Tuesday, January 27, 2009

அலங்காரம்-14/15: சப்பாணி! மயிலு! முருகா!

சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?
அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)

சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)
"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!

முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்!
சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!
உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)

இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!
பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியாழ்வார்! அவர் தான் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி!

புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,
அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!
சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி!
- என்று பாடுகிறார்!

பின்னாளில் இதை பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!
சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்! பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!
அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!


மேலோட்டமான விளக்கம்: சிவனைத் தன் பாகத்தில் வைத்த உமையன்னை! அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள்! அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...
குழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர்! எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது! அமரர் அச்சம் நீங்கியது!

பிரிச்சி மேயலாமா?
ஒருவரைப் பங்கின் உடையாள் = ஆகா! ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா? இல்லை உமையன்னை ஈசனுக்கு இடம் கொடுத்தாங்களா?
சிவபெருமான் தானே, தனது இடப் பாகத்தை ஈந்து, அர்த்த நாரி, மாதொரு பாகன்-ன்னு பெயர் எல்லாம் பெற்றார்? இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே! சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி? :)

ஒருவரைப் பங்கின் உடையாள் = தன் பாகத்தில் ஒருவரை உடையாள்! ஆணொரு பாகி! :)
மாதொரு பாகனா? ஆணொரு பாகியா? - தீர்ப்பு சொல்லுங்க மக்களே!

குமாரன், உடைமணி சேர் திரு அரை, கிண் கிணி அசை பட = யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக? கையைத் தூக்குங்க! :)

பிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயிறு செய்து போடுவது வழக்கம்! (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்; அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது)
அரை ஞாண் தான் Dividing Line! அதுக்கு மேலே தங்கம் போடலாம்! அதுக்குக் கீழே தங்கம் கூடாது!
அந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க! எதுக்கு? :)

இன்னும் கொஞ்சம் வசதிப்பட்டவுக, உடைமணி-ன்னு செஞ்சி, நிறைய தொங்க விடுவாங்க! முருகன் வசதிப் பட்டவன் தானே! அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல? :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா! :))

குழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்! இன்னும் நடக்க ஆரம்பிக்கலை! அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை! அதான் இடுப்பில் மணி! டங், டங், டங் - டிங், டிங், டிங்! டகு டகு - டிகு டிகு! டங்கு டிங்குகு!

திடுக்கிட்டு அரக்கர் வெருவர = வெருவுதல்? என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல! சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு! :) அதே போல அருணகிரியும் சொல்றாரு! அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க! :)

திக்கு செவிடு பட்டு = எட்டுத் திசையும் காதடைக்கும் படி
எட்டு வெற்பும் = எண் திசை மலைகளும் (என்னென்ன?)
கனக பருவரை குன்றும் = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு?)
அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே = சும்மா அதிருதல்ல? அதனால் அமரர் பயம் தீர்ந்தது!

இப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது! இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது! அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்! முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!


மேலோட்டமான பொருள்:
இழிவான வாழ்க்கை! அதில் கூத்தாடும் ஐம்புலன்கள்! அதில் ஆடி ஆடிக் கலக்கம் அடைந்த அடியேன்! ஆனால் நான் பாச நெஞ்சன்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!
எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க, சப்பாணி கொட்டி-கைத்தட்டி விளையாடும் கந்தக் குழந்தாய்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!

பிரிச்சி மேயலாமா?
இந்தப் பாட்டு தான் முன்பு சொன்ன சப்பாணிப் பருவப் பாடல்!

குப்பாச = கு+பாசம் = இழிவான பாசம்! பாசத்தில் என்னங்க இழிவு?
சுயநலம் போர்த்திய பாசம்! அதான் இழிவு! பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது! ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது! இதான் குப்பாசம்! நப்பாசையால் வந்த குப்பாசம்!

வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் = இந்தப் போலியான பாச நாடகத்தில் அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க!
* கண் = பார்வை = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி! அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம்! நான் அப்படித் தான் இருப்பேன்! நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்! :)
* காது = கேட்டல் = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும்! நான் விரும்புவேன்! அதையே நீயும் பேசணும்!
* நாக்கு = ருசித்தல் = என் ருசியே எனக்கு முக்கியம்! நல்ல ருசியா? தீய ருசியா? - கவலையில்லை! எனக்குப் பிடிச்ச ருசியா! அது போதும்!
* மூக்கு = வாசனை = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன்! அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன்! ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை!
* உடல் = உறவு = உணர்ச்சி = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன்! ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல! தன்னை இழக்கும் கூடல் அல்ல! தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்!

அருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான்! ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை! ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......
கடைசியில் சொந்த அக்காவே, "வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்", என்ற போது தான் அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது! வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்!

கொட்பு அடைந்த = கலக்கம் அடைந்த மனசு! அதிலேயே ஊறி ஊறி இருந்தா, குளம் கலங்கலாத் தானே இருக்கும்?
இப் பாச நெஞ்சினை ஈடேற்றுவாய் = குப்பாசம் இல்லாமல் இப்பாசம், இறைப்பாசம் கொண்டேன்! முருகா! முருகா! முருகா! என்னை ஈடேற்றுவாயே! ஈடேற்றி, வீடேற்றுவாயே!

ஈடு-ன்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்! ஈடேறுதல்-ன்னா என்ன?

இரு நான்கு வெற்பும், அப் பாதியாய் விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய = அட! முன்பு சொன்னதே தான்! எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க!
குழந்தையிடம் பேசுவதால் அதே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்றாரு போல அருணகிரி! :)

சப்பாணி கொட்டிய = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை!
அவன் நடை பழகி, கீழே விழலை! நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம்! ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்!

நம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது! சப்பாணி கொட்டுகிறது!
சப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே!
என்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!கை ஆறிரண்டு உடை சண்முகனே = ஆறிரு கைகள்! பன்னிரு கையால் பாலனைக் காக்க! சரணம் சரணம் சண்முகா சரணம்!

முருகப் பெருமானின் திருக்காட்சியைச் சொல்லும் போது, இந்தப் பன்னிரு கர வர்ணனையைச் சொல்வதுண்டு! ஆறு முகம்! ஆறிரு தடந் தோள்!
* முருகனுக்கு முகங்கள் ஆறு! = தமிழ் வல்லின, மெல்லின, இடையினங்கள் ஆறு!
* முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு! = தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு!
* முருகனுக்கு கண்கள் பதினெட்டு! = தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு!
* முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல்! = தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ
இப்படி உருவிலேயே தமிழாய் நிற்கிறான் முருகப் பெருமான்! தமிழ்க் கடவுள் முருகவேள் போற்றி போற்றி!

இது மிகவும் நயமான வர்ணனை! எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! இலக்கிய நயத்துக்காகச் சொல்லிய வர்ணனை! அவ்வளவு தான்!
ஆனால் இதை வைத்து, முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்-ன்னு நிலைநாட்டப் பார்ப்பார்கள் சில பேரு! அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும்! ஹா ஹா ஹா! :) இங்கே பாருங்க! :)

இந்த ஆறு தலை, பன்னிரெண்டு கை, பதினெட்டு கண் - இதெல்லாம் தமிழ் மரபுப் படி, எந்தவொரு தமிழ் நிலத் தெய்வத்துக்கும் இல்லை!
அது குறிஞ்சி சேயோன் ஆகட்டும், இல்லை முல்லை மாயோன் ஆகட்டும்! இருவருமே இயற்கைத் தெய்வங்கள்! இயற்கையான உருவம்! இயற்கையான வழிபாடு தான்!

இப்படிப் பல கைகள், பல தலைகள், இவை எல்லாம் பின்னாளில் வடமொழிப் பண்பாடும், தென்தமிழ்ப் பண்பாடும் கலந்த பின், வடவர் கதைகளில் இருந்து தோன்றியது-ன்னு தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் இவர்களே சொல்லுவாங்க!

அப்படி இருக்க, பன்னிரெண்டு கரம், எப்படி பன்னிரண்டு உயிர் எழுத்து ஆகும்? பதினெட்டு கண், எப்படி பதினெட்டு மெய் எழுத்து ஆகும்?
12, 18 எல்லாம் வடவர் கதையில் ஸ்கந்தன் ஆயிற்றே! அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான்? ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான்? ஹா ஹா ஹா! அதாச்சும் தனக்குப் பிடிக்கும் பட்சத்தில் வடமொழிக் கட்டுக் கதைகள் ஓக்கே! ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை! :))

இந்த மாதிரி நம்பர் கணக்கை எல்லாம் வைத்துத் தான் முருகனைத் தமிழ்க் கடவுளாக நிலை நாட்டணும்-ன்னு அவசியமே இல்லை!
தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்!

மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும் - என்று தொல்காப்பியமே முழங்குகிறது!
திருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது! இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!
(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை!)

சப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே!
தமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங்கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!

Tuesday, January 20, 2009

அலங்காரம்-12/13: முருகனின் மயில்! சேவல்! குதிரை?

ஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன! கோதை முருகனுக்கு மாமியாச்சே! மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள? மாமியாருக்காக காத்துக் கிடப்பானே! உருகிப் போயிருவானே! மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன? :)

தமிழ்க் கடவுள் முருகவேள், தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு வழி விட்டு காத்துக் கிடந்தான்! அன்பு சேர்த்துக் கிடந்தான்! உடல் வேர்த்துக் கிடந்தான்!
இன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன்! ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது!

சென்ற பகுதியில் சும்மா இருத்தல்-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்!
* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்....."சும்மா" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்!
* இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா?

என்னாது? முருகன் குடி இருக்கானா? இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது! :)
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்! குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்?

வாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை!
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குசை நெகிழா வெற்றி வேலோன்! அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு! அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!


மேலோட்டமான பொருள்:
வெற்றி வேல் முருகன் மயில் மேல் பறந்து வருகிறான்! கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது! அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்!
தோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று! மேரு மலையே அசைகிறது! கடலே வற்றி மேடாகிறது!

பிரிச்சி மேயலாமா?
குசை நெகிழா வெற்றி வேலோன் = குசை-ன்னா கடிவாளம்! கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன்! யாரை?
அட, கடிவாளம்-ன்னா குதிரைக்குத் தானே இருக்கும்! முருகன் குதிரை எல்லாம் கூட ஓட்டுவானா என்ன?

அடங்கொப்புரானே! அவன் மாமன் கள்ளழகரு தான் குதிரை மேல வருவாரு! பரி மேல் அழகரு! மருமகன் எப்போ குதிரை ஏறினான்?
ஹிஹி! முருகன், பரியாரை ஓட்டலை! மயிலாரை ஓட்டிக்கிட்டு வாரான்! :)

மயிலையே குதிரை போல ஓட்டிக்கிட்டு வாரானாம்! சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க! டொடக்-டொடக்-ன்னு மயிலாரு விசிறி விசிறி வாராரு!
கூர் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி, சவுண்டு விட்டுக்கிட்டே வாராரு!
தோகையெல்லாம் சும்மா ஜிவ்வுனு காற்றில் பறக்குது! அப்படி ஒரு ஓட்டம்! கடிவாளம் புடிச்சும் புடிக்காத ஓட்டம்!

அவுணர் குடர் குழம்ப = அசுரர்கள் குடல் நடுங்குது, இந்த வேகத்தைப் பார்த்து! கசை இடு = சவுக்கடி கொடுத்து.....
ஹோய்...முருகா...என்ன கொழுப்பு உனக்கு? எங்க மயிலாரைச் சவுக்கடி கொடுத்து ஓட்டறயா? ஹிஹி! சவுக்கால் அடிக்கலீங்க!
முருகன் சும்மா சொடுக்கறான்! சீன் போடுறான்! சொடுக்கும் போது உய்ய்ய்ய்ய்ஷ்-ன்னு ஒரு சத்தம் வரும்-ல? அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும்! நமக்கும் தான்! :)

வாசி விசை கொண்ட வாகன = அப்படி குதிரையின் வேகம் கொண்ட மயில் வாகனம்!
பீலியின் கொத்து = அந்த மயில் தோகைகளின் கொத்து...
அசை படு, கால் பட்டு = அசைய அசைய, பறக்க பறக்க, அந்தக் காற்று பட்டு! கால்=காற்று! சிறுகால்=தென்றல்! பெருகால்=புயல்! தமிழில் அருமையான காரணப் பெயர்களில் இந்தக் கால்=காற்று என்பதும் ஒன்று!

பறக்கும் மயில்


மயில் நடக்கும் போதும், நடனமாடும் போதும் நல்லா இருக்கும்! ஒயிலா இருக்கும்! ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும்! ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது! அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது! அதனால் தத்தித் தத்தித் தாவும்! அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்! :)

அசைந்தது மேரு! = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை!
அடியிட, எண் திசை வரை தூள் பட்ட = மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)
அத் தூளின் வாரி, திடர் பட்டதே! = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது! நிலமானது!

வாரி-ன்னா கடல்! கிருபானந்த வாரி = கிருபை+ஆனந்த+வாரி = கருணை+களி+கடல்
இது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள்! தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்! :)

ஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது!
மனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது! மேலானது!
மேடான மனம் நிலமானது! அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்!

எப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை?
இந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு! மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி!
சித்ரப் பதம் நடிக்கு மயிலாம்! ரத்ன கலாப மயிலே! ரத்ன கலாப மயிலே!-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை!

நடன மயில் - நடக்கும் மயில்


பரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும்! அவ்ளோ மயில் சந்தம்! அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை! மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா?

சரி, உங்களுக்கு ஒரு வேலை!
மயிலுக்கு வேற என்னென்ன பேரெல்லாம் இருக்கு? தமிழ்-வடமொழி-ன்னு ரெண்டுமே சொல்லுங்க பார்ப்போம்!
மயில்களின் மலை விராலிமலை! அதைப் பற்றிய பதிவு இங்கே!
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

படைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,
தடைபட்ட சேவல், சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,
உடைபட்டது அண்ட கடாகமும்! உதிர்ந்தது உடு படலம்! உதிர்ந்தது
இடைபட்ட குன்றமும்! மேரு வெற்பும் இடிபட்டவே!

மேலோட்டமான பொருள்:
வேல்படை உடைய முருகனிடம் வந்து சேர்ந்தது ஒரு வெற்றிக் கொடி! அது சேவற்கொடி! அது சிறகைச் சடசட என்று அடித்துக் கொள்ள, அந்த சத்தத்தில் கடல் கிழிந்தது!
அண்ட லோகங்களும் உடைபட்டன! நட்சத்திரக் கூட்டங்கள் உதிர்ந்தன! இடையே இருந்த குன்றும் மேருமலையும் பொடியாயின!

பிரிச்சி மேயலாமா?
படைபட்ட வேல்! அவன் பால் வந்த = படைகளில் சிறந்த வேலாயுதம்! அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு! அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு!
ஒன்று மயில் = சென்ற பாட்டில்! இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்!

வாகை பதாகை என்னும் = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது! பதாகை=கொடி!
தடைபட்ட சேவல் = அது என்ன தடைபட்ட சேவல்? சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே! காலங்கார்த்தால கத்துமே! அப்புறம் என்ன தடை?

போர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன்! ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்! அதான் தடைபட்ட சேவல்!
பேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்!

சிறகு அடிக் கொள்ள = அது சிறகைப் பரபர-ன்னு அடித்துச் சிலுப்பிக் கொள்கிறது! சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும்! கண்ணுல ஒரு கோவம் இருக்கும்! அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும்! அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது! விட்டுப் பிடித்து, பட்டியில் அடைக்கணும்!

சலதி கிழிந்து = சலதி-ன்னா கடல்! ஜலதி=சலதி?
கடலை இது போல நிறைய பேரால் சொல்லுவாரு அருணகிரி! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்! திமிர ***, இன்னும் நிறைய இருக்கு!

உடைபட்டது அண்ட கடாகமும் = அண்டங்கள் பொடியாக
உதிர்ந்தது உடு படலம் = நட்சத்திரங்கள் வீழ
உதிர்ந்தது இடைபட்ட குன்றமும் = இடையில் உள்ள மலைகள் வீழ
மேரு வெற்பும் இடிபட்டவே = மேரு மலையும் ஒரு இடி பட்டதுவே!

மேரு மலை-ன்னா என்ன? இமய மலையா? கந்த வெற்பா? Imaginary Mountainஆ? :)
யாராச்சும் குறிப்பு கொடுங்க!

திருமுருகாற்றுப்படையில் முருகன் பறந்து வரும் காட்சியை நக்கீரர் காட்டுவது போலவே அருணகிரியும் காட்டுகிறார்!
அவர் யானை மேல் வருவதைக் காட்டுகிறார்! இவர் மயில் மேல் வருவதைக் காட்டுகிறார்!

இந்தப் பாடல் சேவலின் சிறப்பைச் சொல்கிறது! முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது! சேவல்=நாதம்! மயில்=விந்து! நாத-விந்து கலாதீ நமோ நம!

இப்படிச் சேவலும், மயிலுமாய் இந்தப் பதிவு! முருகா!!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP