- மாபொருள்" ஒன்றும் அறிந்திலனே!
"சும்மா இருத்தல்" என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!
நிர்விகல்ப சமாதி நிலை-ன்னு கூடச் சொல்லுவாங்க!

அதெல்லாம் போயும் போயும் எனக்கு வருமா? நானோ (அருணகிரி) புலனடக்கம் கற்காதவன்! ஞான-கர்ம-பக்திகள் எதுவும் உளமாரத் தெரியாது! ஆனால் தெரிந்தது போல் பேசுவேன்! ஏதோ முருக-அன்பு கொஞ்சமா நெஞ்சில் மிதக்கிறது! அவ்வளவு தான்!

அம் மாபொருள் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! ஆனாலும் முருகனருளால் "சும்மா" இருந்தேனே!
அம்- மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! என்றாலும் "சும்மா" இருக்க முடிந்ததே! எப்படி?சும்மா இருக்க மாட்டீங்களா? என்று அப்போது அம்மா கத்தினார்கள்!
அம்மா கத்தும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து, "சும்மா" இருந்தோமே!
சும்மா இரு! சொல்லற! என்று இப்போது இறைவன் கழறுகிறான்!
அவன் கழறும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து "சும்மா" இருக்க முடியாதா?

முடியாது! முடியாது! முடியாது!
நம் வேண்டுதல்களை எல்லாம் நடத்திக் கொடுக்கவே அவன்!
நமக்கு மோட்சம் கொடுக்கவே அவன்!
என்று "நம்"மை முன்னே தள்ளி, அவனைப் பின்னே தள்ளினால்? = முடியாது!

முடியும்! முடியும்! முடியும்!
அவன் முக உல்லாசத்துக்கு நாம்!
அவன் திருவுள்ள உகப்புக்கு நாம்!
என்று அவனை முன்னே தள்ளி, "நம்"மைப் பின்னே தள்ளினால்? = முடியும்!

* ஒரு பிறவிக்கான அம்மாவை முன்னுக்குத் தள்ளினோம்! "சும்மா" இருக்க முடிந்தது!
* ஒவ்வொரு பிறவிக்குமான அம்மாவை முன்னுக்குத் தள்ளினால், "சும்மா" இருக்க முடியும்!

யோகிகளாலும், ஞானிகளாலும் மட்டும் தான் "சும்மா" இருக்க முடியும் என்பதில்லை! அன்றாடங் காய்ச்சிகளான நம்மால் கூடச் "சும்மா" இருக்க முடியும்!
நல்ல விஷயங்கள் நடக்க, குடும்ப நற் காரியங்கள் நடக்க, பொது நன்மை நடக்க, அன்மீக மறுமலர்ச்சி நடக்க, மக்கள் தொண்டு நடக்க.....

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்!


மனதில் இந்த அன்பு தங்கினால்,
வாக்குச் சண்டை/உடல் சண்டை/மனச் சண்டை போட மாட்டோம்!
இப்படி மனம்-வாக்கு-காயம் எல்லாம் இழந்து, நம்மைக் கொஞ்சம் பின்னே தள்ளினால்?

என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!
சரண கதி = இதுவே அம்-மா பொருள்! "சும்மா" பொருள்!


சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!


பின் குறிப்பு:
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!

ஆனால், இதை உபன்னியாசமாகப் பேசி விட்டு, அப்புறம் ஒரு பத்தடி தள்ளியே வைத்து விடுகிறோம்! "சமாதி நிலை"ன்னு பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது! ஒதுங்கிக் கொள்கிறோம்!

அதனால் தான் விளக்கத்தை மரபு வழியில் இருந்து சற்றே மாற்றி அமைத்தேன்! வீட்டுச் சண்டையில் "சும்மா" போவதை எடுத்துக்காட்டாக வைத்தேன்!
இதில் பிழையேதும் இருந்தால், சாதனா-சாதன கர்ம நிஷ்டர்களும், சித்த புருஷர்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
நம் வலையுலக ஆன்மீகப் பெரியவர்களும் அடியேன் கருத்தினைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!

"சும்மா இரு" என்பது ஞானிகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்! என்பதைப் புரிந்து கொள்வதே அடியேன் நோக்கம்!
அம்மா, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! முருகா! முருகா!!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP