Monday, August 25, 2008

அலங்காரம்-03/04: கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!

"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - எது உண்மை?

பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்! சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!

ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"

முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!



இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)


(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?

பாசங்களை அறுத்து, மீண்டும் பிறக்க ஒட்டாதவன் அயில் வேலவன்!
அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?
தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!
அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? ஹா ஹா ஹா!


கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் குமரனின் இந்த இடுகையையும் ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்! பஜ கோவிந்தம் பாடலின் ஆரம்ப வரிகளில், இதே கருத்தை மிளிர்விக்கிறார் ஆதிசங்கரர்!
***அயில் வேல்-னு கந்த சஷ்டிக் கவசத்தில் எங்கு வரும்? அதையும் சொல்லுங்க பார்ப்போம்!

அழித்துப் பிறக்க ஒட்டா = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!
பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!


பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்! அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்! அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!
எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!

அன்பால், எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! = பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது மட்டும் தூங்கிட்டான் போல-ன்னு சில சமயம் நகைச்சு வைப்போம் அல்லவா? - அந்த எழுத்துப் பிழை எப்படி அறும்? அன்பால் மட்டுமே அறும்! அன்பைப் பிழையின்றிக் கற்றால், பிழை போகும்!
அட, அன்பை எப்படிங்க கற்க முடியும்? அது தானா வரணும்! இது கூடவாத் தெரியாது அருணகிருக்கு? கற்கின்றிலீர்-ன்னு சொல்றாரே?

உம்...நல்ல கேள்வி தான்! அருணகிரி சும்மா இலக்கணமா, எகனை மொகனையாச் சொல்லிட்டாரு போல! :)
கல்வி எப்படி வரும்? கல்வியே, வா-ன்னா வந்துருமா? மெனக்கெடணும்! நாம விரும்பிக் கற்றால் தான், கல்வி வரும் இல்லையா? கல்வி நல்ல விஷயம் தானே? அது தானே வராதா-ன்னா, வராது! நாம தான் அதைக் கற்கணும்!

அதே போல அன்பும் நாம கொடுத்தாத் தான் வரும்! தானா வராது! அன்பைக் கொடுக்கக் "கற்றுக்" கொள்ளணும்! அதான் அன்பைக் கற்கின்றிலீர்-னு சொல்றாரு அருணகிரி! இப்ப ஓக்கேவா? :)


இப்படி, அயில் வேலவன் மேல் வைக்கும் அன்பால், தலை எழுத்துப் பிழைகள் அறும்! கால்பட்டு அழிந்தது, இங்கென் தலைமேல், அயன் கையெழுத்தே, என்று இன்னொரு பாட்டிலும் சொல்லுவாரு அருணகிரி! அந்தக் கந்தர் அலங்காரம் பின்னால் வரும்! ***இப்போதைக்கு அந்தப் பாட்டை மட்டும் பின்னூட்டதில் யாராச்சும் சொல்லுங்க!
எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால் =
வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு? கூற்று=உறுதியாகக் கூறுதல்! கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்! பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே? = அவன் கழுத்தில் சுருக்கிடும் போது, "மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி! நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்! நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா? அப்போது வாய் வருமா?
ஹா ஹா ஹா! எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!

அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...
அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!
அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!



அலங்காரம்-04!


தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!


தேரணி இட்டுப் புரம் எரித்தான் = எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!
மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு = அவன் மகன் குமரவேள் கையிலே வேல்! அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?

அணுவாகி = அணுவைப் பிளப்பது போல்; கிரௌஞ்சம் குலைந்து = கிரௌஞ்ச மலையைக் குலைத்தது! அது தாராகாசுரன் என்னும் மாய மலை!
அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!

சூர் பேரணி கெட்டது = சூரனின் பேரணி கெட்டது! தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே = இந்திர லோகம் பிழைத்ததுவே!
சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்! யானை முகத்தவன்! அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது! போரில் அவன் தான் முதல் பலி! அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்! தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பார்கள் ஆழ்வார்கள்! அப்படிச் சொல்லி வைத்தால், இயல்பாகவே இறைவனின் நாமம், நாவில் ஒட்டிக் கொள்ளும்! செயற்கையாக வலிந்து வரவழைத்துக் கொள்ளத் தேவை இருக்காது!
அதனால் தான் அருணகிரியார், கடைசிக் காலத்திலா இதையெல்லாம் கற்கப் போகிறீர்கள்-ன்னு கேக்குறாரு! எல்லாம் சரி தான்!

ஆனால் உயிர் பிரியும் வேளையில் இறைவன் நினைப்பு வரவேண்டுமா என்ன? அந்திம காலத்தில் பகவத் நாம ஸ்மரணம் கூடத் தேவையில்லை என்பது ஒரு சித்தாந்தம்! அதை இன்னொரு நாள் மாதவிப் பந்தலில் பார்ப்போம்! அலங்காரம் அடுத்து செவ்வாய் தொடரும்!

31 comments:

Kavinaya said...

கற்ற கல்வியெல்லாம் கடைவழிக்கு வாராது;
நித்தம் அவன் பெயரை நிறுத்தாமல் சொல்லி வைத்தால்
சற்றும் கவலையில்லை
கூற்றுவனே வந்தாலும்.

பதிவு மிகச் சுவை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
கற்ற கல்வியெல்லாம் கடைவழிக்கு வாராது;
நித்தம் அவன் பெயரை நிறுத்தாமல் சொல்லி வைத்தால்
சற்றும் கவலையில்லை
கூற்றுவனே வந்தாலும்//

இப்பல்லாம் பின்னூட்டத்திலேயே கவிதை வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க-க்கா :)

Kavinaya said...

//இப்பல்லாம் பின்னூட்டத்திலேயே கவிதை வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க-க்கா :)//

கவிதையை தூண்டற மாதிரி அவ்ளோ சூப்பரா எழுதறீங்கன்னு அர்த்தம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
கவிதையை தூண்டற மாதிரி அவ்ளோ சூப்பரா எழுதறீங்கன்னு அர்த்தம்! :)//

:)
மீ தி மவுன விரதம்! :)

Raghav said...

எளிமையா, இனிமையா, அருமையா சொல்றீங்க..

//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)
//

ற-கரம் 11 முறை தானே வந்துள்ளது ?? ரெண்டை விட்டுட்டேனா?? இல்லை இங்க எத்தன பேர் கணக்கில் புலின்னு செக் பண்றீங்களா??

Raghav said...

//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)//

இதற்கு ஏதாவது சிறப்பு உண்டா?

//மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!//

இதே விளக்கம் வைணவர்கள் போடும் திருமண் காப்பிற்கும் பொருந்துமா? அல்லது இவையெல்லாம் திருச்சின்னங்களா?

Raghav said...

//அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி!//

கவிதை.. கவிதை..

Raghav said...

////அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...//

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?

Raghav said...

//கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு! //

கும்மி: சுருக்கு! இருக்கு..முறுக்கு எங்கே ??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ற-கரம் 11 முறை தானே வந்துள்ளது ?? ரெண்டை விட்டுட்டேனா?? இல்லை இங்க எத்தன பேர் கணக்கில் புலின்னு செக் பண்றீங்களா??//

ஹா ஹா ஹா
இப்போ எண்ணிப் பாருங்க ராகவ்!
புலி எல்லாம் சரியா எண்ணும்! நீங்க எப்படி? :)

கழுத்திற் சுருக்கிட்டு = கழுத்தில் சுருக்கிட்டு என்று பதம் பிரித்தால் ஒரு றகரம் மிஸ் ஆவும், மிஸஸ் ஆவும் தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)//

இதற்கு ஏதாவது சிறப்பு உண்டா?//

ஜிரா வாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
//மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!//

இதே விளக்கம் வைணவர்கள் போடும் திருமண் காப்பிற்கும் பொருந்துமா? அல்லது இவையெல்லாம் திருச்சின்னங்களா?//

திருநீற்றுக்குப் பொருள் பசு-பதி-பாசம்!

திருமண் காப்புக்கு அதுவன்று! அது இறைவனின் திருப்பாதங்கள்! உருவ அமைப்பும் அப்படித் தான் இருக்கும்!!
திருவடிகளைச் சிந்தையில் சதாசர்வ காலமும் தாங்கிக் கொள்கிறேன் என்று இட்டுக் கொள்வதே திருமண் காப்பு!

சின்னங்கள் என்றால் பொருள் இல்லை என்று ஆகி விடாது! ஒன்றைக் குறிக்க வந்தது தானே சின்னம்? சாலைப் போக்குவரத்துச் சின்னங்களே அப்படி என்றால், இது போன்ற சின்னங்களுக்கும் பொருள் நிச்சயம் உண்டு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//raghav said...
//அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...//

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?//

ஹா ஹா ஹா
ஜிரா, வாங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு! //

கும்மி: சுருக்கு! இருக்கு..முறுக்கு எங்கே ??//

சுருக்கு போட்டு இழுத்தால்
முறுக்கி-க்கும் :))

Raghav said...

//ஹா ஹா ஹா
இப்போ எண்ணிப் பாருங்க ராகவ்!
புலி எல்லாம் சரியா எண்ணும்! நீங்க எப்படி? :)
//

முதல்ல கணக்கு பண்ணும்போது 11 இருந்தது. இப்போ 13 இருக்கு?? ம்ம் புலி ஆகனும்னு நினைச்சேன்.. என்னைய பலி(கடா) ஆக்கிட்டீங்களே

Raghav said...

//திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளா?//

ஹா ஹா ஹா
ஜிரா, வாங்க! :)//

ஜூப்பர், ஜிரா வந்து விளக்கம் சொல்லுங்க.. மீ அண்ட் வைத்தமாநிதி பெருமாள் வெயிட்டிங்..

Raghav said...
This comment has been removed by the author.
Raghav said...

//ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!//

எவ்வாறு??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!//

எவ்வாறு??//

என்ன ராகவ்? இன்னிக்கி இங்க காற்றழுத்த மண்டலமா? :)

எவ்வாறு? = எந்த ஆறு? = எந்த வழி?
சொல்லுங்களேன்!

வேணும்னா...
என்சாயும் மாடலாம் = நான் சொல்லுறேன்!
எம்பெருமானையும் நாடலாம் = நீங்க சொல்லுங்க!

Raghav said...

//திருவடிகளைச் சிந்தையில் சதாசர்வ காலமும் தாங்கிக் கொள்கிறேன் என்று இட்டுக் கொள்வதே திருமண் காப்பு!//

எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதல்ல கணக்கு பண்ணும்போது 11 இருந்தது. இப்போ 13 இருக்கு?? ம்ம் புலி ஆகனும்னு நினைச்சேன்.. என்னைய பலி(கடா) ஆக்கிட்டீங்களே//

இனி வரலாற்றில் நீங்க புலி-கடா ராகவ் என்று அழைக்கப்படுவீர்களாக! :)

அதான் சொன்னேனே!
//கழுத்திற் சுருக்கிட்டு = கழுத்தில் சுருக்கிட்டு என்று பதம் பிரித்தால் ஒரு றகரம் மிஸ் ஆவும்//-ன்னு!
அதுக்குள்ளாற எண்ணப் போயிட்டீங்க! புலி-கடா ஆயிட்டீங்க! :)

Raghav said...

//இனி வரலாற்றில் நீங்க புலி-கடா ராகவ் என்று அழைக்கப்படுவீர்களாக! :)//

ஆஹா.. எனக்கு கிடைச்சிருக்குற முதல் பட்டம்.. ரெம்ப சந்தோஷம்.

//என்ன ராகவ்? இன்னிக்கி இங்க காற்றழுத்த மண்டலமா? :)
//

இங்கே என்றில்லை.. எங்கெல்லாம் கே.ஆர்.எஸ் பதிவு உண்டோ அங்கெல்லாம் தென்றல் காற்றழுத்த மண்டலம் தான்..

//அதுக்குள்ளாற எண்ணப் போயிட்டீங்க! புலி-கடா ஆயிட்டீங்க! :)//

அப்புடிப்பாத்தாலும் 12 வந்துருக்கனுமே.. 11 தானே முதல்ல வந்தது..

ப்ரசன்னா said...

அருமை அருமை.

//இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!
//

சூப்பரு. வாழ்நாள் முழுவதும் பாவங்களைப் பண்ணிட்டு சாகும்போது சங்கரா சங்கரான்னா போதுமா?

அயில்வேல் இங்க வருது

"
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க"

:-)

குமரன் (Kumaran) said...

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

குமரன் (Kumaran) said...

//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//

ஆமா ஏன்?

Sridhar V said...

அண்ணா,

செவ்வாய்கிழமை பதிவு போட மறந்துட்டிங்களா? ஊட்ல தங்கமணி கேக்க சொன்னாங்க. தொடர்ந்து படிக்கிறாங்களாமாம்.

உடம்பு இப்ப தேவலையா? காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ப்ரசன்னா said...
அருமை அருமை.
சூப்பரு//

நன்றி பிரசன்னா!

//அயில்வேல் இங்க வருது
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க//

சூப்பர்! இடம் சுட்டிப் பொருள் விளக்கம்-கலக்கல்ஸ் ஆஃப் பிரசன்னா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே//

சூப்பரு!
நன்றி குமரன் பாட்டை எடுத்து விட்டதற்கு! ராகவனுக்கும் பிடிச்ச பாடல் வரிகள் இவை!

மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலை!

அவன் கால் பட்டு அழிந்தது
இங்கு என் தலை மேல்
அயன் கையெழுத்தே!

அடா, அடா, அடா! என்னாமா லயிச்சி சொல்லி இருக்காரு அருணகிரி!

கை எழுத்தைக் கால் எழுத்து அழித்து விட்டதாம்! அதுவும் எப்படி?
அயன் கை எழுத்தும் தலை மேல் படிகிறது!
அவன் கால் எழுத்தும் தலை மேல் படிகிறது!
இப்படி இரண்டும் கூடும் இடம் தலை! அதான் பாட்டிலும் தலையை நடுவில் வச்சிருக்காரு!

எம்பெருமானின் "அடிப்"படையே அடிப்படை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ், குமரன்
//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//

அலோ
இது கந்தர் அலங்காரம்! கார்வண்ணன் அலங்காரம்-ன்னு நினைச்சீங்களா? இருங்க ராகவன் வந்து தட்டினாத் தான் சரிபடுவீங்க! :)

இந்தக் கேள்வியைக் கூடல் பதிவுக்கு pass செய்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்பெருமான் திருவடிகளை நாம் தாங்கிக் கொள்வது சரி, பின்பு ஏன் அதையே நாம் பெருமாளுக்கும் இட வேண்டும்?//

திருமண் காப்பு ஏன்-னு ஒருத்தர் விளக்கிட்டு இருந்தாரு!
அப்போ ஒரு எட்டு வயசுக் குழந்தை இதே கேள்வியைத் தான் கேட்டுச்சு! அவர் அப்படியே திக்பிரமை பிடிச்சிப் போயி நின்னுட்டாரு! :)

அப்பறம் அந்தச் சின்னப் பொண்ணுக்கு விளையாட்டு காட்டி, விளக்கத்தைச் சொல்லி வச்சேன்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sridhar Narayanan said...
அண்ணா,
செவ்வாய்கிழமை பதிவு போட மறந்துட்டிங்களா? ஊட்ல தங்கமணி கேக்க சொன்னாங்க. தொடர்ந்து படிக்கிறாங்களாமாம்.//

ஆகா...
இப்படி எல்லாம் வூட்ல, அண்ணி கிட்டக்க என்னைய போட்டூக் கொடுக்கறீங்களா?

//உடம்பு இப்ப தேவலையா? காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சா?//

இப்போ ஓக்கே அண்ணாச்சி!
காய்ச்சலால் தான் செவ்வாய்க் கிழமைப் பதிவு தள்ளிப் போச்சு!

அண்ணியைக் கோச்சிக்க வேணாம்-னு சொன்னேன்-னு சொல்லுங்க! சூடா ஒரு கப் மிளகு ரசம் கேட்டு வாங்கிக் குடிச்சிக்கறேன்! :)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP