Monday, July 28, 2008

தலையில பிள்ளையார் குட்டு குட்டிக்கறாங்களே! - ஏன்?

அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்! மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்! ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!
நமக்குச் செய்து கொண்டால் "அகங்காரம்"! இறைவனுக்குச் செய்து கொண்டால் "அலங்காரம்"!

மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்! = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!
இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! - தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!

(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

ஒரு குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது! அப்போ என்ன நடக்கிறது?
நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய், நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?
கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்
முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?

* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?
* அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?
* அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்! கந்தர் அலங்காரம்!
பழனிமலையில் எத்தனை அலங்காரம் அந்தக் குழந்தைக்கு?
* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம் (இயற்கையான ஆண்டி உருவம்)
* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம் (காவி உடையில்)
* சிறுகாலைச் சாந்தியில் 8:00= பால முருகன் அலங்காரம் (குழந்தையாகத் தோற்றம்)
* பெருகாலைச் சாந்தியில் 9:00= வேட்டுவர் அலங்காரம் (வேடன கையில் வில்லுடன்)
* உச்சி காலத்தில் 12:00= வைதீக அலங்காரம் (வேதம் ஓதும் அந்தணர்)
* சாய ரட்சையில் 6:00= ராஜ அலங்காரம் (அரச உடையில்)
* அர்த்த சாமத்தில் 8:00= விருத்த அலங்காரம் (முதிய உருவம்)


முதல் பாட்டுக்குப் போகலாமா?

திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும், மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்! அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!

கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!
அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!
அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!
இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!

அடல் அருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்; வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!


இதாங்க எளிமையான பொருள்: வருபவர்கள் எல்லம் தடக்-படக் என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!
அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் கடக்-தடக் என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!
அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!
அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்! அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!


இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!

அருணன்=சூரியனின் தேரோட்டி! அவன் சூரியனுக்கு முன்னரே உதயம் ஆவான்! அதான் அருணோதயம்-ன்னு பேரு! அவன் உதிக்கும் வேளையில் வானம் வெளிச்சமா இல்லாம, செக்கச் செவேர் என்று இருக்கும்! சிற்றஞ் சிறு காலை என்னும் பிரம்ம முகூர்த்தம் அது!
அதே போல் சிவபிரான் ஜோதிப் பிழம்பாய்ச், செக்கச் செவேர் என்று இருக்கும் தலம் = அருணை! அருண கிரி! அருணாச்சலம்!

அடல்-ன்னா வலிமை! அடல் அருணை-ன்னா வலிமை பொருந்திய அருணை மலை! மலைக்கு என்னாங்க பெருசா வலிமை?
நினைத்தாலே முக்தி தர வல்ல வலிமை இருக்கு அருணை மலைக்கு! அதான் அடல் அருணை!

அந்த அடல் அருணைத் திருக் கோபுரத்தே, அதன் வாயிலுக்கு வடக்கே சென்று, கண்டு கொண்டேன்! யாரை? பிள்ளையாரையும், முருகனையும்!
வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன், கோபுரத்து இளையனார்! கோபுரத்து இளையனார் சன்னிதி அருணகிரி மண்டபத்தின் உள்ளே இருக்கிறது!
அதற்குப் பக்கத்திலேயே வன்னி மர விநாயகர் சன்னிதி! அண்ணனும் தம்பியும் அருகருகே!
அந்த விநாயகர் எப்படி இருக்காரு-ங்கிறீங்க? - சர்க்கரை மொக்கிய கை, கட தட-ன்னு இருக்காரு!
நண்பர்கள் கன்னா பின்னா-ன்னு சாப்பாட்டை வச்சிக் கட்டினா, என்ன சொல்லுவோம்? மவனே நல்லா மொக்குறியா-ன்னு கேட்போம் இல்லையா?
அப்படிச் சீனிப்பண்டங்களை மொக்குறாரு கணபதி! கடக், தடக்-ன்னு தும்பிக்கையால மொக்குறாரு! யானைக்குப் பழம் ஊட்டி விட்டுப் பாருங்க! இதே கடக்-தடக் சவுண்டு வரும்! :)

கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே = கும்பம் போல் வயிறு! பானை வயிற்றுப் பிள்ளையார்! அவர் களிறு! ஆண் யானை!
அப்படின்னா அவரு தம்பியும் களிறு தானே! அதான் முருகனையும் இளைய களிறுன்னு சொல்லிட்டாரு அருணகிரி!
இப்படி அண்ணனும், தம்பியும் ஒன்னாச் சேர்ந்து இருக்கும் அழகான முதல் பாட்டு!

சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!
புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு? யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)


வருவார் தலையில், தட-பட எனப் படு குட்டுடன்
அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?
அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்! மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க? தடக், படக் என்று குட்டிக்கறாங்க! சரி, ஏன் குட்டிக்கணும்?

காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!
ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?

என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?
ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!

அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்! காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!
பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க... அச்சோ.....
ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்! அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!
* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!
* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!
அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! - தோன்றியது பிள்ளையார் குட்டு!

இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!
முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
தட-பட எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தனின் அலங்காரச் செய்யுளைத் துவக்குவோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!

46 comments:

Raghav said...

இதுதான் பிள்ளையார் குட்டுக்கு காரணமா?. கந்தர் அலங்காரத்தை கண்டுகளிக்க தயாரா இருக்கேன். கந்தர் அலங்காரம் கண்டு கண் குளிரட்டும், கண் திறக்கட்டும்.

Raghav said...

//* விடியற் காலை=விஸ்வரூப அலங்காரம்
* விழவுப் பூசையில் = சாது சன்னியாசி அலங்காரம்
* சிறுகாலைச் சாந்தியில் = பால முருகன் அலங்காரம்
* பெருகாலைச் சாந்தியில் = வேட்டுவர் அலங்காரம்
* உச்சி காலத்தில் = வைதீக அலங்காரம்
* சாய ரட்சையில் = ராஜ அலங்காரம்
* அர்த்த சாமத்தில் = விருத்த அலங்காரம்//

இந்த அலங்காரங்கள் எப்போது ஏற்பட்டன. அலங்காரம் செய்வதற்கு ஏதாவது விதிமுறைகள் உள்ளனவா. எனக்கு தெரிந்து சில மலர்களை சேர்க்க மாட்டார்கள்.

ஏகாந்த ஸேவை பற்றியும் சொல்லப்பட்டுள்ளதா?

வெட்டிப்பயல் said...

//* விடியற் காலை=விஸ்வரூப அலங்காரம்
* விழவுப் பூசையில் = சாது சன்னியாசி அலங்காரம்
* சிறுகாலைச் சாந்தியில் = பால முருகன் அலங்காரம்
* பெருகாலைச் சாந்தியில் = வேட்டுவர் அலங்காரம்
* உச்சி காலத்தில் = வைதீக அலங்காரம்
* சாய ரட்சையில் = ராஜ அலங்காரம்
* அர்த்த சாமத்தில் = விருத்த அலங்காரம்//

இப்படி சொன்னா எதுவும் புரியலை :(

டைமிங் சொல்லுங்களேன்...

நான் போன போது எல்லாம் ராஜ அலங்காரம் தான் பார்த்திருக்கேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Raghav said...
இதுதான் பிள்ளையார் குட்டுக்கு காரணமா?.
//

அதே! அதே!

//கந்தர் அலங்காரத்தை கண்டுகளிக்க தயாரா இருக்கேன்.//

கேள்விகளுக்கும் தயாரா இருங்க ராகவ் :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த அலங்காரங்கள் எப்போது ஏற்பட்டன//

ஜிரா வாங்க!

//அலங்காரம் செய்வதற்கு ஏதாவது விதிமுறைகள் உள்ளனவா//

ஜிரா வாங்க!

//எனக்கு தெரிந்து சில மலர்களை சேர்க்க மாட்டார்கள்//

என்னென்ன மலர்கள்?

//ஏகாந்த ஸேவை பற்றியும் சொல்லப்பட்டுள்ளதா?//

ஜிரா வாங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
இப்படி சொன்னா எதுவும் புரியலை :(
டைமிங் சொல்லுங்களேன்...//

ஜிரா வாங்க!

//நான் போன போது எல்லாம் ராஜ அலங்காரம் தான் பார்த்திருக்கேன்//

பெரும்பாலும் பலரும் பார்ப்பது அது தான்!
காலை வேளைகளில் தான் அபிஷேகம் என்ற பெயரில் சதா கரைத்துக் கொண்டு இருக்கிறார்களே! :(

கவிநயா said...

உங்களோட இந்தப் பூவையே இப்பதான் தற்செயலா பாத்தேன் கண்ணா... சொல்லியிருக்கலாம்ல? மெதுவா மறுபடி வரேன்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
உங்களோட இந்தப் பூவையே இப்பதான் தற்செயலா பாத்தேன் கண்ணா...//

அக்கா
நேத்தி இரவு தான், வலைப்பூவையே எழுதி தமிழ்மணத்துக்கு அனுமதி கேட்டு அனுப்பிச்சேன்!

முன்ன பின்ன அறிமுகம் இல்லாத பதிவருங்க, மொதல்ல மூனு பதிவு போடணுமாம்-ல? :))
எழுதி முடிச்சி அனுப்பறத்துக்கே நள்ளிரவு ஆயிரிச்சி!

//சொல்லியிருக்கலாம்ல? மெதுவா மறுபடி வரேன்...//

மெல்ல வாங்க!
இன்னிக்கி மாலையில் எல்லாருக்கும் மின்னஞ்சல் தட்டி வுடறேன்!

கவிநயா said...

//முன்ன பின்ன அறிமுகம் இல்லாத பதிவருங்க, மொதல்ல மூனு பதிவு போடணுமாம்-ல? :))//

அது பதிவருக்கு உள்ள விதி இல்ல; புதுப் பூவுக்கு உள்ள விதி :))

நீ...ங்..க.. அறிமுகம் இல்லாத பதிவரா!!!

Raghav said...

//கவிநயா said...
நீ...ங்..க.. அறிமுகம் இல்லாத பதிவரா!!!//

அவர் அறிமுகம் ஆன பதிவர் மட்டும் இல்ல, "ஹரி"முகம் ஆன பதிவரும் கூட..

கவிநயா said...

//அவர் அறிமுகம் ஆன பதிவர் மட்டும் இல்ல, "ஹரி"முகம் ஆன பதிவரும் கூட..//

ஆஹா. அறிவோம்! ஹரிஓம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
//அவர் அறிமுகம் ஆன பதிவர் மட்டும் இல்ல, "ஹரி"முகம் ஆன பதிவரும் கூட..//
ஆஹா. அறிவோம்! ஹரிஓம்! :)//

ஒரு முடிவோடத் தான் இருக்காங்கப்பா!
Gira...Come here and save me!
Hurry Om! :))

G.Ragavan said...

நல்ல விளக்கம். இந்தச் செய்யுளுக்கு நான் எழுதிய விளக்கம் இங்கே இருக்கிறது.

http://iniyathu.blogspot.com/2005/10/blog-post_18.html

G.Ragavan said...

// Raghav said...

//கவிநயா said...
நீ...ங்..க.. அறிமுகம் இல்லாத பதிவரா!!!//

அவர் அறிமுகம் ஆன பதிவர் மட்டும் இல்ல, "ஹரி"முகம் ஆன பதிவரும் கூட.. //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க. என்னையப் போன்றவங்கள்ளாம் அறியாமைல மூழ்கியிருக்குறப்போ...ஹரி-ஆமை (கூர்மம்) பிடிச்சு கரையேறும் ரவி என்று சொல்லனும். :-)

Anonymous said...

//மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்! = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி// பெண்க‌ளுக்கு ம‌ட்டும் அல‌ங்கார‌த்தில் விருப்ப‌ம் உண்டுன்னு நினைக்காதீங்க‌, அந்த‌ந்த‌ வ‌ய‌சுல‌ ஆண்க‌ளுக்கும் அல‌ங்கார‌த்தில‌ விருப்ப‌ம் வ‌ரும்னு எல்லாரையும் நினைக்க‌ வைக்க‌ முருக‌ன் அருண‌கிரி நாத‌ரைப்பாட‌ வைத்தாரோ!!!
கேஆரெஸ் , கரும்பும் துவர்க்கும் ‍ செந்தேனும் புளிக்கும்னு நினைக்கிறேன். முருகன் அலங்காரம் தித்திக்கும் என்ற எதிர்பார்ப்புடன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சின்ன அம்மிணி said...
பெண்க‌ளுக்கு ம‌ட்டும் அல‌ங்கார‌த்தில் விருப்ப‌ம் உண்டுன்னு நினைக்காதீங்க‌, அந்த‌ந்த‌ வ‌ய‌சுல‌ ஆண்க‌ளுக்கும் அல‌ங்கார‌த்தில‌ விருப்ப‌ம் வ‌ரும்னு//

யக்கா...
இப்படி உண்மைய புட்டு புட்டு வைக்கறீங்களே!
ஆண்கள் தான் இப்பல்லாம் ரொம்ப அலங்காரம் பண்ணிக்கறோம்!
//கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன்//-ன்னு பதிவுல யாரைச் சொன்னேன்? :))))

//கரும்பும் துவர்க்கும் ‍ செந்தேனும் புளிக்கும்னு நினைக்கிறேன். முருகன் அலங்காரம் தித்திக்கும் என்ற எதிர்பார்ப்புடன்//

முருகன் அலங்காரம் என்னென்னைக்கும் தித்திக்கும்!

உங்க எதிர்பார்ப்பை எதிர்பார்த்து இருக்கிறேன்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// G.Ragavan said...
நல்ல விளக்கம்//

நன்றி ராகவா!

//இந்தச் செய்யுளுக்கு நான் எழுதிய விளக்கம் இங்கே இருக்கிறது.
http://iniyathu.blogspot.com/2005/10/blog-post_18.html//

நண்பர்களே...
சில பல மாதங்களுக்கு முன் ராகவன் கந்தர் அலங்காரத்தின் சில பாடல்களை (சுமார் பத்து??) மட்டும் பொறுக்கு மணிகளாய் எடுத்து விளக்கம் சொன்னாரு!
அதை இணியது கேட்கின் வலைப்பூவில் படித்துப் பார்க்கவும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

/G.Ragavan said...
ரொம்பச் சரியாச் சொன்னீங்க. என்னையப் போன்றவங்கள்ளாம் அறியாமைல மூழ்கியிருக்குறப்போ...//

தோடா!
நீங்க மூழ்கி இருக்கீங்களா? கப்பல் கேப்டனே நீங்க தான்!

//ஹரி-ஆமை (கூர்மம்) பிடிச்சு//

ஹரி-ஆமை என்னவோ சரி தான்!
அறியாமை என்னும் ஆழ்கடலில்
அன்பு எனும் மத்தால் கடைந்தால்
அமுதம் வரும்! அதை ஹரி-ஆமை நிலைநிறுத்தித் தரும்! :)

கவிநயா said...

//* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?//

அலங்காரம் பற்றிய விளக்கம் அருமை!

//முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)//

ஆஹா. ஆனா அப்பவும் மத்தவங்களக் குட்டலாமாங்கிற நினைப்பு கூட வராம இருக்க முயற்சி செய்வோம் :)

ஆமா... நெறய கேள்விஸ்க்கு பதில் சொல்லாம ஜிரா ஜகா வாங்கிட்டாரே?

கவிநயா said...

படங்களெல்லாம் அருமை. முதல் படம் எந்த ஊரு? வள்ளி வலப்பக்கம்தானே இருப்பாங்க எப்பவும்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
இப்படி சொன்னா எதுவும் புரியலை :(
டைமிங் சொல்லுங்களேன்...//

* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம்
* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம்
* சிறுகாலைச் சாந்தியில் 8:00 = பால முருகன் அலங்காரம்
* பெருகாலைச் சாந்தியில் 9:00 = வேட்டுவர் அலங்காரம்
* உச்சி காலத்தில் 12:00 = வைதீக அலங்காரம்
* சாய ரட்சையில் 6:00 = ராஜ அலங்காரம்
* அர்த்த சாமத்தில் 8:00 = விருத்த அலங்காரம்

பதிவிலும் மாத்திடறேன் பாலாஜி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
படங்களெல்லாம் அருமை. முதல் படம் எந்த ஊரு? வள்ளி வலப்பக்கம்தானே இருப்பாங்க எப்பவும்?//

ஆமாக்கா,
எப்பமே வள்ளி வலப்பக்கம் தான்!
ஏன்னா, முருகனின் வலக்கண் சூரியன்! வள்ளி கையில் இருப்பது தாமரை! அதான்! :)

முருகனின் இடக் கண் சந்திரன்! இடப்பக்கம் தேவானை! அவள் கையில் அல்லி!

முதல் படம் கேரளா பக்கம்! அதான் க்ளூ! அங்க வள்ளி மட்டும் தான்! அதான் வலமா இருந்து எட்டிப் பாக்குறாங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
அலங்காரம் பற்றிய விளக்கம் அருமை!//

நன்றிக்கோவ்!

//ஆஹா. ஆனா அப்பவும் மத்தவங்களக் குட்டலாமாங்கிற நினைப்பு கூட வராம இருக்க முயற்சி செய்வோம் :)//

ஹிஹி!
அடுத்தவங்க கிட்ட தப்பு கண்டுபுடிக்காம மனுசனால இருக்க முடியாதுக்கா!
அதான் மொதல்ல தன் தப்பையே பாத்துக்க ஆரம்பிச்சா, அதுக்கே டயம் சரியா இருக்கும்! :))

//ஆமா... நெறய கேள்விஸ்க்கு பதில் சொல்லாம ஜிரா ஜகா வாங்கிட்டாரே?//

எங்க ஜிரா அதெல்லாம் தனியா என் கிட்ட சொல்லிட்டாரு!
சிஷ்யன் நான் பைய வந்து சொல்லுறேன்! :)

கவிநயா said...

//அடுத்தவங்க கிட்ட தப்பு கண்டுபுடிக்காம மனுசனால இருக்க முடியாதுக்கா!//

அதான் 'முயற்சி'ன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டேன் :)

//அதான் மொதல்ல தன் தப்பையே பாத்துக்க ஆரம்பிச்சா, அதுக்கே டயம் சரியா இருக்கும்! :))//

இது உண்மை!

//எங்க ஜிரா அதெல்லாம் தனியா என் கிட்ட சொல்லிட்டாரு!
சிஷ்யன் நான் பைய வந்து சொல்லுறேன்! :)//

ஹ்ம்.. அதுக்குன்னு நீங்க பாட்டுக்கு ரொம்ப பைய வந்து எங்கள வைய வச்சிராதீக!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கவி அக்கா
//பைய வந்து எங்கள வைய வச்சிராதீக!//

பதிவிசைக் கவிஞர் கவிநயா அவர்களின் பின்னூட்டக் கவிதைகள்!
வெளியீடு: மாதவிப் பந்தல் பதிப்பகம்!
விலை: ரூ ****.**

இலவசக்கொத்தனார் said...

இது தொடர்பாக நான் முன்பு இட்ட அறிவியல் பதிவு!

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_21.html

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
இது தொடர்பாக நான் முன்பு இட்ட அறிவியல் பதிவு!//

தல
அது பிரம்ம ரசம் பதிவு-ல்ல?
அதான் போட்டி எல்லாம் முடிஞ்சி, பரிசு கூட கொடுத்தாச்சே!
அப்பறம் ஏன் இந்த இலவச வெளம்பரம்? :))))

சரி, அரபிக் கடலோரம் ஒழுங்கா தோப்புக்கரணம் போட்டுட்டு வாங்க!
நம்ம சித்தி-பாய் இருக்காருல்ல? :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா.. கந்தரலங்காரத்தை அலங்காரமா சொல்ல ஆரம்பிச்சுட்டாரே தம்பி கண்ணபிரான்..

கண்ணன், என் அப்பன் கந்தனை மருகி, உருகி மயக்கப் போகிறார்..

யார் செய்தாலென்ன? கண்ணனாக இருந்தாலென்ன..? சரவணனாக இருந்தாலென்ன..?

உள்ளன்போடு தன்னை பாடியவனை அவன் ஒரு போதும் விட்டவனில்லையே..

கந்தர் அலங்காரம்..

அப்பன் முருகன் அருளில் உருகித் திளைத்து அருணகிரிநாதர் அருளிய பாடல்கள்..

அர்த்தமே தெரியாமல் செல்லுமிடம் இறையருள் ஒன்றுதான் என்றினைத்து இதுவரையில் முனங்கிய உதடுகள், இனி அர்த்தம் புரிந்து ரசிப்புடன் பாடப் போகிறது..

கண்ணா வாழிய நீ..

VSK said...

மிக அருமையாக அலங்காரத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள் ரவி!
விளக்கமும், படங்களும் அருமை!

முருகனருள் முன்னிற்கும்.

வெட்டிப்பயல் said...

நேரம் மற்றும் அலங்கார விளக்க கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

நீங்க சொல்ற மாதிரி பார்த்தா ஒரு நாள் முழுக்க இருந்து கொண்டாடலாம் போல இருக்கே. இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சு :-(

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...//
SK ஐயா அலங்காரம் செய்ய வந்தது, அருணகிரியே வந்தாப்புல இருக்கு!
வாங்க வலையுலக அருணகிரி ஐயா!

//மிக அருமையாக அலங்காரத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள் ரவி!
விளக்கமும், படங்களும் அருமை!//

படம் இல்லாம பதிவு அடியேனால் முடியுமா? :)
நன்றி SK! தொடர்ந்து வந்து பொருள் சரியாக இருக்கா என்று சொல்ல உங்களை வேண்டுகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கவிநயா said...
படங்களெல்லாம் அருமை. முதல் படம் எந்த ஊரு? வள்ளி வலப்பக்கம்தானே இருப்பாங்க எப்பவும்?//

அது வெள்ளிமலை முருகன் கோயில்!
நாகர்கோயில் கிட்ட!
சின்ன கோயில், சின்ன மலை தான்!
ஆனா முருகன் ஆள் உசரம்! ரொம்ப அழகு! கஞ்சி தான் பிரசாதம், தீர்த்தம் மாதிரி தருவாய்ங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆஹா.. கந்தரலங்காரத்தை அலங்காரமா சொல்ல ஆரம்பிச்சுட்டாரே தம்பி கண்ணபிரான்..//

அவன் அருளாலே அவன் அலங்காரம் அண்ணாச்சி!

//கண்ணன், என் அப்பன் கந்தனை மருகி, உருகி மயக்கப் போகிறார்..//

:))
ஆகா, என்னைய தான் முருகன் உருக்கி மயக்கப் போறான்!

//யார் செய்தாலென்ன? கண்ணனாக இருந்தாலென்ன..? சரவணனாக இருந்தாலென்ன..?//

ஜூப்பரு!

//அர்த்தமே தெரியாமல் செல்லுமிடம் இறையருள் ஒன்றுதான் என்றினைத்து இதுவரையில் முனங்கிய உதடுகள், இனி அர்த்தம் புரிந்து ரசிப்புடன் பாடப் போகிறது..//

அர்த்தம் புரிந்து ஆழும் போது தனி சுகம் இல்லையா?
ஆடி ஆடி அகம் கரைந்து...

//கண்ணா வாழிய நீ..//

வாழ்த்துக்கு நன்றி அண்ணா!
ஒவ்வொரு அலங்காரத்துக்கும் அவசியம் வாங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
நேரம் மற்றும் அலங்கார விளக்க கொடுத்ததுக்கு மிக்க நன்றி//

:)

//நீங்க சொல்ற மாதிரி பார்த்தா ஒரு நாள் முழுக்க இருந்து கொண்டாடலாம் போல இருக்கே//

ஆமா!

//இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சு :-(//

அதான் இப்ப தெரிஞ்சிக்கிட்டோமே பாலாஜி!
முன் பதிவு செஞ்சிக்கிட்டு போனா, அனாவசிய பிக்கல் பிடுங்கல் இருக்காது!

அபிஷேகம் மட்டும் செய்ய வேணாம்-னு சொல்லிடுங்க! டிக்கெட்-ல காசு மைனஸ் பண்ணிடுவாங்க-ன்னு நினைக்கிறேன்! குழந்தையின் அழகுச் சிலையையும் காப்பாத்தினா மாதிரி இருக்கும்!

வேண்டிகிட்டவங்க, மலைக்கீழ் இருக்குற ஒரிஜினல் படைவீடு, ஆவினன்குடி கோயில்ல அபிசேகம் பண்ணிக்கலாம்! :)

கவிநயா said...

//அது வெள்ளிமலை முருகன் கோயில்!//

நன்றி கண்ணா. முருகன் கொள்ளை அழகு!

சிவமுருகன் said...

//எப்பமே வள்ளி வலப்பக்கம் தான்!
ஏன்னா, முருகனின் வலக்கண் சூரியன்! வள்ளி கையில் இருப்பது தாமரை! அதான்! :)//

சரி தான்

//முருகனின் இடக் கண் சந்திரன்! இடப்பக்கம் தேவானை!//

இது வரை சரி

//அவள் கையில் அல்லி! //

அவர் கரத்தை அலங்கரிப்பது நிலோத்தமை மலர்.

வள்ளியம்மை பூமியில் பிறந்தவளாம் ஆகவே அவர் கையில் இருப்பது தாமரை! தேவானையோ தேவலோகத்தில் பிறந்தவளாம் ஆகவே அவர் கரத்தில் நீலோத்தமை! - இப்படியும் சொல்லி கேட்டுள்ளேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சிவமுருகன் said...
//அவள் கையில் அல்லி! //
அவர் கரத்தை அலங்கரிப்பது நிலோத்தமை மலர்//

திலோத்தமை தெரியும்!
ரம்பா, ஊர்வசி, திலோத்தமை :))

அது என்ன சிவா நிலோத்தமை???
நீலோத்பல மலரைச் (நீல அல்லி) சொல்றீங்களா?

//தேவானையோ தேவலோகத்தில் பிறந்தவளாம் ஆகவே அவர் கரத்தில் நீலோத்தமை! - இப்படியும் சொல்லி கேட்டுள்ளேன்//

பேரு புதுசாத் தேன் இருக்கு!
பாரிஜாதம், மந்தாரம் தான் தேவலோக மலர்கள்-னு சினிமாவில் பார்த்ததோட சரி! :))

ப்ரசன்னா said...

அருமையான விளக்கம். கந்தர் அலங்காரத்தை முழுதும் அறிய தயாரா இருக்கேன்.

வெள்ளி மலை மன்னவன் கொள்ளை அழகு.

தி. ரா. ச.(T.R.C.) said...

உள்ளேன் ஐய்யா!

சிவமுருகன் said...

//அது என்ன சிவா நிலோத்தமை???நீலோத்பல மலரைச் (நீல அல்லி) சொல்றீங்களா?
//

என்ன சார் இப்படி கேட்டுட்டேள்?

நம்ப(சௌ) வீட்டு மாப்பிள்ளை அதான் சார்!!!! அந்த ஆரியங்காவு தர்ம சாஸ்தா கையிலே இந்த மலர்தான் இருக்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ப்ரசன்னா said...
அருமையான விளக்கம். கந்தர் அலங்காரத்தை முழுதும் அறிய தயாரா இருக்கேன்//

நன்றி ப்ரசன்னா!
ஒவ்வொரு செவ்வாயும் கலக்கிடலாம் வாங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
உள்ளேன் ஐய்யா!//

பாத்தீங்களா? என்னை நினைக்க மாட்டேன் (உள்ளேன்)-னு சொல்றீங்க? இப்படிச் சொன்னா அப்பறம் கிண்டி ரேஸ்-ல எனக்கு யாரு காபி போட்டு கொடுக்கறது திராச? :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிவமுருகன் said...
அந்த ஆரியங்காவு தர்ம சாஸ்தா கையிலே இந்த மலர்தான் இருக்கு//

சூப்பர்! அந்த ஆரியங்காவு பதிவில் இத்தனைக்கும் பின்னூட்டி வேற இருக்கேன்! இருந்தும் மறந்து போயிட்டேன் பாத்தீங்களா சிவா?

பேசாம எல்லாப் பதிவரும் அவங்கவங்க பதிவுல இருந்து வாரா வாரம் டெஸ்ட் வைங்கப்பா! :))

குமரன் (Kumaran) said...

நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர். இராகவன் எழுதும் போது தான் முதன்முதலாக இந்தப் பாடலை அறிந்து கொண்டேன். இன்று மீண்டும் உங்கள் தயவால் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அருணன் என்றால் தீ என்றும் பொருள் என்று நினைக்கிறேன். இங்கே தீ உருவில் மலை நிற்பதால் அருணாச்சலம் என்றும் அருணகிரி என்றும் பெயர் வந்தது என்று நினைக்கிறேன்.

விழவுப் பூசை என்றால் என்ன இரவிசங்கர்? நான் போகும் போதெல்லாம் ஆண்டிக் கோலத்தையும் அரசக் கோலத்தையும் தான் பார்த்ததாக நினைவு.

இப்போதெல்லாம் திருமுழுக்கு மூலவருக்கு நடப்பதில்லையே? கரைவது குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர். இராகவன் எழுதும் போது தான் முதன்முதலாக இந்தப் பாடலை அறிந்து கொண்டேன். இன்று மீண்டும் உங்கள் தயவால் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.//

நன்றி குமரன்! இராகவன் சில அலங்காரப் பொறுக்கு மணிகளுக்கு மட்டும் பொருள் தந்தார்! அவர் சுட்டியையும் கொடுத்துள்ளேன் பாருங்க!

//அருணன் என்றால் தீ என்றும் பொருள் என்று நினைக்கிறேன்//

அருணம்=சிவப்பு ன்னு அகரமுதலியில் போட்டிருக்கு!
சிவப்பு நெருப்பாக ஆகி வருவது என்ன ஆகு பெயர் குமரன்? ஞாபகம் இருக்கா? :)

//விழவுப் பூசை என்றால் என்ன இரவிசங்கர்?//

விழவு=விழா
தினம் தினம் திருநாள் என்பதால் விழவுப் பூசை. தோற்றுவித்த போகரை நினைவுபடுத்த சன்னியாசிக் கோலம்!

//நான் போகும் போதெல்லாம் ஆண்டிக் கோலத்தையும் அரசக் கோலத்தையும் தான் பார்த்ததாக நினைவு//

காலையில் தான் அதிக அலங்காரம் குமரன்! ஒரு மணி நேரத்துக்குள்ளாற மாறிக்கிட்டே இருக்கும்!
மாலையில் இராஜலங்காரம் என்பதால் களையாமல் ரொம்ப நேரம் வைத்திருப்பார்கள்!

//இப்போதெல்லாம் திருமுழுக்கு மூலவருக்கு நடப்பதில்லையே? கரைவது குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்//

இல்லையில்லை! இப்பவும் நடந்துக்கிட்டு தான் இருக்கு! கொஞ்சம் குறைச்சிக்கிட்டாங்க அவ்ளோ தான்! விஐபி பாஸ் வாங்கிக்கிட்டு வந்தா உடனே கால நேரம் எல்லாம் பாக்காம, அபிஷேகம் நடத்திக் குளிர்விக்கறாங்க! முருகனை அல்ல! விஐபி-க்களை! :)

தங்க முகுந்தன் said...

வெள்ளிமலை முருகன் கோவில் என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஆலயத்தைத் தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது. மிகவும் அமைதியான மனதுக்கு இதமான ஒரு இன்பத்தை அனுபவித்த பேறு எமக்கு பல தடவை கிடைத்தை நான் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இங்குதான் மலையிலல்ல - பக்கத்தில் விவேகானந்த ஆச்சிரமமும் - இந்து தர்ம வித்யா பீடமும் இயங்கிவருகின்றன. கடந்த 12 வருடங்களாக இங்கு சென்று வருவதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP