Monday, August 25, 2008

அலங்காரம்-03/04: கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!

"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - எது உண்மை?

பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்! சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!

ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"

முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)


(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?

பாசங்களை அறுத்து, மீண்டும் பிறக்க ஒட்டாதவன் அயில் வேலவன்!
அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?
தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!
அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? ஹா ஹா ஹா!


கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் குமரனின் இந்த இடுகையையும் ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்! பஜ கோவிந்தம் பாடலின் ஆரம்ப வரிகளில், இதே கருத்தை மிளிர்விக்கிறார் ஆதிசங்கரர்!
***அயில் வேல்-னு கந்த சஷ்டிக் கவசத்தில் எங்கு வரும்? அதையும் சொல்லுங்க பார்ப்போம்!

அழித்துப் பிறக்க ஒட்டா = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!
பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!


பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்! அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்! அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!
எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!

அன்பால், எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! = பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது மட்டும் தூங்கிட்டான் போல-ன்னு சில சமயம் நகைச்சு வைப்போம் அல்லவா? - அந்த எழுத்துப் பிழை எப்படி அறும்? அன்பால் மட்டுமே அறும்! அன்பைப் பிழையின்றிக் கற்றால், பிழை போகும்!
அட, அன்பை எப்படிங்க கற்க முடியும்? அது தானா வரணும்! இது கூடவாத் தெரியாது அருணகிருக்கு? கற்கின்றிலீர்-ன்னு சொல்றாரே?

உம்...நல்ல கேள்வி தான்! அருணகிரி சும்மா இலக்கணமா, எகனை மொகனையாச் சொல்லிட்டாரு போல! :)
கல்வி எப்படி வரும்? கல்வியே, வா-ன்னா வந்துருமா? மெனக்கெடணும்! நாம விரும்பிக் கற்றால் தான், கல்வி வரும் இல்லையா? கல்வி நல்ல விஷயம் தானே? அது தானே வராதா-ன்னா, வராது! நாம தான் அதைக் கற்கணும்!

அதே போல அன்பும் நாம கொடுத்தாத் தான் வரும்! தானா வராது! அன்பைக் கொடுக்கக் "கற்றுக்" கொள்ளணும்! அதான் அன்பைக் கற்கின்றிலீர்-னு சொல்றாரு அருணகிரி! இப்ப ஓக்கேவா? :)


இப்படி, அயில் வேலவன் மேல் வைக்கும் அன்பால், தலை எழுத்துப் பிழைகள் அறும்! கால்பட்டு அழிந்தது, இங்கென் தலைமேல், அயன் கையெழுத்தே, என்று இன்னொரு பாட்டிலும் சொல்லுவாரு அருணகிரி! அந்தக் கந்தர் அலங்காரம் பின்னால் வரும்! ***இப்போதைக்கு அந்தப் பாட்டை மட்டும் பின்னூட்டதில் யாராச்சும் சொல்லுங்க!
எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால் =
வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு? கூற்று=உறுதியாகக் கூறுதல்! கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்! பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே? = அவன் கழுத்தில் சுருக்கிடும் போது, "மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி! நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்! நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா? அப்போது வாய் வருமா?
ஹா ஹா ஹா! எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!

அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...
அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!
அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!அலங்காரம்-04!


தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!


தேரணி இட்டுப் புரம் எரித்தான் = எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!
மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு = அவன் மகன் குமரவேள் கையிலே வேல்! அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?

அணுவாகி = அணுவைப் பிளப்பது போல்; கிரௌஞ்சம் குலைந்து = கிரௌஞ்ச மலையைக் குலைத்தது! அது தாராகாசுரன் என்னும் மாய மலை!
அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!

சூர் பேரணி கெட்டது = சூரனின் பேரணி கெட்டது! தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே = இந்திர லோகம் பிழைத்ததுவே!
சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்! யானை முகத்தவன்! அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது! போரில் அவன் தான் முதல் பலி! அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்! தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பார்கள் ஆழ்வார்கள்! அப்படிச் சொல்லி வைத்தால், இயல்பாகவே இறைவனின் நாமம், நாவில் ஒட்டிக் கொள்ளும்! செயற்கையாக வலிந்து வரவழைத்துக் கொள்ளத் தேவை இருக்காது!
அதனால் தான் அருணகிரியார், கடைசிக் காலத்திலா இதையெல்லாம் கற்கப் போகிறீர்கள்-ன்னு கேக்குறாரு! எல்லாம் சரி தான்!

ஆனால் உயிர் பிரியும் வேளையில் இறைவன் நினைப்பு வரவேண்டுமா என்ன? அந்திம காலத்தில் பகவத் நாம ஸ்மரணம் கூடத் தேவையில்லை என்பது ஒரு சித்தாந்தம்! அதை இன்னொரு நாள் மாதவிப் பந்தலில் பார்ப்போம்! அலங்காரம் அடுத்து செவ்வாய் தொடரும்!

Monday, August 11, 2008

அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?

அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)

ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!
சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?

இது கந்தர் அலங்காரம்!
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!

என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!

பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
- என்கிறார் ஐயன்!
பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

பணிவு அலங்காரம் எப்படி வரும்?
தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?

அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!

இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!
அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!

பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே!


எளிமையான பொருள்:
பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,
வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா! சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்!
அந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!


கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!
(SK ஐயா இஷ்டைலில், பின் பார்த்து, முன் பார்ப்போமா? பதுங்கி விட்டுப் பாய்வோம் :)

செஞ் சடா அடவி மேல் = என்ன ஒரு உருவகம் பாருங்கள்! சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்! அடவி=காடு!
அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு! மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!

அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு? ஓடும் காட்டாறு இருக்கு! அதில் இளைய நிலா பொழிகிறது! கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன! ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன! எப்படி இருக்கு கானகக் காட்சி?

1.ஆற்றை = கங்கையை
2. பணியை = பாம்பை
3. இதழியை = கொன்றைப் பூவை
4. தும்பையை = தும்பைப் பூவை
5. அம்புலியின் கீற்றை = சந்திரனின் பிறையை
புனைந்த பெருமான் = அணிந்த சிவ பெருமான்

சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!
கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்! தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!

தும்பைப் பூ = வெள்ளை நிறம்! பார்க்க சங்கு போல இருக்கும்! பரிசுத்தமான வெள்ளை! மென்மையானதும் கூட! வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?

இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு!
ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!
பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!

இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...
குமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்! கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்!
எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?


பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை=
பேறு = தானா அமையும்! தவம் = நாம செய்யணும்!
ஒன்னு பூர்வீகச் சொத்து! இன்னொன்னு சுய சம்பாத்தியம்!
நற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது! பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு!
தவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!

பூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே! அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்?
நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு!
இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!


சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்? காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன? அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே! காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது? ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?

தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்!
அல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்!

மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, "அவன் யோக்கியமா? இவ யோக்கியமா" என்று ஒரு சிலர் புறம் பேச...
பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!

இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்! அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்! நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்!
இறுதியில் சொந்த அக்காவே, "உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!" என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்!
அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா=
எப்படிச் சொல்றாரு பாருங்க! சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல? சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க? யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா?
ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!

பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது!
ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது! உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!

இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா!
சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது!
இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்!
நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!


அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு-ஓம்!
இப்போ முருகா என்று வந்திப்பு-ஓம்!
ஓம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP