Tuesday, January 27, 2009

அலங்காரம்-14/15: சப்பாணி! மயிலு! முருகா!

சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?
அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)

சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)
"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!

முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!



சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்!
சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!
உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)

இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!
பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியாழ்வார்! அவர் தான் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி!

புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,
அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!
சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி!
- என்று பாடுகிறார்!

பின்னாளில் இதை பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!
சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்! பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!
அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!


மேலோட்டமான விளக்கம்: சிவனைத் தன் பாகத்தில் வைத்த உமையன்னை! அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள்! அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...
குழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர்! எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது! அமரர் அச்சம் நீங்கியது!

பிரிச்சி மேயலாமா?
ஒருவரைப் பங்கின் உடையாள் = ஆகா! ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா? இல்லை உமையன்னை ஈசனுக்கு இடம் கொடுத்தாங்களா?
சிவபெருமான் தானே, தனது இடப் பாகத்தை ஈந்து, அர்த்த நாரி, மாதொரு பாகன்-ன்னு பெயர் எல்லாம் பெற்றார்? இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே! சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி? :)

ஒருவரைப் பங்கின் உடையாள் = தன் பாகத்தில் ஒருவரை உடையாள்! ஆணொரு பாகி! :)
மாதொரு பாகனா? ஆணொரு பாகியா? - தீர்ப்பு சொல்லுங்க மக்களே!

குமாரன், உடைமணி சேர் திரு அரை, கிண் கிணி அசை பட = யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக? கையைத் தூக்குங்க! :)

பிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயிறு செய்து போடுவது வழக்கம்! (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்; அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது)
அரை ஞாண் தான் Dividing Line! அதுக்கு மேலே தங்கம் போடலாம்! அதுக்குக் கீழே தங்கம் கூடாது!
அந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க! எதுக்கு? :)

இன்னும் கொஞ்சம் வசதிப்பட்டவுக, உடைமணி-ன்னு செஞ்சி, நிறைய தொங்க விடுவாங்க! முருகன் வசதிப் பட்டவன் தானே! அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல? :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா! :))

குழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்! இன்னும் நடக்க ஆரம்பிக்கலை! அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை! அதான் இடுப்பில் மணி! டங், டங், டங் - டிங், டிங், டிங்! டகு டகு - டிகு டிகு! டங்கு டிங்குகு!

திடுக்கிட்டு அரக்கர் வெருவர = வெருவுதல்? என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல! சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு! :) அதே போல அருணகிரியும் சொல்றாரு! அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க! :)

திக்கு செவிடு பட்டு = எட்டுத் திசையும் காதடைக்கும் படி
எட்டு வெற்பும் = எண் திசை மலைகளும் (என்னென்ன?)
கனக பருவரை குன்றும் = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு?)
அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே = சும்மா அதிருதல்ல? அதனால் அமரர் பயம் தீர்ந்தது!

இப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது! இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது! அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்! முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!


மேலோட்டமான பொருள்:
இழிவான வாழ்க்கை! அதில் கூத்தாடும் ஐம்புலன்கள்! அதில் ஆடி ஆடிக் கலக்கம் அடைந்த அடியேன்! ஆனால் நான் பாச நெஞ்சன்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!
எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க, சப்பாணி கொட்டி-கைத்தட்டி விளையாடும் கந்தக் குழந்தாய்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!

பிரிச்சி மேயலாமா?
இந்தப் பாட்டு தான் முன்பு சொன்ன சப்பாணிப் பருவப் பாடல்!

குப்பாச = கு+பாசம் = இழிவான பாசம்! பாசத்தில் என்னங்க இழிவு?
சுயநலம் போர்த்திய பாசம்! அதான் இழிவு! பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது! ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது! இதான் குப்பாசம்! நப்பாசையால் வந்த குப்பாசம்!

வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் = இந்தப் போலியான பாச நாடகத்தில் அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க!
* கண் = பார்வை = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி! அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம்! நான் அப்படித் தான் இருப்பேன்! நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்! :)
* காது = கேட்டல் = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும்! நான் விரும்புவேன்! அதையே நீயும் பேசணும்!
* நாக்கு = ருசித்தல் = என் ருசியே எனக்கு முக்கியம்! நல்ல ருசியா? தீய ருசியா? - கவலையில்லை! எனக்குப் பிடிச்ச ருசியா! அது போதும்!
* மூக்கு = வாசனை = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன்! அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன்! ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை!
* உடல் = உறவு = உணர்ச்சி = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன்! ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல! தன்னை இழக்கும் கூடல் அல்ல! தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்!

அருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான்! ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை! ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......
கடைசியில் சொந்த அக்காவே, "வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்", என்ற போது தான் அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது! வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்!

கொட்பு அடைந்த = கலக்கம் அடைந்த மனசு! அதிலேயே ஊறி ஊறி இருந்தா, குளம் கலங்கலாத் தானே இருக்கும்?
இப் பாச நெஞ்சினை ஈடேற்றுவாய் = குப்பாசம் இல்லாமல் இப்பாசம், இறைப்பாசம் கொண்டேன்! முருகா! முருகா! முருகா! என்னை ஈடேற்றுவாயே! ஈடேற்றி, வீடேற்றுவாயே!

ஈடு-ன்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்! ஈடேறுதல்-ன்னா என்ன?

இரு நான்கு வெற்பும், அப் பாதியாய் விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய = அட! முன்பு சொன்னதே தான்! எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க!
குழந்தையிடம் பேசுவதால் அதே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்றாரு போல அருணகிரி! :)

சப்பாணி கொட்டிய = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை!
அவன் நடை பழகி, கீழே விழலை! நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம்! ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்!

நம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது! சப்பாணி கொட்டுகிறது!
சப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே!
என்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!



கை ஆறிரண்டு உடை சண்முகனே = ஆறிரு கைகள்! பன்னிரு கையால் பாலனைக் காக்க! சரணம் சரணம் சண்முகா சரணம்!

முருகப் பெருமானின் திருக்காட்சியைச் சொல்லும் போது, இந்தப் பன்னிரு கர வர்ணனையைச் சொல்வதுண்டு! ஆறு முகம்! ஆறிரு தடந் தோள்!
* முருகனுக்கு முகங்கள் ஆறு! = தமிழ் வல்லின, மெல்லின, இடையினங்கள் ஆறு!
* முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு! = தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு!
* முருகனுக்கு கண்கள் பதினெட்டு! = தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு!
* முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல்! = தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ
இப்படி உருவிலேயே தமிழாய் நிற்கிறான் முருகப் பெருமான்! தமிழ்க் கடவுள் முருகவேள் போற்றி போற்றி!

இது மிகவும் நயமான வர்ணனை! எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! இலக்கிய நயத்துக்காகச் சொல்லிய வர்ணனை! அவ்வளவு தான்!
ஆனால் இதை வைத்து, முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்-ன்னு நிலைநாட்டப் பார்ப்பார்கள் சில பேரு! அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும்! ஹா ஹா ஹா! :) இங்கே பாருங்க! :)

இந்த ஆறு தலை, பன்னிரெண்டு கை, பதினெட்டு கண் - இதெல்லாம் தமிழ் மரபுப் படி, எந்தவொரு தமிழ் நிலத் தெய்வத்துக்கும் இல்லை!
அது குறிஞ்சி சேயோன் ஆகட்டும், இல்லை முல்லை மாயோன் ஆகட்டும்! இருவருமே இயற்கைத் தெய்வங்கள்! இயற்கையான உருவம்! இயற்கையான வழிபாடு தான்!

இப்படிப் பல கைகள், பல தலைகள், இவை எல்லாம் பின்னாளில் வடமொழிப் பண்பாடும், தென்தமிழ்ப் பண்பாடும் கலந்த பின், வடவர் கதைகளில் இருந்து தோன்றியது-ன்னு தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் இவர்களே சொல்லுவாங்க!

அப்படி இருக்க, பன்னிரெண்டு கரம், எப்படி பன்னிரண்டு உயிர் எழுத்து ஆகும்? பதினெட்டு கண், எப்படி பதினெட்டு மெய் எழுத்து ஆகும்?
12, 18 எல்லாம் வடவர் கதையில் ஸ்கந்தன் ஆயிற்றே! அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான்? ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான்? ஹா ஹா ஹா! அதாச்சும் தனக்குப் பிடிக்கும் பட்சத்தில் வடமொழிக் கட்டுக் கதைகள் ஓக்கே! ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை! :))

இந்த மாதிரி நம்பர் கணக்கை எல்லாம் வைத்துத் தான் முருகனைத் தமிழ்க் கடவுளாக நிலை நாட்டணும்-ன்னு அவசியமே இல்லை!
தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்!

மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும் - என்று தொல்காப்பியமே முழங்குகிறது!
திருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது! இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!
(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை!)

சப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே!
தமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங்கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!

24 comments:

TamilBloggersUnit said...

நல்ல பதிவு நண்பரே!
invit you to join now in bloggersunit.

Raghav said...

அருமை அண்ணா.. போன பதிவு எப்புடியோ விட்டுப்ப்போச்சு.. அதையும் படிக்கணும்...

என் அப்பன் முருகப்பெருமான் காக்கட்டும்..

கொஞ்ச நாழி கழித்து வர்றேன்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//TamilBloggersUnit said...
நல்ல பதிவு நண்பரே!
invit you to join now in bloggersunit//

நன்றிங்க!
அட, எத்தனை திரட்டியில் தான் சேருவது? :)
தமிழிஷ்-க்கே நண்பர்கள் வற்புறுத்தி வற்புறுத்தி, இப்ப தான் வந்தேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
அருமை அண்ணா.. போன பதிவு எப்புடியோ விட்டுப்ப்போச்சு.. அதையும் படிக்கணும்...//

அப்போ...வரதராஜன் கிட்ட இருந்தீங்க போல! அதனால் முருகன் வராத-ராஜன் ஆயிட்டான்! :)

//என் அப்பன் முருகப்பெருமான் காக்கட்டும்..//
இதை ஜிரா என்னும் ராகவன் சொல்றானா? :)

குமரன் (Kumaran) said...

மின் தமிழ் குழுமத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றது. அருணகிரிநாதர் கௌமார சமயத்தைச் சார்ந்தவர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர் பெரும்பான்மையான பாடல்களில் பெருமாளை முதலில் பாடிவிட்டு பின்னர் அவனது மருகனைப் பாடுகிறார்; அதனால் அவரை வைணவர் என்றும் சொல்லவேண்டும் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. அப்போது 'அப்படிப் பார்த்தால் அவர் ஒரு சாக்தரும் கூட. சைவ இலக்கியங்கள் சிவன் தன் இடப்பாகத்தில் சக்தியை வைத்திருக்கிறார் என்று சொல்லும் போது அருணகிரிநாதரும் அபிராமி பட்டரும் அம்மை தன் வலப்பாகத்தில் சிவனை வைத்திருக்கிறாள் என்று அன்னைக்கு ஏற்றம் தருகிறார்கள்' என்று இன்னொரு கருத்து சொல்லப்பட்டது. இந்தப் பாடலில் 'ஒருவரைப் பங்கில் உடையாள்' என்று சொல்கிறார் அருணகிரியார் - அவர் சாக்தரும் கூட என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. :-)

'ஒருவன்' என்று வைணவ இலக்கியங்களும் சிவபெருமானைப் போற்றுகின்றன என்று நினைக்கிறேன். ஈடு இணையில்லா ஒருவன் என்ற பொருளில். ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - இந்த வரிகளுக்கு ஷைலஜா அக்கா சொன்ன பொருளை நினைத்துப் பார்க்க வேண்டும். திருவாய்மொழியில் ஒரு இடத்தில் 'ஒருவன் என்று ஏந்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ' என்று பராங்குச நாயகி பாடுகிறாள்.

குமரன் (Kumaran) said...

ஹவாய் மகளிர் அணிகிற மாதிரியான புல்லாடை, இலையாடைகளை தங்கள் அரைகளில் பழங்காலத் தமிழ் மகளிர் அணிந்திருந்ததாக சங்க இலக்கியப் பாடல்கள் சில சொல்கின்றன. அந்த இலையாடைகளின் எச்சமோ அரைஞாணில் வெள்ளி இலை செய்து இடுவது?

குமரன் (Kumaran) said...

எண் திசை மலைகள் எவை இரவி? எனக்குத் தெரியாது.

மேரு மலை எங்கே இருக்கு இரவி? எனக்குத் தெரியாது.

ஈடுன்னா என்ன இரவி? ஈடேறுதல்ன்னா என்ன இரவி? எனக்குத் தெரியாது.

குமரன் (Kumaran) said...

ஃ ஆய்தமா ஆயுதமா?

குமரன் (Kumaran) said...

உண்மையாகவா? ஆறுமுகம், பன்னிரு கைகள், பதினெட்டு கண்களைப் பற்றி எந்த ஒரு சங்க இலக்கியமும் பேசவில்லையா? பரிபாடலை எடுத்துப் புரட்டிப் பார்க்க வேண்டும். வேறெங்கு இல்லாவிட்டாலும் பரிபாடலில் இருக்கும் வாய்ப்புகள் மிகுதி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
உண்மையாகவா? ஆறுமுகம், பன்னிரு கைகள், பதினெட்டு கண்களைப் பற்றி எந்த ஒரு சங்க இலக்கியமும் பேசவில்லையா?//

ஹிஹி!
இதுக்கு நான் புனித பிம்பமாய் உண்மையைச் சொல்லணுமா இல்லை...இது பற்றிப் பேச விருப்பமில்லை-ன்னு கழண்டிக்கணுமா குமரன்? :))

//பரிபாடலை எடுத்துப் புரட்டிப் பார்க்க வேண்டும்//

புரட்டுங்க! புரட்டுங்க!
நிச்சயம் இருக்கு! எனக்குத் தெரிஞ்சே ரெண்டு எடுத்துல இருக்கு! :)

//ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை//

அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே
என்று கேசவனாரும் பாடுகிறார்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
பரிபாடல் காலம் என்ன குமரன்?
எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடல் முதன்மையா? இறுதியா?

ஏன் கேட்கறேன்னா...
இரு பண்பாட்டுக் கலப்புகளும் நிகழ்ந்த பின் வரும் திசைச் சொற்கள் எல்லாம் கூட பரிபாடலில் வரத் துவங்கி விட்டது! காட்டு: ஆதி சேடன் பற்றிய குறிப்புகள்!

ஆறு முகம், பன்னிரு கை மட்டுமல்ல...
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

மேலும் வேத நெறி, தழலோம்பும் பார்ப்பார், அவர்கள் வையையில் இறங்காமல், கரையிலேயே நிற்றல்-ன்னு எல்லாம் குறிப்புகள் காட்டப்படுகின்றன சில பரிபாடல்களில்! அதனால் இவற்றைக் எவ்விதக் காய்தல் உவத்தல் இன்றி, நுனித்துணர வேணும்! இலக்கிய ஆர்வமும், வரலாற்று ஆர்வமும் துணை செய்யட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மின் தமிழ் குழுமத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றது.//

ஆமாம் குமரனும்! நானும் வாசித்தேன்! நீங்களும் மின்னஞ்சலில் வேற அனுப்பி இருந்தீர்களே! இராம.கி ஐயாவின் பதிவுகள், சில மின்தமிழ் ஆக்கங்கள் - இவற்றைப் பெரும்பாலும் தவற விடுவதில்லை!

//அருணகிரிநாதர் கௌமார சமயத்தைச் சார்ந்தவர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர் பெரும்பான்மையான பாடல்களில் பெருமாளை முதலில் பாடிவிட்டு பின்னர் அவனது மருகனைப் பாடுகிறார்; அதனால் அவரை வைணவர் என்றும் சொல்லவேண்டும் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது.//

ஹிஹி! இதெல்லாம் டூ மச்! :)

//அப்போது 'அப்படிப் பார்த்தால் அவர் ஒரு சாக்தரும் கூட.//

இதை வேணும்னா ஒத்துக்கறேன்! :)

//அருணகிரிநாதரும் அபிராமி பட்டரும் அம்மை தன் வலப்பாகத்தில் சிவனை வைத்திருக்கிறாள் என்று அன்னைக்கு ஏற்றம் தருகிறார்கள்' என்று இன்னொரு கருத்து சொல்லப்பட்டது//

100%! என் நண்பனும் ஒப்புக்கிடுவான்! :)

//இந்தப் பாடலில் 'ஒருவரைப் பங்கில் உடையாள்' என்று சொல்கிறார் அருணகிரியார் - அவர் சாக்தரும் கூட என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. :-)//

இதைப் பதிவிடும் போது, மின்தமிழில் ஹரியண்ணா சொன்னது தான் எனக்கும் நினைவுக்கு வந்தது! :)

//'ஒருவன்' என்று வைணவ இலக்கியங்களும் சிவபெருமானைப் போற்றுகின்றன என்று நினைக்கிறேன். ஈடு இணையில்லா ஒருவன் என்ற பொருளில்//

உண்மை!
தன்னிகரில்லா "குணங்களைக் கொண்டவன்" என்ற முறையில் இந்த "ஒருவன்"!
இதைச் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் - இருவருக்குமே வைணவ இலக்கியங்கள் காட்டுகின்றன! பராங்குச நாயகி பாடலும் இதற்கு ஒரு காட்டு!

ஊழி முதல்வனாய் நின்ற "ஒருவனை" என்கிறது திருவெம்பாவை!

//ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - இந்த வரிகளுக்கு ஷைலஜா அக்கா சொன்ன பொருளை நினைத்துப் பார்க்க வேண்டும்//

ஆமாம்!
அப்போ இரண்டு "ஒருத்திகள்" இருக்க முடியும் அல்லவா?
அதே போல் இரண்டு "ஒருவன்களும்" இருக்க முடியும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஹவாய் மகளிர் அணிகிற மாதிரியான புல்லாடை, இலையாடைகளை தங்கள் அரைகளில் பழங்காலத் தமிழ் மகளிர் அணிந்திருந்ததாக சங்க இலக்கியப் பாடல்கள் சில சொல்கின்றன.//

ஆமாம் குமரன்! இது பற்றி ஒரு சின்ன தோற்றுவாய்ப் பதிவு இடுங்களேன்! சங்க கால உடைகள்! வேலன்டைன்ஸ் டே வேறு வரப் போகுது! எங்கே நீங்க போன ஆண்டே போடுவதாய்ச் சொன்ன தமிழ் வேலன்-டைன் நாள்? :)

//அந்த இலையாடைகளின் எச்சமோ அரைஞாணில் வெள்ளி இலை செய்து இடுவது?//

இருக்கலாம்!
ஆலிலைக் குழந்தையின் நினைவாயும் இருக்கலாம்!
அரை ஞாண் கயிறு-ன்னாலே தனி ஆராய்ச்சி தான்! ராகவனைப் பண்ணச் சொல்றேன்! :)

தஞ்சைப் பெரிய கோயில் உள்ளாலை ஓவியங்கள்...அதில் கூட இப்படியான உடைகள் உன்டு குமரன்! பார்த்து வியந்து போயிருக்கேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எண் திசை மலைகள் எவை இரவி? எனக்குத் தெரியாது.
மேரு மலை எங்கே இருக்கு இரவி? எனக்குத் தெரியாது.
ஈடுன்னா என்ன இரவி? ஈடேறுதல்ன்னா என்ன இரவி? எனக்குத் தெரியாது.//

ஃ ஆய்தமா ஆயுதமா குமரன்?
எனக்குத் தெரியாது :)

Kavinaya said...

அன்னைதான் அரனுக்கு இடமளித்தாள் (இது அந்த 'இடம்' :). இதில் சந்தேகமென்ன? :)

//குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட//

அழகு, வெகு அழகு. முருகக் குழந்தை படம் அவ்வளவா பார்த்ததில்லை. ச்வீட்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
அன்னைதான் அரனுக்கு இடமளித்தாள் (இது அந்த 'இடம்' :). இதில் சந்தேகமென்ன? :)//

ஹா ஹா ஹா
கவிக்கா சொன்னா கண்டிப்பா கரெட்டாத் தான் இருக்கும்! :)

//முருகக் குழந்தை படம் அவ்வளவா பார்த்ததில்லை. ச்வீட்//

அலோ...
கண்ணக் குழந்தையும் ஸ்வீட்-ன்னு சொல்லுங்க! :))

sri said...

Very interesting, I always think Murugan and Kannan are the same. Thanks for wonderful post.. and just realised your blog union friend Dev is my collage met ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Srivats said...
Very interesting, I always think Murugan and Kannan are the same//

ha ha ha! both have a lot of connexions and best pals from kurinji & mullai :)

//Thanks for wonderful post.. and just realised your blog union friend Dev is my collage met ;)//

Oh...Dev annan unga college thaana? ellarum oru group-aa thaan kilambi irukeenga pola :)
I will ask on him gtalk tonite! :)

Mey said...

It is the boundless grace of Lord Muruga that I happenned to stumble upon your blog when I was searching for Anju Mkukam Thonril. I find it a great blessing to read your blog on Lord Muruga. But it looks like you have stopped writing in this Blog. I would like to read your writings on Lord Muruga. kindly let me know your new blog and how I can subscribe so that I get notification whever you write.

Vetrivel MuruganukkU Arohara

WithBestRegards
Meyyappan S

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//It is the boundless grace of Lord Muruga that I happenned to stumble upon your blog when I was searching for Anju Mkukam Thonril//

அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும் பாட்டு இங்கிட்டு இருக்குங்க:
http://madhavipanthal.blogspot.com/2009/08/blog-post.html

//But it looks like you have stopped writing in this Blog. I would like to read your writings on Lord Muruga. kindly let me know your new blog//

:)
எழுதறது இப்பல்லாம் ரொம்ப இல்லீங்க மெய்யப்பன்!
முருகனருள் என்னும் வலைப்பூவில், பாடல்கள் மட்டும் குழுவினராகச் சேர்ந்து இடுவோம்! அதற்கான சுட்டி..
http://muruganarul.blogspot.com

Kavinaya said...

ஏன் எழுதறதில்லை இப்போ? அதான் எனக்கும் தெரியணும்!! :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...//

ஆகா! எப்படிக்கா இப்படி படக்-ன்னு என்னை ட்ரேஸ் பண்றீங்க? :)

//ஏன் எழுதறதில்லை இப்போ? அதான் எனக்கும் தெரியணும்!! :(//

அட, இராகவன் கூடத் தான் எழுதறதில்லை! அவனை கேட்க மாட்டீங்களே! அவனுக்கும் சேர்த்து என்னையே கேட்பீங்களே? :)))

அதான் முருகனருள்/கண்ணன் பாட்டுல அப்பப்போ பாட்டு போடுறேனே-க்கா! என்ன உங்களை மாதிரி சொந்தமா பாட்டெழுத வராது! :)

Kavinaya said...

//அதான் முருகனருள்/கண்ணன் பாட்டுல அப்பப்போ பாட்டு போடுறேனே-க்கா! என்ன உங்களை மாதிரி சொந்தமா பாட்டெழுத வராது! :) //

இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்! உங்களுக்கு பாட்டு எழுத வரும்; அதுக்கும் மேலே என்னென்ன இருக்கோ எல்லாமே வரும்னு எனக்கு தெரியுமே!

தயை செய்து நீங்க கந்தர் அலங்காரத்தையாவது தொடரணும். ப்ளீஸ்!

Prasad said...

Dear KRS, I request you to continue writing & explaining the "Kanthar Alangaram". Arunagiri Nathar poems are sweet and your explanations are great. :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP