Monday, August 11, 2008

அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?

அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)

ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!
சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?

இது கந்தர் அலங்காரம்!
கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்!

என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!

பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
- என்கிறார் ஐயன்!
பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!

பணிவு அலங்காரம் எப்படி வரும்?
தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?

அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!
அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!

இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!
அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!

பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே!


எளிமையான பொருள்:
பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,
வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா! சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்!
அந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!


கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!
(SK ஐயா இஷ்டைலில், பின் பார்த்து, முன் பார்ப்போமா? பதுங்கி விட்டுப் பாய்வோம் :)

செஞ் சடா அடவி மேல் = என்ன ஒரு உருவகம் பாருங்கள்! சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்! அடவி=காடு!
அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு! மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!

அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு? ஓடும் காட்டாறு இருக்கு! அதில் இளைய நிலா பொழிகிறது! கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன! ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன! எப்படி இருக்கு கானகக் காட்சி?

1.ஆற்றை = கங்கையை
2. பணியை = பாம்பை
3. இதழியை = கொன்றைப் பூவை
4. தும்பையை = தும்பைப் பூவை
5. அம்புலியின் கீற்றை = சந்திரனின் பிறையை
புனைந்த பெருமான் = அணிந்த சிவ பெருமான்

சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!
கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்! தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!

தும்பைப் பூ = வெள்ளை நிறம்! பார்க்க சங்கு போல இருக்கும்! பரிசுத்தமான வெள்ளை! மென்மையானதும் கூட! வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?

இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு!
ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!
பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!

இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...
குமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்! கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்!
எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?


பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை=
பேறு = தானா அமையும்! தவம் = நாம செய்யணும்!
ஒன்னு பூர்வீகச் சொத்து! இன்னொன்னு சுய சம்பாத்தியம்!
நற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது! பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு!
தவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!

பூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே! அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்?
நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு!
இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!


சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்? காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன? அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே! காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது? ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?

தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்!
அல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்!

மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, "அவன் யோக்கியமா? இவ யோக்கியமா" என்று ஒரு சிலர் புறம் பேச...
பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!

இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்! அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்! நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்!
இறுதியில் சொந்த அக்காவே, "உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!" என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்!
அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா=
எப்படிச் சொல்றாரு பாருங்க! சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல? சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க? யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா?
ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!

பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது!
ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது! உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!

இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா!
சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது!
இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்!
நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!


அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு-ஓம்!
இப்போ முருகா என்று வந்திப்பு-ஓம்!
ஓம்!

26 comments:

கவிநயா said...

அருமை, அருமை.

பேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா!

//ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை மட்டும் கழுவிக் கொள்ள மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!//

உண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்.

கண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.
கந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை.

வாழ்க, வாழ்க!

Anonymous said...

//சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!
கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்\\
ஐந்தெழுத்துக்கு சொந்தமானவனை இப்படியும் அழகாக அலங்கரிக்க முடியுமா!!! (கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)

ambi said...

அருமை, அழகான விளக்கங்கள். அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)//

சின்ன அம்மிணிக்கா - போட்டோ ப்ளீஸ் :)

சென்னையில் கொன்றையைப் பாத்தே நாளாச்சு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ambi said...
அருமை, அழகான விளக்கங்கள்.//

சேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா? அடிங்க! :)

//அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)//

இருங்க! பந்தல்-ல ஒரு டகால்டி பதிவு வியாழக் கிழமை போடறேன்! ஆனா நீங்க செவ்வாய் தான் வரணும்! சொல்லிட்டேன்! :)

ambi said...

//சேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா? அடிங்க! :)//

சரி சீண்ட வேணாம்னு பாத்தேன், விட மாட்டீங்களே! :))

//ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!
பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!
//

இந்த வரிகளை தான் சொன்னேன்.

அது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...? :p

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...? :p//

ஹா ஹா ஹா
அது நான் நுழைக்கல அம்பி!
அருணகிரி அருணகிரி-ன்னு ஒருத்தர், திருப்புகழ் பாடும் போதெல்லாம், ரெண்டு வரி கண்ணனையும் சேர்த்தே பாடிறாரு!

போதாக்கொறைக்கு, பெருமாளே பெருமாளே-ன்னு ஒவ்வொரு திருப்புகழையும் முடிக்குறாரு!
என்ன கொடுமை ராகவன்! :)

ப்ரசன்னா said...

அருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....

குமரன் (Kumaran) said...

அருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை. இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது.

ஜீவா (Jeeva Venkataraman) said...

அலங்காரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள், நன்றி கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன்! தவம், பேறு ஏதும் இல்லாமல்!

சேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்!
சேந்து கந்து நாதவிந்து எனமுந்து;பின்
வள்ளிக் காந்தன் அல்லவோ வேந்து!
அலம் மடித்திடும் அலங்காரம் இதுவே!
கந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
பேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா!//

ஆமாக்கா! எனக்கு எந்த செஞ்சடா அடவி படம் ரொம்ப பிடிச்சிப் போச்சு! அதுக்கேத்த படமா ரொம்ப நேரம் தேடினேன்! :)

//உண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்//

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!
அருணகிரிக்கும் அப்படித் தோன்றியது தானே?

//கண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.
கந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை//

நன்றிக்கா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// ப்ரசன்னா said...
அருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....//

ஆமாங்க ப்ரசன்னா
செஞ்சடாடாவி = பேரே சந்தமா ரைமிங்கா இருக்குல்ல?
அருணகிரி வாக்கு அப்படி! சந்த நாக்கு, அருணகிரி வாக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை.//

நன்றி குமரன்.
மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? ரெண்டு ரெண்டு பாட்டா, இல்லை மூனு மூனா!
நீங்க என்ன நினைக்கிறீங்க?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது//

கந்தர் அலங்காரம் என்பது சர்வ கார்ய சித்தியாம், குமரன்!


சஷ்டி கவசம் கவசமா இருந்து காக்கும்!
ஆனால் கந்தர் அலங்காரம், மெய்ப் பொருளுடன் அவரவர்க்கு ஏற்ற அலங்காரங்களைக் கொடுக்குமாம்!

மணம் வேண்டி நிற்பவருக்கு அலங்கார பாராயணம் மிகவும் விசேடம்!
மக்களுக்கு, துறவிகளுக்கு, ஞானியர்க்கு, புலவர்க்கு, அரசர்க்கு-ன்னு அவரவர் அலங்காரங்களை அருள வல்லதாம்!

அம்மா எதுக்கு அலங்கார பாராயணம் வேண்டிக்கிட்டாங்க-ன்னு எனக்கே இப்பத் தான் புரியுது :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வா (Jeeva Venkataraman) said...
அலங்காரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்//

ஆகா...
எனக்கும் இந்த ஓப்பனிங் சாங் ரொம்ப பிடிக்கும் ஜீவா!
கூடவே விழிக்குத் துணை + ஆலுக்கு அணிகலம் + நாள் என் செய்யும் + சேல் பட்டு அழிந்தது!

இந்த ஐந்தும் தினப்படி பாராயணத்தில் உண்டு! :)

//கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன்! தவம், பேறு ஏதும் இல்லாமல்!//

ஆகா...
Youtube இல்லை வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா!

//சேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்!
சேந்து கந்து நாதவிந்து எனமுந்து;//

மெல்லினமாக அழகுற முந்துகிறது! :)

//அலம் மடித்திடும் அலங்காரம் இதுவே!
கந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்!//

அழகாரம் திருப் புகழாரம்
முருகாரம் மனம் மகிழாரம்!

Raghav said...

கந்தர் அலங்காரம் கண்டுவிட்டால் நம்ம குறை தீரும்.

எளிமையான சிறப்பான விளக்கங்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்கு படிக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது.

ரவி அண்ணா, அலங்காரம் என்றால் என்ன? வெண்பட்டாலும், மலர்களாலும், பாடல்களாலும் அழகுபடுத்துவது மட்டும் தான் அலங்காரமா?

ஜீவா (Jeeva Venkataraman) said...

//வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா!//
26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

பேறு - இல்லை
சேறு
- இருக்கு
ஆறு (நீர்) - கழுவிட வேண்டும்!
கீறு - கழுவினால் கிடைக்கும் 'வெண்' பேறு!

ப்ரசன்னா said...

//மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? //

ஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ப்ரசன்னா said...
//மொத்தம் 108 பாட்டு இருக்கே!
இன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா? //
ஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே?//

இந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்//

சூப்பர்! நன்றி ஜீவா!
விண்மீன் வாரம் முடிஞ்ச பின்னாடி சுட்டி கொடுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பேறு - இல்லை
சேறு - இருக்கு
ஆறு (நீர்) - கழுவிட வேண்டும்!//

:)

//கிடைக்கும் 'வெண்' பேறு!//

ஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு! சரி தானே ஜீவா? :)

ஜீவா (Jeeva Venkataraman) said...

//ஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு! சரி தானே ஜீவா? :)//
ஆகா, நல்லது!

ப்ரசன்னா said...

"//
இந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா! :) //

நன்றி.. ஆனா போன வாரம் எதுவுமே போடலியே? நான் வாரத்துக்கு 2 பாட்டு கேட்டா நீங்க ரெண்டு வாரத்துக்கு ரெண்டு பாட்டு போடறீங்க... ஆணி அதிகமோ?

boss said...

aaha abaram, oam saravanabava.
ungalukku mujruganarul nitchayam undu.
vazhthtukkal

Prasad said...

சுவையான பதிவு. ... தங்களால் தமிழையும் ஆன்மீகத்தையும் சுவைத்து இன்புற்றேன்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP